Skip to content

மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?

மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?

ராஜ்ய செய்தி 37

உலகெங்கும் அறிவிக்கப்படும் செய்தி

மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்​—⁠முடிவுக்கு வருமா?

▪ மதத்தின் பெயரில் அட்டூழியங்கள் செய்யப்படுவது ஏன்?

▪ எப்படி முடிவுக்கு வரும்?

▪ உங்களை எப்படிப் பாதிக்கும்?

மதத்தின் பெயரில் அட்டூழியங்கள் செய்யப்படுவது ஏன்?

மதத்தின் போர்வையில் செய்யப்படுகிற குற்றச்செயல்களைக் கண்டு மனவேதனைப்படுகிறீர்களா? கடவுளை வணங்குவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் போரிலும் தீவிரவாதத்திலும் ஊழலிலும் ஈடுபடுவதைக் கண்டு, உங்கள் உள்ளம் கொதிக்கிறதா? இத்தனை அநேக பிரச்சினைகளுக்கு மதம் ஆணிவேராக இருப்பதுபோல் தெரிவதேன்?

இதற்கெல்லாம் காரணம் மதம் அல்ல, அட்டூழியங்களை ஊக்குவிக்கிற மதங்களே. ‘கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுப்பது’ போல், இந்த மதங்கள் கெட்ட காரியங்களை விளைவிக்கின்றன என்று மக்களின் மதிப்பைப் பெற்ற மத போதகரான இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். (மத்தேயு 7:15-17) இந்த மதங்கள் என்னென்ன “கனிகளைக்” கொடுக்கின்றன?

மதத்தின் பெயரில் செய்யப்படுகிற அட்டூழியங்களில் சில:

◼ போரிலும் அரசியலிலும் தலையிடுதல்: “ஆசியாவிலும் பிற இடங்களிலும், அதிகார வெறிபிடித்த தலைவர்கள் மக்களுடைய மத உணர்வுகளை தங்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்” என ஏஷியாவீக் பத்திரிகை சொல்கிறது. இதன் விளைவாக, “சீக்கிரத்தில் இந்த உலகத்திற்குப் பித்துப்பிடித்துவிடும் போலிருக்கிறது” என அதே பத்திரிகை எச்சரிக்கிறது. அமெரிக்காவிலுள்ள பிரபல மதத் தலைவர் ஒருவர் மக்களை இவ்வாறு தூண்டிவிட்டார்: “தீவிரவாதிகளை நீங்கள் தீர்த்துக்கட்ட வேண்டும், அப்போதுதான் அவர்களுடைய கொட்டம் அடங்கும்.” முடிவாக அவர் என்ன சொல்கிறார்? “ஆண்டவருடைய பெயரில் அவர்கள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுங்கள்” என்கிறார். அதற்கு நேர்மாறாக பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்.” (1 யோவான் 4:20) ‘உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்’ என்றும்கூட இயேசு சொன்னார். (மத்தேயு 5:44) போரில் ஈடுபடுகிற எத்தனை மதங்கள் உங்கள் நினைவுக்கு வருகின்றன?

◼ பொய் போதனைகளைப் பரப்புதல்: மனிதனுக்குள் ஆத்துமா அல்லது ஆவி என்ற ஒன்று இருக்கிறது, அதைப் பார்க்க முடியாது, மனிதன் செத்த பிறகும் அது தொடர்ந்து உயிர்வாழ்கிறது என்றெல்லாம் பெரும்பாலான மதங்கள் கற்பிக்கின்றன. இப்படிப் போதிப்பதன் மூலம் அநேக மதங்கள் மக்களைச் சுரண்டி பிழைக்கின்றன. எப்படியென்றால், இறந்தவர்களுடைய ஆத்துமா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகச் சொல்லி, அதன் அங்கத்தினரிடமிருந்து பணம் வசூலிக்கின்றன. ஆனால், பைபிளின் போதனை முற்றிலும் வித்தியாசமானது. அது சொல்வதாவது: ‘பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும்.’ (எசேக்கியேல் 18:4) “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என இயேசு கற்பித்தார்; மனிதர்களுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறதென்றால் உயிர்த்தெழுதலுக்கான அவசியமே இருக்காது. (யோவான் 11:11-25) ஆத்துமா சாவதில்லை என உங்கள் மதம் கற்பிக்கிறதா?

◼ பாலியல் ஒழுக்கக்கேட்டைக் கண்டும் காணாமல் விட்டுவிடுதல்: மேற்கத்திய நாடுகளில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களையும் பெண்களையும் பாதிரிகளாக சர்ச்சுகள் நியமித்திருக்கின்றன. அதோடு, ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவும் செய்கின்றன. ஒழுக்கக்கேட்டைக் கண்டிக்கிற சர்ச்சுகள்கூட, சிறு பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் மதத் தலைவர்களை கண்டும் காணாமல் விட்டிருக்கின்றன. ஆனால், இதைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது? அது நேரடியாகவே இவ்வாறு குறிப்பிடுகிறது: “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) பாலியல் ஒழுக்கக்கேட்டைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிற மதங்களை உங்களுக்குத் தெரியுமா?

கெட்ட “கனிகளைக்” கொடுக்கிற மதங்களுக்குச் சீக்கிரத்தில் என்ன நடக்கப் போகிறது? “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்” என இயேசு எச்சரித்தார். (மத்தேயு 7:19) ஆம், இந்த மதங்கள் அடியோடு அழிக்கப்படும்! ஆனால் இது எப்படி நடக்கும், எப்போது நடக்கும்? பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகத்தின் 17, 18 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தீர்க்கதரிசன காட்சி இதற்கு விடையளிக்கிறது.

அட்டூழியங்களை ஊக்குவிக்கிற மதங்கள் எப்படி அழியும்?

இந்தக் காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பயங்கரமான மிருகத்தின் மீது ஒரு வேசி உட்கார்ந்திருக்கிறாள். அந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 17:1-4) இந்த வேசி யாருக்கு அடையாளமாக இருக்கிறாள்? அவள் “பூமியின் ராஜாக்கள்மேல்” செல்வாக்கு செலுத்துகிறாள். ஊதா நிற ஆடையை அணிந்திருக்கிறாள், வாசனைத் தைலங்களை பூசியிருக்கிறாள், பெரும் கோடீஸ்வரியாகவும் இருக்கிறாள். அதுமட்டுமா, அவளுடைய சூனியத்தால் ‘எல்லா ஜனங்களும் மோசம்போகிறார்கள்.’ (வெளிப்படுத்துதல் 17:18; 18:11-13, 23) இந்த வேசி ஓர் உலகளாவிய மத அமைப்பை அடையாளப்படுத்துகிறாள் என்று பைபிள் நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஒரேவொரு மதத்தை அல்ல, ஆனால் கெட்ட கனிகளைக் கொடுக்கிற எல்லா மதங்களையும் அவள் அடையாளப்படுத்துகிறாள்.

அந்த வேசி சவாரி செய்கிற மிருகம், உலக அரசியல் சக்திகளைக் குறிக்கிறது. a (வெளிப்படுத்துதல் 17:10-13) அட்டூழியங்களை ஊக்குவிக்கிற மதங்கள் அரசியல் எனும் மிருகத்தின் மீது சவாரி செய்கின்றன; அரசியல் தீர்மானங்களில் தலையிடவும் அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் முயலுகின்றன.

என்றாலும், வியப்பூட்டும் ஒரு சம்பவம் சீக்கிரத்தில் நடக்கப்போகிறது. “நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 17:16) அட்டூழியங்களை ஊக்குவிக்கிற மதங்களை அரசியல் சக்திகள் திடீரென தாக்கி அடியோடு அழித்துப்போடும், இந்த நடவடிக்கை திடுக்கிட வைப்பதாய் இருக்கும்! இந்தத் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் என்ன? ‘தேவன் . . . தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கு அவர்களுடைய இருதயங்களை ஏவினார்’ என்று பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் பதிலளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:17) ஆம், தம்முடைய பெயரைச் சொல்லிக்கொண்டு அவை செய்த சகல அருவருப்பான காரியங்களுக்காக கடவுள் அவற்றிடம் கணக்குக் கேட்பார். தம்முடைய பரிபூரண நீதியின்படி, அவற்றின் கள்ளக் காதலர்களான அரசியல் சக்திகளையே பயன்படுத்தி அவற்றைத் தீர்த்துக்கட்டுவார்.

இந்த மத வேசிக்கு வரப்போகிற அழிவில் அகப்படாதிருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “என் ஜனங்களே, . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என கடவுளுடைய தூதன் அவசர அழைப்பு விடுக்கிறார். (வெளிப்படுத்துதல் 18:4) ஆம், இந்த மதங்களைவிட்டு வெளியேறுவதற்கு இதுவே சரியான சமயம்! ஆனால், வெளியேறிய பின் எங்கே போவது? நாத்திக கொள்கையிடம் போக முடியாது, ஏனென்றால் அதன் எதிர்காலமும் இருண்டுதான் கிடக்கிறது. (2 தெசலோனிக்கேயர் 1:6-10) உண்மை மதம் மட்டுமே பாதுகாப்பு தரும் புகலிடமாக இருக்கும். அப்படியானால், உண்மை மதத்தைக் கண்டுபிடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?

உண்மை மதத்தைக் கண்டுபிடிக்க வழி

உண்மை மதம் என்னென்ன நல்ல கனிகளைக் கொடுக்க வேண்டும்?​—மத்தேயு 7:17.

உண்மை மதம் . . .

◼ அன்பு காட்டுகிறது: உண்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் “இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல”; அவர்கள் மத்தியில் இன, கலாச்சார பாகுபாடுகள் இல்லை; அவர்கள், ‘ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருக்கிறார்கள்.’ (யோவான் 13:35; 17:16, NW; அப்போஸ்தலர் 10:34, 35) ஒருவரையொருவர் கொலை செய்வதில்லை, மாறாக, ஒருவருக்கொருவர் உயிரைக் கொடுக்கக்கூட மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.​—1 யோவான் 3:16.

◼ கடவுளுடைய வார்த்தையை நம்புகிறது: உண்மை மதம், ‘பாரம்பரியத்தையும்’ ‘மனுஷருடைய கற்பனைகளையும் உபதேசங்களாக’ போதிப்பதில்லை; மாறாக, கடவுளுடைய வார்த்தையான பைபிளின் அடிப்படையில் போதிக்கிறது. (மத்தேயு 15:6-9) ஏன்? ஏனென்றால், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”​—2 தீமோத்தேயு 3:16, 17.

◼ குடும்பங்களைப் பலப்படுத்துகிறது, உயர்ந்த ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்கிறது: ‘மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரும்படி’ கணவர்களுக்கு உண்மை மதம் கற்பிக்கிறது; ‘கணவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட’ மனைவிகளுக்கு உதவுகிறது; ‘பெற்றோருக்குக் கீழ்ப்படியும்படி’ பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறது. (எபேசியர் 5:28, 33, NW; 6:1) அதுமட்டுமல்ல, பொறுப்பான ஸ்தானத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஒழுக்க நெறிகளில் முன்மாதிரியாய் இருக்க வேண்டுமென்றும் போதிக்கிறது.​—1 தீமோத்தேயு 3:1-10.

மலே சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கிற மதம் ஏதாவது இருக்கிறதா? 2001-⁠ல் வெளியான ஹோலகாஸ்ட் பாலிடிக்ஸ் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளின்படியும் செயல்களின்படியும் அநேகர் நடந்திருந்தால் படுகொலைகளைத் தடுத்திருக்க முடியும், இனப் படுகொலைகளும் இனி உலகை அலைக்கழிக்காது.”

ஆம், 235 நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள் பைபிளின் ஒழுக்க நெறிகளை வெறுமனே கற்பிப்பதில்லை, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள். கடவுள் ஏற்றுக்கொள்கிற விதமாக வணங்குவதற்கு அவர் என்னென்ன காரியங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறார் என்பதைக் கற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகளை அணுகும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். செயல்படுவதற்கான சமயம் இதுவே. காலம் தாழ்த்தாதீர்கள். அட்டூழியங்களை ஊக்குவிக்கிற மதங்களின் முடிவு விரைவில்!​—செப்பனியா 2:1-3.

யெகோவாவின் சாட்சிகள் அறிவிக்கும் பைபிள் செய்தியைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு எழுதுங்கள்.

□ விழிப்புடன் இருங்கள்! என்ற சிற்றேட்டைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

□ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.

[அடிக்குறிப்பு]

a இந்த விஷயத்தைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தைப் பாருங்கள்.

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

அட்டூழியங்களை ஊக்குவிக்கிற மதங்கள் “பூமியின் ராஜாக்கள்மேல்” செல்வாக்கு செலுத்துகின்றன

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

‘என் ஜனங்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்’