2 ராஜாக்கள் 12:1-21

12  யெகூ+ ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில், யோவாஸ்+ ராஜாவானார்; அவர் 40 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயெர்-செபாவைச் சேர்ந்த சிபியாள்.+  குருவாகிய யோய்தா யோவாசுக்கு அறிவுரை கொடுத்துவந்த காலமெல்லாம், அவர் யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துகொண்டார்.  இருந்தாலும், ஆராதனை மேடுகள்+ அழிக்கப்படவில்லை; மக்கள் இன்னமும் அந்த இடங்களில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள்.  அவர் குருமார்களிடம், “யெகோவாவின் ஆலயத்துக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்படும் எல்லா பணத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள்;+ அதாவது, ஒவ்வொருவரும் கட்ட வேண்டிய வரிப்பணத்தையும்,+ நேர்ந்துகொண்டவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தையும், யெகோவாவின் ஆலயத்துக்காக ஒவ்வொருவரும் மனப்பூர்வமாகக் கொண்டுவருகிற பணத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள்.+  குருமார்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து நேரடியாகப் பணத்தை வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெல்லாம் பழுது* இருக்கிறதோ அங்கெல்லாம் அதைச் சரிப்படுத்த வேண்டும்”+ என்று சொன்னார்.  யோவாஸ் ஆட்சி செய்த 23-ஆம் வருஷம்வரை ஆலயத்தைக் குருமார்கள் பழுதுபார்க்கவே இல்லை.+  அதனால், குருவாகிய யோய்தாவையும்+ மற்ற குருமார்களையும் யோவாஸ் ராஜா கூப்பிட்டு, “நீங்கள் ஏன் ஆலயத்தை இன்னும் பழுதுபார்க்கவில்லை? ஆலயத்தைப் பழுதுபார்ப்பதாக இருந்தால் மட்டும்தான் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து நீங்கள் பணம் வாங்க வேண்டும், இல்லாவிட்டால் வாங்கக் கூடாது”+ என்று சொன்னார்.  குருமார்கள் அதற்கு ஒத்துக்கொண்டார்கள்; அதனால் மக்களிடமிருந்து இனி பணம் வாங்குவதில்லை என்றும், ஆலயத்தைப் பழுதுபார்க்கும் பொறுப்பை ஏற்பதில்லை என்றும் சொன்னார்கள்.  பின்பு, குருவாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து+ அதன் மூடியில் ஓட்டை போட்டு, பலிபீடத்துக்குப் பக்கத்தில் வைத்தார். யெகோவாவின் ஆலயத்துக்குள் நுழைகிற ஒருவரின் வலது பக்கத்தில் இருக்கும்படி அதை வைத்தார். காவலாளிகளாகச் சேவை செய்கிற குருமார்கள், யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லா பணத்தையும் அதில் போட்டுவிடுவார்கள்.+ 10  அந்தப் பெட்டியில் நிறைய பணம் சேர்ந்துவிட்டதைப் பார்க்கும்போது, யெகோவாவின் ஆலயத்துக்காகக் கொடுக்கப்பட்ட அந்தப் பணத்தை ராஜாவின் செயலாளரும் தலைமைக் குருவும் எடுத்து* எண்ணி வைப்பார்கள்.+ 11  பின்பு, எண்ணி வைக்கப்பட்ட அந்தப் பணத்தை எடுத்து யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும் வேலையை மேற்பார்வை செய்கிறவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் இதை வைத்து, யெகோவாவின் ஆலயத்தில் தச்சு வேலை செய்கிறவர்களுக்கும் கட்டுமான வேலை செய்கிறவர்களுக்கும் கூலி கொடுப்பார்கள்.+ 12  அதோடு, கொத்தனார்களுக்கும் கற்களை வெட்டிச் செதுக்குகிறவர்களுக்கும் கூலி கொடுப்பார்கள். யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக மரங்களையும் செதுக்கப்பட்ட கற்களையும் வாங்குவார்கள். ஆலயத்தைப் பழுதுபார்க்கும்போது ஏற்படும் மற்ற எல்லா செலவுகளுக்கும் அந்தப் பணத்தைப் பயன்படுத்துவார்கள். 13  இருந்தாலும், யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட காசை வைத்து, யெகோவாவின் ஆலயத்துக்காக வெள்ளிப் பாத்திரங்களையோ திரி வெட்டும் கருவிகளையோ கிண்ணங்களையோ எக்காளங்களையோ+ வேறெந்தத் தங்கப் பொருளையோ வெள்ளிப் பொருளையோ செய்யவில்லை.+ 14  அதற்குப் பதிலாக, மேற்பார்வையாளர்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் அதை வைத்து யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள். 15  வேலையாட்களுக்குக் கூலி கொடுப்பதற்காக மேற்பார்வையாளர்களிடம் தந்த பணத்துக்கு அவர்களிடம் கணக்குக் கேட்கவில்லை. ஏனென்றால், அவர்கள் நம்பகமான ஆட்களாக இருந்தார்கள்.+ 16  குற்றநிவாரண பலிக்காகவும்+ பாவப் பரிகார பலிக்காகவும் மக்கள் தந்த பணத்தை யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காகக் கொடுக்கவில்லை. ஏனென்றால், அது குருமார்களுக்குச் சொந்தம்.+ 17  அந்தச் சமயத்தில், சீரியாவின் ராஜாவான அசகேல்+ காத் நகரத்துக்கு+ எதிராகப் போர் செய்து அதைக் கைப்பற்றினான். அதன் பின்பு, எருசலேமைத் தாக்கத் தீர்மானித்தான்.+ 18  உடனே, யூதாவின் ராஜாவான யோவாஸ் யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்து சீரியாவின் ராஜாவான அசகேலுக்கு அனுப்பி வைத்தார். அதோடு, தன்னுடைய முன்னோர்களும் யூதாவின் ராஜாக்களுமான யோசபாத், யோராம், அகசியா ஆகியோர் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்த* எல்லா பொருள்களையும், தான் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்த பொருள்களையும் அனுப்பி வைத்தார்.+ அதனால், எருசலேமைத் தாக்காமல் அசகேல் திரும்பிப் போனான். 19  யோவாசின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 20  யோவாசின் ஊழியர்கள் கூட்டுச் சேர்ந்து அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினார்கள்;+ சில்லாவுக்குப் போகும் வழியில் இருக்கிற பெத்-மில்லோவில்*+ அவரைக் கொன்றுபோட்டார்கள். 21  அவருடைய ஊழியர்களான சிமியாத்தின் மகன் யோசகாரும் சோமேரின் மகன் யெகோஸபாத்தும்தான் அவரைத் தாக்கிக் கொன்றுபோட்டார்கள்.+ பின்பு, அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த ‘தாவீதின் நகரத்தில்’ அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் அமத்சியா ராஜாவானார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “விரிசல்.”
வே.வா., “பைகளில் போட்டு.” நே.மொ., “கட்டி.”
நே.மொ., “புனிதப்படுத்தியிருந்த.”
அர்த்தம், “மண்மேடு.” இது ஒரு கோட்டையாக இருந்திருக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா