மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல்
மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல்
“இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.” (ரோமர் 8:22) அது 1,900-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டபோது, மானிட துன்பம் மிகுதியாயிருந்தது. அநேகர் மனச்சோர்வடைந்திருந்தனர். ஆகவே, கிறிஸ்தவர்கள் இவ்விதமாகத் தூண்டப்பட்டனர்: “மனச்சோர்வடைந்த ஆத்துமாக்களுக்கு ஆறுதலாகப் பேசுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:14, NW.
இன்று, மனிதனுடைய துயரம் இன்னும் அதிகமாக இருக்கிறது, எக்காலத்தையும்விட அதிகமான மக்கள் மனச்சோர்வடைந்திருக்கின்றனர். ஆனால் அது நம்மை ஆச்சரியமடையச்செய்ய வேண்டுமா? உண்மையில் ஆச்சரியமடையச்செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் பைபிள் இவற்றை “கடைசி நாட்க”ளாக அடையாளப்படுத்தி, அவற்றை “கையாளுவதற்குக் கடினமானக் காலங்கள்” என்றழைக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5, NW) கடைசி நாட்களின்போது, “ஜனங்களுக்குத் தத்தளிப்பு” உண்டாகும் என்றும் “பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்,” என்றும் இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.)—லூக்கா 21:7-11, 25-27; மத்தேயு 24:3-14.
நீண்டகாலக் கவலை, பயம், வருத்தம், அல்லது இத்தகைய மற்ற எதிர்மறையான உணர்ச்சிகளை மக்கள் அனுபவிக்கையில், அவர்கள் அடிக்கடி மனச்சோர்வடைகின்றனர். மனச்சோர்வு அல்லது மிதமிஞ்சிய வருத்தத்துக்குக் காரணம் ஒருவேளை அன்பானவரின் மரணம், மணவிலக்கு, வேலையிழப்பு, அல்லது தீராத வியாதியாக இருக்கலாம். தகுதியற்றத்தன்மை என்ற உணர்வை வளர்த்துக்கொள்ளும்போதும், தங்களைத் தோல்வியுற்றவராகவும் எல்லாரையும் தாங்கள் கைவிட்டதாகவும் உணரும்போதுங்கூட மக்கள் மனச்சோர்வடைகின்றனர். ஒரு துயரமான சூழ்நிலையினால் எவரும் அலைக்கழிக்கப்படலாம், ஆனால் ஒரு நபர் நம்பிக்கையற்ற உணர்வை வளர்த்துக்கொண்டு, ஒரு மோசமான சூழ்நிலைமையிலிருந்து வெளியேற எந்த வழியையும் காணமுடியாமல் இருக்கும்போது கடுமையான மனச்சோர்வு ஏற்படக்கூடும்.
பூர்வ காலத்திலிருந்த மக்கள் இதுபோன்ற உணர்ச்சிகளை அனுபவித்தனர். யோபு வியாதியையும் தனிப்பட்ட இன்னலையும் அனுபவித்தார். கடவுள் தன்னை கைவிட்டார் என்று அவர் உணர்ந்தார், ஆகவே அவர் வாழ்க்கையினிடமாக வெறுப்பை வெளிக்காட்டினார். (யோபு 10:1; 29:2, 4, 5) யாக்கோபு தன்னுடைய குமாரன் இறந்துவிட்டான் என்று நினைத்ததனால் மனச்சோர்வடைந்து ஆறுதல்படுத்தப்பட மறுத்து, மரிக்க விரும்பினார். (ஆதியாகமம் 37:33-35) வினைமையானப் பாவத்தைப்பற்றிய குற்ற உணர்ச்சியினால், தாவீது ராஜா புலம்பினார்: “நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். நான் பெலனற்றுப்போய்[விட்டேன்].”—சங்கீதம் 38:6, 8; 2 கொரிந்தியர் 7:5, 6.
இன்று, அநேகர் அதிகமான சிரமத்தையெடுத்துக்கொண்டு, தங்களுடைய மனம், உணர்ச்சி, மற்றும் சரீரத் திறமைகளுக்கு அப்பால் அன்றாட வேலைகளைத் தொடர முயற்சிசெய்வதன் காரணமாக மனச்சோர்வடைந்திருக்கின்றனர். தெளிவாகவே அழுத்தத்தோடு எதிர்மறையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் சேர்ந்து, சரீரத்தைப் பாதித்து, மூளையில் இரசாயன சமமற்ற நிலைக்கு காரணமாகிறது, இவ்வாறு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.—நீதிமொழிகள் 14:30-ஐ ஒத்துப்பாருங்கள்.
அவர்களுக்குத் தேவைப்படும் உதவி
பிலிப்பிலுள்ள முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவனாகிய எப்பாப்பிரோதீத்து “வியாதிப்பட்டதை [அவருடைய நண்பர்கள்] கேள்விப்பட்டதினாலே அவர் மனச்சோர்வடை”ந்தார். அப்போஸ்தலன் பவுலுக்காக உணவுப்பொருட்களுடன் அவருடைய நண்பர்களால் ரோமுக்கு அனுப்பப்பட்டபிறகு வியாதிப்பட்ட எப்பாப்பிரோதீத்து, தன்னுடைய நண்பர்களை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் ஒருவேளை அவர்கள் அவரைத் தோல்வியடைந்தவராகக் கருதிவிட்டதாகவும் உணர்ந்திருக்கலாம். (பிலிப்பியர் 2:25-27; 4:18) அப்போஸ்தலன் பவுல் எவ்விதமாக உதவினார்?
பிலிப்பிய நண்பர்களுக்கான ஒரு கடிதத்துடன் எப்பாப்பிரோதீத்துவை அவர் வீட்டுக்கு அனுப்பி சொன்னதாவது: “நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே [எப்பாப்பிரோதீத்துவை] ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.” (பிலிப்பியர் 2:28-30) பவுல் அவரைக்குறித்து அவ்வளவு உயர்வாகப் பேசியதும் பிலிப்பியர்கள் அவரை அனலோடும் அன்போடும் வரவேற்றதும், நிச்சயமாகவே எப்பாப்பிரோதீத்துவை ஆறுதல்படுத்தி அவருடைய மனச்சோர்வு தணிவதற்கு உதவியிருக்கவேண்டும்.
சந்தேகமில்லாமல், “மனச்சோர்வடைந்த ஆத்துமாக்களுக்கு ஆறுதலுடன் பேசுங்கள்” என்ற பைபிள் அறிவுரையே மிகச் சிறந்தது. “ஒரு நபராக உங்கள்மீது மற்றவர்கள் அக்கறை காட்டுகின்றனர் என்பதை நீங்கள் அறியவேண்டியது அவசியம்,” என்று மனச்சோர்வினால் துன்புற்ற ஒரு பெண் சொன்னாள். “‘எனக்கு புரிகிறது; நீங்கள் சரியாகிவிடுவீர்கள்,’ என்று யாராவது ஒருவர் சொல்வதை நீங்கள் கேட்பது அவசியம்.”
மனச்சோர்வடைந்த ஆள் ஒற்றுணர்வுள்ள ஒரு நபரிடம் நம்பிக்கையோடு சொல்வதற்கு முயற்சிப்பதன்மூலம் முதற்படியெடுக்கவேண்டியது அவசியம். இவர் நன்கு செவிகொடுப்பவராகவும் மிகவும் பொறுமையுள்ளவராகவும் இருக்கவேண்டும். அவன் அல்லது அவள் மனச்சோர்வடைந்தவருக்கு அறிவுரை கொடுத்துக்கொண்டிருப்பதை அல்லது ‘நீங்கள் அந்தமாதிரி உணரக்கூடாது’ அல்லது, ‘அது தவறான மனப்பான்மை’ போன்ற இப்படிப்பட்ட
அதிகாரத்தோடுகூடிய கூற்றுகள் சொல்வதைத் தவிர்க்கவேண்டும். மனச்சோர்வடைந்த நபரின் உணர்ச்சிகள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை, மேலும் இப்படிப்பட்ட குறைகூறுகிற குறிப்புகள் அவர் தன்னைக்குறித்து மோசமானவராக உணரவே செய்யும்.மனச்சோர்வடைந்திருக்கிற ஒருவர் தகுதியற்றவராக உணரக்கூடும். (யோனா 4:3) என்றபோதிலும், கடவுள் ஒருவரை எவ்விதமாக மதிப்பிடுகிறார் என்பதே உண்மையில் முக்கியமானது என்பதை ஒரு நபர் நினைவுகூரவேண்டும். மனிதர்கள் இயேசுவை “எண்ணாமற்போ”னார்கள், ஆனால் கடவுளிடத்தில் அவருடைய உண்மையான மதிப்பை அது மாற்றவில்லை. (ஏசாயா 53:3) கடவுள் அவருடைய அன்பானக் குமாரனை நேசிக்கிறதுபோல, அவர் உங்களையுங்கூட நேசிக்கிறார் என்பதில் நிச்சயமாயிருங்கள்.—யோவான் 3:16.
துயரத்திலிருந்தவர்களுக்கு இயேசு இரங்கி, தங்களுடைய தனிப்பட்ட மதிப்பைக் காண அவர்களுக்கு உதவ முயற்சிசெய்தார். (மத்தேயு 9:36; 11:28-30; 14:14) சிறிய, அற்ப அடைக்கலான் குருவிகளையுங்கூட கடவுள் மதிக்கிறார் என்பதை அவர் விளக்கினார். “அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை,” என்று அவர் சொன்னார். அவருடைய சித்தத்தைச் செய்ய முயற்சிசெய்கிற மனிதர்களை அவர் எவ்வளவு அதிகமாக மதிக்கிறார்! இவர்களைக்குறித்து இயேசு சொன்னார்: “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.”—லூக்கா 12:6, 7.
உண்மைதான், தன்னுடைய பலவீனங்களினாலும் குறைபாடுகளினாலும் அழுத்தப்பட்டுக் கடுமையாக மனச்சோர்வடைந்திருக்கிற ஒரு நபருக்கு, கடவுள் அவரை அவ்வளவு உயர்வாக மதிக்கிறார் என்பதை நம்புவது கடினமாக இருக்கலாம். கடவுளின் அன்புக்கும் கவனிப்புக்கும் தகுதியற்றவர் என்று அவர் நிச்சயமாகவே உணரலாம். “நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்கு”மென்று கடவுளுடைய வார்த்தை ஒத்துக்கொள்கிறது. ஆனால் அது தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறதா? அவ்விதமாக இல்லை. பாவமுள்ள மனிதர்கள் எதிர்மறையாக சிந்தித்து தங்களை குற்றவாளியாயுங்கூடத் தீர்க்கக்கூடும் என்பதைக் கடவுள் அறிந்திருக்கிறார். ஆகவே அவருடைய வார்த்தை அவர்களை ஆறுதல்படுத்துகிறது: “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.”—1 யோவான் 3:19, 20.
ஆம், நம்முடைய அன்புள்ள பரலோகத் தகப்பன், நம்முடைய பாவங்களையும் தவறுகளையும்விட அதிகத்தைப் பார்க்கிறார். குற்றத்தை மன்னிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள், நம்முடைய முழு வாழ்க்கைப்போக்கு, நம்முடைய உள்ளெண்ணங்கள் மற்றும் நோக்கங்களையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் பாவத்தையும், வியாதியையும் மரணத்தையும் சுதந்தரித்திருக்கிறோம், ஆகவே மிகுதியான வரையறைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நாம் துயரப்பட்டவர்களாய் உணர்ந்து, நம்மைப்பற்றி வெறுப்படைகிறோம் என்ற உண்மைதானே நாம் பாவஞ்செய்ய விரும்பவில்லை என்பதற்கும் மிதமிஞ்சி செல்லவில்லை என்பதற்கும் ரோமர் 5:12; 8:20.
நிரூபணமாக இருக்கிறது. நம்முடைய விருப்பத்திற்கெதிராக “மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கி”றோம் என்று பைபிள் சொல்கிறது. ஆகவே, நம்முடைய பரிதாபகரமானச் சூழ்நிலையைக்குறித்து கடவுள் இரக்கங்கொள்கிறார், மேலும் அவர் நம்முடைய பலவீனங்களைப் பரிவிரக்கத்துடன் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்.—“கர்த்தர் உருக்கமும், இரக்கமும்” உள்ளவர் என்பதாக நாம் உறுதியளிக்கப்படுகிறோம். “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:8, 12, 14) உண்மையாகவே, யெகோவா “நம்முடைய சகல உபத்திரவங்களிலேயும் நம்மை ஆறுதல்படுத்துகிற சகல ஆறுதலின் தேவனாக” இருக்கிறார்.—2 கொரிந்தியர் 1:3, 4, NW.
மனச்சோர்வடைந்தோருக்குத் தேவையான அதிக உதவி, தங்களுடைய இரக்கமுள்ள கடவுளிடம் நெருங்கி வருவதிலிருந்தும் ‘அவர்மேல் தங்களுடைய பாரத்தை வைத்துவிடு’ங்கள் என்ற அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதிலிருந்தும் வருகிறது. “நொறுங்கினவர்களின் ஆவியை [இருதயத்தை, NW] உயிர்ப்பிக்கிறதற்கு” அவரால் உண்மையில் கூடும். (சங்கீதம் 55:22; ஏசாயா 57:15) ஆகவே கடவுளுடைய வார்த்தை ஜெபத்தை உற்சாகப்படுத்திச் சொல்வதாவது: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் [யெகோவா]மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) ஆம், ஜெபம் மற்றும் வேண்டுதலின்மூலம் ஆட்கள் கடவுளிடம் நெருங்கிவந்து, “எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதான”த்தை அனுபவிக்க முடியும்.—பிலிப்பியர் 4:6, 7; சங்கீதம் 16:8, 9.
வாழ்க்கை-பாணியில் நடைமுறையானச் சரிப்படுத்துதல்களும் மனச்சோர்வடைந்த ஒரு மனநிலையை மேற்கொள்வதற்கு ஒருவருக்கு உதவிசெய்யலாம். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சுத்தமானக் காற்றை எடுத்துக்கொள்ளுதல், போதுமான ஓய்வு, மிதமிஞ்சி டிவி பார்ப்பதைத் தவிர்த்தல் ஆகிய அனைத்தும் முக்கியமானவை. மனச்சோர்வடைந்தவர்களைச் சுறுசுறுப்பாக நடக்கச்செய்வதன்மூலம் ஒரு ஸ்திரீ அவர்களுக்கு உதவியிருக்கிறாள். “நான் நடக்க விரும்பவில்லை,” என்று ஒரு மனச்சோர்வடைந்தப் பெண் சொன்னபோது, அந்த ஸ்திரீ சாந்தமாகவும், ஆனால் உறுதியாகவும் இவ்விதமாகப் பதிலளித்தாள்: “ஆம், நீங்கள் நடந்தே ஆகவேண்டும்.” அந்த ஸ்திரீ அறிக்கையிட்டாள்: ‘நாங்கள் ஆறு கிலோமீட்டர் நடந்தோம். நாங்கள் திரும்பியபோது, அவள் களைப்பாயிருந்தாலும், நன்றாக உணர்ந்தாள். நீங்கள் முயற்சிசெய்யும் வரை சுறுசுறுப்பான பயிற்சி எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை உங்களால் நம்பமுடியாது.’
என்றபோதிலும், மருத்துவ சிகிச்சைமுறைகள் உட்பட எல்லாவற்றையும் முயற்சிசெய்தபோதிலுங்கூட, சிலசமயங்களில் மனச்சோர்வை முழுமையாக முறியடிப்பது கூடாதகாரியமாயிருக்கிறது. ஒரு நடுத்தர வயதுப்பெண் சொன்னாள், “நான் எல்லாவற்றையும் முயற்சிசெய்துவிட்டேன், ஆனால் மனச்சோர்வு தொடர்ந்திருக்கிறது.” அதுபோலவே, இப்பொழுது குருடர், செவிடர், ரோமர் 12:12; 15:4.
அல்லது முடவரை குணப்படுத்துவது அடிக்கடி இயலாத காரியமாயிருக்கிறது. என்றபோதிலும், மனச்சோர்வடைந்தோர் ஒழுங்காகக் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன்மூலம் ஆறுதலையும் நம்பிக்கையையும் கண்டடையலாம், அது அனைத்து மனித வியாதிகளிலிருந்து நிரந்தரமான விடுதலையைப்பற்றிய நிச்சயமான நம்பிக்கையை அளிக்கிறது.—இனி ஒருவரும் மனச்சோர்வடையாத காலம்
கடைசி நாட்களில் பூமியின்மீது வரக்கூடிய பயங்கரமான காரியங்களை இயேசு விவரித்தபோது, அவர் மேலும் இவ்விதமாகச் சொன்னார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.” (லூக்கா 21:28) கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகிற்குள்ளான விடுதலையைப்பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார், அங்கு “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.”—ரோமர் 8:20.
கடந்த காலத்தின் பாரங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பளிங்கு போன்ற தெளிவான மனதுடன் விழித்தெழுந்து அந்த நாளின் வேலையை சமாளிப்பதற்கு ஆவலுள்ளவர்களாய் இருப்பது மனிதவர்க்கத்திற்கு என்னே ஒரு விடுதலையாய் இருக்கும்! இனிமேலும் அதிகமான மனச்சோர்வினால் எவரேனும் தடைசெய்யப்படமாட்டார். மனிதவர்க்கத்துக்கான நிச்சயமான வாக்குறுதியானது, “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின,” என்பதாகும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
மற்றபடி குறிப்பிட்டிருந்தால் தவிர, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிள் பயன்படுத்தப்படுகிறது. NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்.