நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ராஜ்ய செய்தி 36
நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நியூ மிலனியம் புதிய சகாப்தத்தின் விடியலா?
இருபதாம் நூற்றாண்டு டிசம்பர் 31, 1999-ல் அஸ்தமனமானது. a அது, பயங்கர குழப்பங்கள் பலவற்றை சந்தித்த நூற்றாண்டு மட்டும் அல்ல. புதிய தொழில் நுட்பங்கள், மலைக்க வைக்கும் மருத்துவ சாதனைகள், தகவல் புரட்சி, அதிவேகமாக வளர்ந்துவரும் உலகளாவிய பொருளாதாரம் ஆகியவை உதயமான நூற்றாண்டும் ஆகும். ஆகவே, புதிய ஆயிரத்தாண்டு நம்பிக்கைக்கும் மாற்றத்திற்கும் சின்னமாக விளங்கும் என எதிர்பார்த்து பலர் அதை வரவேற்றுள்ளனர். ஆனால், போர், ஏழ்மை, சுற்றுச்சூழல் நாசம், வியாதி ஆகியவற்றை இந்த ஆயிரம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவருமா?
அப்படித்தான் அநேகர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் புதிய ஆயிரத்தாண்டு நன்மைதரும் மாற்றங்களை, அதாவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பான வாழ்க்கையை கொண்டுவருமா? நாம் இன்று எதிர்ப்படுகிற பிரச்சினைகளில் சில இன்னும் எவ்வளவு பயங்கரமாக அதிகரிக்கும் என்பதற்கு இதோ சில உதாரணங்கள்:
தூய்மைக்கேடு
தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் “பூகோள அளவில் சுற்றுச்சூழலை அழிக்கின்றன, தூய்மைக்கேட்டை பரவச்செய்கின்றன, சூழலியல் அமைப்பை பாதிக்கின்றன.” இதே நிலை தொடர்ந்தால், “இயற்கை சூழல் அதிவிரைவில் அழிந்துவிடும்.”—“பூகோள சூழியல் நோக்கு—2000,” ஐக்கிய நாடுகள் சூழியல் திட்டம் (ஆங்கிலம்).
நோய்
வளர்ந்துவரும் நாடுகளில் இன்று பத்து பேரில் ஐந்து பேருக்கும் குறைவானவர்களே தொற்றாத நோயால் இறந்துபோகிறார்கள். ஆனால், 2020-ம் வருடத்திற்குள் இந்த இறப்பு எண்ணிக்கை பத்துக்கு ஏழு பேராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.”—“உலகளாவிய நோய் பிரச்சினை,” ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், 1996 (ஆங்கிலம்).
“2010-க்குள், மிகப் பயங்கரமாக [எய்ட்ஸ்] பரவியுள்ள 23 நாடுகளில் சுமார் 6.6 கோடி பேர் இறந்திருப்பார்கள்” என சில நிபுணர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.—“எய்ட்ஸை எதிர்ப்படுதல்: வளர்ந்துவரும் நாடுகளிலிருந்து வரும் அத்தாட்சி,” ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் உலக வங்கியின் அறிக்கை (ஆங்கிலம்).
ஏழ்மை
“சுமார் 130 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலர்கூட இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் அடிப்படை உணவுக்குக்கூட வழியில்லாமல் திண்டாடுகிறார்கள்.”—“மனித மேம்பாட்டு அறிக்கை 1999,” ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (ஆங்கிலம்).
போர்
“சரித்திரம் காணாத அளவுக்கு [பல்வேறு நாடுகளில்] வன்முறை அதிகரிக்கலாம். இனம், குலம், மதம் ஆகிய [பிரிவினைகளால்] . . . தூண்டப்படும் வன்முறை . . . அடுத்த கால் நூற்றாண்டில் மிகச் சர்வ சாதாரணமாக இருக்கும். . . . இதனால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் கொலை செய்யப்படுவார்கள்.”—“புதிய உலகின் வருகை: 21-ம் நூற்றாண்டில் அமெரிக்கப் பாதுகாப்பு,” ஐ.நா. தேசிய பாதுகாப்பு ஆணைக்குழு/21-ம் நூற்றாண்டு (ஆங்கிலம்).
புதிய ஆயிரத்தாண்டின் ஆரவாரமும் கொண்டாட்டமும், தூய்மைக்கேடு, வியாதி, ஏழ்மை, போர் ஆகியவை பயங்கரமாக பெருகி வருகிறது என்ற உண்மையை மூடி மறைத்துவிடுகிறது. பேராசை, அவநம்பிக்கை, சுயநலம் ஆகியவையே பிரச்சினைகளின் ஆணிவேர். இவற்றை வெறுமனே அரசியல், அறிவியல் ஆராய்ச்சி, தொழில் நுட்பம் ஆகியவற்றால் ஒழிக்க முடியாது.
ஆசீர்வாதத்தைப் பொழியும் ஆயிரத்தாண்டு
பூர்வ எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) மனிதனுக்கு பூமியை ஆட்சி செய்யும் திறமையும் கிடையாது, உரிமையும் கிடையாது. மனிதரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதிகாரமும் அதற்கான வழிமுறையும் நம்மை படைத்த யெகோவா தேவனிடம் மட்டுமே இருக்கிறது.—ரோமர் 11:33-36; வெளிப்படுத்துதல் 4:11.
ஆனால் எப்போது, எப்படி அதைச் செய்வார்? நாம் ‘கடைசி நாட்களின்’ கடைசி கட்டத்தில் வாழ்கிறோம் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன. தயவுசெய்து உங்கள் பைபிளை திறந்து 2 தீமோத்தேயு 3:1-5-ஐ வாசியுங்கள். இந்தக் “கொடிய காலங்களில்” மனிதர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை அது தத்ரூபமாக வருணிக்கிறது. ‘கடைசி நாட்களைப்’ பற்றி மத்தேயு 24:3-14, லூக்கா 21:10, 11 ஆகியவையும் விவரிக்கின்றன. உலகம் முழுவதும் போர், கொள்ளை நோய்கள், உணவுப் பற்றாக்குறை இருக்கும் என்பதை இந்த வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவை 1914 முதல் நிறைவேறி வருகின்றன.
இந்த ‘கடைசி நாட்கள்’ விரைவில் முடிவடையும். தானியேல் 2:44 இவ்வாறு கூறுகிறது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். . . . அது அந்த [பூமியிலுள்ள] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” ஆகவே, பூமியை ஆளுவதற்கு கடவுள் ஒரு ராஜ்யத்தை, அல்லது அரசாங்கத்தை ஸ்தாபிப்பார் என்பது முன்னறிவிக்கப்பட்டது. இந்த அரசாங்கம் ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்யும் என்பதாக வெளிப்படுத்துதல் 20:4 சொல்கிறது. இந்த ஆயிரவருட ஆட்சி பூமியிலுள்ள மக்களுக்கு ஏராளமான ஆசிர்வாதங்களை பொழியப்போகிறது. இதோ சில உதாரணங்கள்:
பொருளாதாரம். “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை.”—ஏசாயா 65:21, 22.
ஆரோக்கியம். “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான். ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24; 35:5, 6.
சுற்றுச்சூழல். ‘பூமியைக் கெடுப்பவர்களை [கடவுள்] அழிப்பார்.’—வெளிப்படுத்துதல் 11:18, NW.
மனித உறவுகள். “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை. . . . பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.
லட்சக்கணக்கானோர் இந்த பைபிள் தீர்க்கதரிசனங்களை முழுமையாக நம்புகிறார்கள். அதனால் எதிர்காலம் நல்லதாக அமையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இதன் காரணமாக, வாழ்க்கை பிரச்சினைகளையும் சிக்கல்களையும் இவர்களால் சிறந்த முறையில் சமாளிக்க முடிகிறது. பைபிள் எவ்வாறு உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்ட முடியும்?
ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு!
அறிவியலும் தொழில் நுட்பமும் மலைக்க வைக்கலாம்! இருந்தாலும், மனித அறிவு அநேகருடைய வாழ்க்கையில் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உருவாக்கவில்லை. பைபிளில் யோவான் 17:3-ல் விவரிக்கப்பட்டிருக்கும் அறிவு மட்டுமே பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் தரும். அது இவ்வாறு சொல்கிறது: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”
இப்படிப்பட்ட அறிவு பைபிளில் மட்டுமே காணப்படுகிறது. பெரும்பாலானோருக்கு இந்தப் புனித புத்தகத்தைப் பற்றி தவறான கருத்துக்கள் உள்ளன. ஆனால், அத்தகைய கருத்துக்கள் உண்மையா என்பதை வெகுசிலரே தனிப்பட்ட விதமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். உங்களுக்கும் ஆராய்ந்து பார்க்க விருப்பமா? பைபிளை வாசிக்க அதிக முயற்சி தேவை. ஆனால் அது வீணல்ல. பைபிள் மட்டுமே, “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
அப்படியானால், நீங்கள் எவ்வாறு பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்? யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள்! லட்சக்கணக்கானோர் தங்கள் வீட்டிலேயே இருந்தபடி சாட்சிகளிடம் இலவசமாக பைபிள் படித்துவருகிறார்கள். நீங்களும் பைபிள் படிக்க விரும்பினால், உங்களுக்கு உதவ பைபிள் அடிப்படையிலான அநேக பிரசுரங்கள் அவர்களிடம் இருக்கிறது. கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடு அவற்றில் ஒன்று. இந்த சிற்றேட்டில், கடவுள் யார்? பூமியைக் குறித்ததில் கடவுளுடைய நோக்கம் என்ன? கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? உங்கள் குடும்ப வாழ்க்கையை பைபிள் எவ்வாறு மேம்படுத்தும்? போன்ற கேள்விகளுக்கு சுருக்கமான விடைகளை காணலாம்.
யெகோவாவின் சாட்சிகளை உங்கள் வீட்டிற்கு அழைக்க விரும்பினால் தயவுசெய்து கீழே உள்ள கூப்பனை பூர்த்திசெய்து அனுப்புங்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் அருமையான ஆயிரவருட ஆட்சியைப் பற்றிய இன்னுமதிக தகவல்களை உங்களோடு சந்தோஷமாக பகிர்ந்துகொள்வார்கள்!
◻ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவலை பெற விரும்புகிறேன்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
[அடிக்குறிப்பு]
a நியூ மிலனியம் பற்றிய மேலை நாட்டு மக்களின் கருத்துக்களையே இங்கு குறிப்பிடுகிறோம். துல்லியமாக கணக்கிட்டால் நியூ மிலனியம் ஜனவரி 1, 2001-ல்தான் ஆரம்பிக்கிறது.