Skip to content

பகுதி 5

மாயமந்திரமும் பில்லிசூனியமும்—உண்மை என்ன?

மாயமந்திரமும் பில்லிசூனியமும்—உண்மை என்ன?

1. மந்திரமும் பில்லிசூனியமும் எந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறது?

 “ஆப்பிரிக்காவில் மந்திரவாதிகள் இருக்கிறார்களா இல்லையா?” என்ற கேள்வியைக் கேட்பது அர்த்தம் இல்லாதது என்றும் “ஆப்பிரிக்காவில் இருக்கிற பெரும்பாலான மக்கள் பில்லிசூனியத்தை நம்புகிறார்கள்” என்றும் ஆப்பிரிக்கன் ட்ரெடிஷனல் ரிலிஜியன் என்ற புத்தகம் சொல்கிறது. படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி இவற்றை நம்புகிறார்கள். இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும்கூட இவற்றை நம்புகிறார்கள்.

2. நிறைய பேர் என்ன நம்புகிறார்கள்?

2 மாய சக்தி என்ற ஒன்று இருப்பதாக ஆப்பிரிக்காவில் இருக்கிற நிறைய பேர் நம்புகிறார்கள். கடவுளால் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இறந்தவர்களுடைய ஆவிகள்கூட அதைப் பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். நல்லது செய்வதற்கும் (வையிட் மேஜிக்) கெட்டது செய்வதற்கும் (பிளாக் மேஜிக்) மனிதர்களால்கூட இந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியும் என்று சிலர் நம்புகிறார்கள்.

3. பிளாக் மேஜிக், அதாவது செய்வினை என்றால் என்ன? அதை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள்?

3 எதிரிகளைத் தாக்குவதற்காக பிளாக் மேஜிக், அதாவது செய்வினை செய்கிறார்கள். இதைச் செய்கிறவர்களால் வவ்வால்கள், பறவைகள், பூச்சிகள் மற்றும் சில மிருகங்களைக்கூட ஏவிவிட்டு மற்றவர்களைத் தாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. சண்டைகள், மலட்டுத்தன்மை, வியாதி, மரணம்கூட ஏற்படுவதற்கு பிளாக் மேஜிக்தான் காரணம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.

4. சூனியக்காரிகளைப் பற்றி நிறைய பேர் என்ன நம்புகிறார்கள்? ஒரு காலத்தில் சூனியக்காரிகளாக இருந்தவர்கள் என்ன கதைகளைச் சொல்லி இருக்கிறார்கள்?

4 இதேபோல்தான் பில்லிசூனியமும்! சூனியக்காரிகள், ராத்திரியில் மற்ற சூனியக்காரிகளைச் சந்திக்க அல்லது எதிரிகளைக் கொலை செய்ய தங்களுடைய உடலை விட்டு பறந்து போவதாக நம்பப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. ஒரு காலத்தில் சூனியக்காரிகளாக இருந்தவர்கள் சில கதைகளைச் சொல்லி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, முன்பு சூனியக்காரிகளாக இருந்தவர்கள் (பெரும்பாலும் டீனேஜ் பெண்கள்) சொன்ன கருத்துகள் ஒரு ஆப்பிரிக்க பத்திரிகையில் வெளியானது. அது இப்படிச் சொன்னது: “நான் விபத்துகளை ஏற்படுத்தி 150 பேரைக் கொலை செய்திருக்கிறேன்.“ ”ஐந்து பிள்ளைகளின் இரத்தத்தை உறிஞ்சி அவர்களைக் கொலை செய்திருக்கிறேன்.“ ”என்னைக் காதலித்த மூன்று பேர் என்னை விட்டுவிட்டு போய்விட்டார்கள்; அதனால், அவர்கள் மூன்று பேரையும் நான் தீர்த்துக்கட்டி விட்டேன்.”

5. வையிட் மேஜிக் என்றால் என்ன? அதில் என்னவெல்லாம் செய்கிறார்கள்?

5 வையிட் மேஜிக் என்பது தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால், மந்திரித்த மோதிரங்களையும் காப்புகளையும் போட்டுக்கொள்கிறார்கள். மந்திர சக்தி உள்ள சில பானங்களைக் குடிக்கிறார்கள் அல்லது உடலில் பூசிக்கொள்கிறார்கள். அதோடு, சில பொருள்கள் தங்களைத் தீய சக்தியிடமிருந்து காப்பாற்றும் என்று நம்பி அதை மண்ணுக்கடியில் புதைத்து வைக்கிறார்கள் அல்லது வீட்டிற்குள் ஒளித்து வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, குரான் மற்றும் பைபிளில் இருக்கும் சில வார்த்தைகளைக் கொண்ட தாயத்துக்களைகூட பயன்படுத்துகிறார்கள்.

பொய்களும் ஏமாற்று வேலைகளும்

6. முற்காலத்தில் சாத்தானும் அவனுடைய பேய்களும் என்ன செய்திருக்கிறார்கள்? அவர்களுக்கு எந்தளவு சக்தி இருக்கிறது?

6 சாத்தானும் அவனுடைய பேய்களும் மனிதர்களுடைய ஆபத்தான எதிரிகள் என்பது உண்மைதான். மனிதர்களுடைய மனதையும் வாழ்க்கையையும் அவர்களால் பாதிக்க முடியும். முற்காலத்தில், மனிதர்களுக்குள்ளேயும் மிருகங்களுக்குள்ளேயும் புகுந்து அவர்களைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். (மத்தேயு 12:43-45) அதனால், அவர்களுக்கு இருக்கிற சக்தியை நாம் கம்மியாக எடை போட்டுவிடக்கூடாது. அதேசமயத்தில், அவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நினைக்க கூடாது.

7. நாம் என்ன நம்ப வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான்? அதற்காக அவன் என்ன செய்கிறான் என்பதை ஒரு உதாரணத்தோடு விளக்குங்கள்.

7 சாத்தான் ஏமாற்றுவதில் கில்லாடி! அவனுக்குப் பயங்கர சக்தி இருப்பதாக மக்கள் நம்ப வேண்டும் என்று அவன் நினைக்கிறான். அதனால், அவன் மக்களை ஏமாற்றுகிறான். இந்த உதாரணத்தை யோசித்துப்பாருங்கள்: சமீபத்தில், ஒரு ஆப்பிரிக்க நாட்டில் போர் நடந்தது. எதிரிகளைப் பயமுறுத்துவதற்காக, சத்தத்தை எழுப்பும் கருவிகளைப் போர்வீரர்கள் பயன்படுத்தினார்கள். எதிரிகளைத் தாக்குவதற்கு முன்பு, பெரிய பெரிய பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்து குண்டு மழை பொழிவதைப் போன்ற சத்தத்தை எழுப்பி இருக்கிறார்கள். அவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதாக நினைத்து எதிரிகள் பயந்து போக வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்கள். அதையேதான் சாத்தானும் செய்கிறான். அவனிடம் பயங்கரமான சக்தி இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக பூச்சாண்டி காட்டுகிறான். யெகோவாவின் விருப்பத்தைச் செய்யாமல் அவனுடைய இஷ்டப்படி மக்கள் நடக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். மக்களை ஏமாற்றுவதற்காக சாத்தான் பரப்பும் மூன்று பொய்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

8. சாத்தான் பரப்பும் ஒரு பொய் என்ன?

8 சாத்தான் பரப்பும் முதல் பொய்: கெட்ட விஷயங்கள் எதேச்சையாக நடக்காது. ஒரு கெட்டது நடக்கிறது என்றால் அதை யாரோ ஒருவர் நேரடியாக செய்ய வேண்டும். அல்லது, மாய சக்திகளை ஏவிவிட்டு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு குழந்தை மலேரியாவால் இறந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். மலேரியா, கொசுக்களால் பரவுகிறது என்பது அந்தக் குழந்தையின் அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், மலேரியா கொசுவை யாரோ ஒருவர் பில்லிசூனியம் வைத்து ஏவிவிட்டு, தன் குழந்தையைக் கடிக்க வைத்திருக்கிறார் என்றும் அந்த அம்மா நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சிலசமயத்தில் கெட்ட விஷயங்கள் எதேச்சையாக நடக்கும்

9. எல்லா பிரச்சினைகளுக்கும் சாத்தான்தான் காரணம் என்று ஏன் சொல்ல முடியாது?

9 சாத்தானால் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக, இன்று நமக்கு வரும் எல்லா பிரச்சினைகளுக்கும் அவன்தான் காரணம் என்று சொல்ல முடியாது. பைபிள் சொல்வதைக் கவனியுங்கள்: “வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை, ஞானமுள்ளவர்களிடம் எல்லா சமயத்திலும் உணவு இருப்பதில்லை, புத்திசாலிகளிடம் எல்லா சமயத்திலும் சொத்து குவிந்திருப்பதில்லை, அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை. ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.” (பிரசங்கி 9:11) ஒரு ஓட்டப்பந்தய வீரர் மற்றவர்களைவிட ரொம்பவே வேகமாக ஓடுகிறவராக இருக்கலாம். ஆனால், ஒரு பந்தயத்தில் அவரால் ஜெயிக்க முடியாமல் போய்விடலாம். ‘எதிர்பாராத சம்பவத்தால்’ அவர் தோற்றுப்போய் விடலாம். ஒருவேளை, ஓடும்போது தடுமாறி அவர் கீழே விழுந்திருக்கலாம். அல்லது, ஓட ஓட அவருடைய கால் சுளுக்கியிருக்கலாம். யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். இதற்கு சாத்தான்தான் காரணம் என்றோ யாரோ பில்லிசூனியம் வைத்து அவரை ஓட விடாமல் செய்துவிட்டார்கள் என்றோ நாம் நினைக்க முடியாது. இவையெல்லாம் எதேச்சையாக நடக்கிற விஷயங்கள்.

10. சூனியக்காரிகளைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது? அது பொய் என்று நமக்கு எப்படித் தெரியும்?

10 சாத்தான் பரப்பும் இரண்டாவது பொய்: சூனியக்காரிகள் ராத்திரியில் தங்களுடைய உடலை விட்டுவிட்டு ஆவியாகப் போய் மற்ற சூனியக்காரிகளைச் சந்திப்பதற்காகவும் எதிரிகளை கொல்வதற்காகவும் போகிறார்கள். இது உண்மையாக இருக்குமா? இதை யோசித்துப்பாருங்கள்: ‘சூனியக்காரிகளால் தங்களுடைய உடலை விட்டுவிட்டு போக முடியுமா?’ நாம் ஏற்கெனவே பார்த்தது போல் ஆத்துமா என்பது ஒருவருடைய உடலில் இருந்து தனியாகப் பிரிந்து போகும் ஒரு விஷயம் கிடையாது. அந்த நபரே ஆத்துமாதான்!

சூனியக்காரிகளால் அவர்களுடைய உடலை விட்டுவிட்டு போக முடியாது

11. சூனியக்காரிகளால் தங்களுடைய உடலை விட்டுப் போக முடியாது என்று நமக்கு எப்படித் தெரியும்? இதை நீங்கள் நம்புகிறீர்களா?

11 ஆத்துமாவோ ஆவியோ ஒரு உடலை விட்டுப் போகவும் முடியாது, நல்லது-கெட்டதை செய்யவும் முடியாது. அப்படியென்றால், சூனியக்காரிகளாலும் தங்களுடைய உடலை விட்டுப் போக முடியாது. அவர்கள் செய்ததாக சொல்லும் விஷயங்களெல்லாம், உண்மையிலேயே அவர்கள் செய்தது கிடையாது.

12. செய்யாத ஒரு விஷயத்தைச் செய்தது போல் மக்களை சாத்தான் எப்படி நம்ப வைக்கிறான்?

12 அப்படியென்றால், சூனியக்காரிகள் சொன்ன விஷயங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? மக்கள் செய்யாத விஷயத்தைச் செய்த மாதிரி அவர்களை நம்ப வைக்க சாத்தானால் முடியும். மக்கள் பார்க்காத, கேட்காத, செய்யாத விஷயங்களைப் பார்த்த மாதிரியும், கேட்ட மாதிரியும், செய்த மாதிரியும் கற்பனை செய்ய வைக்க சாத்தானால் முடியும். காட்சிகளைக் காட்டுவதன் மூலம் அவன் அப்படிச் செய்யலாம். யெகோவாவிடமிருந்து மக்களைப் பிரிப்பதும் பைபிள் சொல்வதெல்லாம் பொய் என்று அவர்களை நினைக்க வைப்பதும்தான் சாத்தானுடைய ஆசை! அதற்காகத்தான் இதையெல்லாம் அவன் செய்கிறான்.

13. (அ) வையிட் மேஜிக் நல்லதா? (ஆ) மாயமந்திரத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

13 சாத்தான் பரப்பும் மூன்றாவது பொய்: மற்றவர்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்துகிற வையிட் மேஜிக் நல்லது. பிளாக் மேஜிக், வையிட் மேஜிக் என்றெல்லாம் பைபிள் எதையும் பிரித்துப் பேசவில்லை. அது எல்லா விதமான மேஜிக்கையும், அதாவது மாயமந்திரத்தையும், தவறு என்றுதான் சொல்கிறது. மாயமந்திரம் செய்வதைப் பற்றி யெகோவா இஸ்ரவேலர்களுக்கு என்ன சட்டங்களைக் கொடுத்தார் என்று பாருங்கள்:

  •   ‘நீங்கள் மாயமந்திரம் செய்யக்கூடாது.’​—லேவியராகமம் 19:26.

  •   ”ஆவிகளோடு பேசுகிற அல்லது குறிசொல்கிற ஒருவனோ ஒருத்தியோ நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.“​—லேவியராகமம் 20:27.

  •   ”உங்களில் யாருமே . . . மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ . . . கூடாது.“​—உபாகமம் 18:10-14.

14. யெகோவா ஏன் இந்தச் சட்டங்களைக் கொடுத்தார்?

14 மாயமந்திரப் பழக்கத்தில் தன்னுடைய மக்கள் ஈடுபடக்கூடாது என்று கடவுள் எதிர்பார்த்ததை இந்தச் சட்டங்கள் காட்டுகின்றன. தன்னுடைய மக்கள்மீது யெகோவா நிறைய அன்பு வைத்திருந்ததால்தான் இந்தச் சட்டங்களைக் கொடுத்தார். அவர்கள் பேய்களை நினைத்து பயப்படக்கூடாது என்றும் மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்றும் அவர் எதிர்பார்த்தார். பேய்களிடமிருந்து தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நினைத்தார்.

15. சாத்தானைவிட யெகோவாவுக்கு அபார சக்தி இருக்கிறது என்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது?

15 பேய்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்ற பட்டியலை பைபிள் கொடுப்பதில்லை. ஆனால், அவைகளைவிட யெகோவா எவ்வளவு சக்தியுள்ளவர் என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. சாத்தானை யெகோவா பரலோகத்திலிருந்து கீழே தள்ளினார். (வெளிப்படுத்துதல் 12:9) இன்னொரு விஷயத்தையும் யோசித்துப்பாருங்கள்: யோபுவை சோதிப்பதற்கு முன்பு சாத்தான் யெகோவாவிடம் அனுமதி கேட்டான். யோபுவைக் கொல்லக்கூடாது என்று யெகோவா கொடுத்த எச்சரிக்கைக்கு அவன் கட்டுப்பட்டு நடந்தான்.—யோபு 2:4-6.

16. யாரால் நமக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும்?

16 நீதிமொழிகள் 18:10 இப்படிச் சொல்கிறது: “யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை. நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.” அதனால், யெகோவாவினால் மட்டும்தான் நமக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும். சாத்தானிடமிருந்தும் பேய்களிடமிருந்தும் தங்களைப் பாதுகாக்க, யெகோவாவின் ஊழியர்கள் மந்திர பொருள்களையோ மந்திர பானங்களையோ நம்புவதில்லை. அதேபோல், சூனியக்காரர்கள் செய்கிற செய்வினைகளை நினைத்தும் அவர்கள் பயப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, பைபிள் சொல்கிற இந்த விஷயத்தை அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள்: “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.”—2 நாளாகமம் 16:9.

17. யாக்கோபு 4:7 நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது? நாம் என்ன செய்ய வேண்டும்?

17 நீங்கள் யெகோவாவுக்கு சேவை செய்தால், இதே நம்பிக்கை உங்களுக்கும் கிடைக்கும். யாக்கோபு 4:7 இப்படிச் சொல்கிறது: “கடவுளுக்கு அடங்கி நடங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” உண்மைக் கடவுளான யெகோவாவை வணங்கி, அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தீர்கள் என்றால், அவர் கண்டிப்பாக உங்களைப் பாதுகாப்பார்.