நவம்பர் 1, 2023
இந்தியா
இந்தியாவில் குண்டுவெடிப்பு—யெகோவாவின் சாட்சிகள் ஒருவருக்கு ஒருவர் காட்டும் அன்பும் ஆதரவும்
jw.org-ல் ஏற்கெனவே வந்த முக்கியச் செய்தியில் சொல்லப்பட்டதுபோல், அக்டோபர் 29, 2023, ஞாயிறு அன்று இந்தியாவிலுள்ள கேரளாவில் நடந்த மண்டல மாநாட்டில் சில குண்டுவெடிப்புகள் நடந்தன. வருத்தமான விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே இறந்த இரண்டு சகோதரிகளைத் தவிர, இன்னொரு 12 வயது பெண்ணும் தீக்காயங்களால் இறந்துவிட்டாள். இன்னும் 55 சகோதர சகோதரிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்களில் சிலர் மோசமான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்போது, மருத்துவமனையில் இருக்கும் மூன்று சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். காலையில் சுமார் 9:40-க்கு ஆரம்ப ஜெபம் செய்யப்பட்டபோது குறைந்தது மூன்று வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள். இந்தக் கொடூர செயலைச் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீஸ் கைது செய்திருக்கிறது, விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது.
அந்த அவசர நிலையில் உடனடியாக வந்து உதவி செய்த எல்லா ஊழியர்களுக்கும் நாங்கள் ரொம்ப நன்றி சொல்கிறோம். காயமடைந்தவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்ளும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் ரொம்ப நன்றி சொல்கிறோம்.
மன்றத்தில் இருந்த எல்லாரும்கூட, மற்ற சகோதர சகோதரிகள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றியோடு இருக்கிறார்கள். குண்டு வெடித்தபோது அந்த மன்றத்தில் இருந்த ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் உடனே யெகோவாவிடம் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். அட்டன்டண்டுகளாக இருந்த சகோதரர்களும் மற்ற சகோதரர்களும் எங்களை ரொம்ப நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். எங்கள் பாதுகாப்புக்காகச் செய்ய வேண்டியதையெல்லாம் உடனடியாகச் செய்தார்கள். எங்கள் ஒவ்வொருவர்மேலும் யெகோவா எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.”
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியக் கிளை அலுவலகப் பிரதிநிதிகளும் வட்டாரக் கண்காணிகளும் உள்ளூர் மூப்பர்களும் தொடர்ந்து செய்துவருகிறார்கள், பைபிளிலிருந்து ஆறுதலையும் கொடுத்துவருகிறார்கள். பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளை ஆறுதல்படுத்துவதற்காகக் கிளை அலுவலகத்திலிருந்து கேரளாவுக்குப் போன ஒரு மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபக்கம் பயங்கரமான அதிர்ச்சியும் வலியும் திகிலும் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. அவர்களில் நிறையப் பேரிடம் நான் பேசினேன். அவர்கள் எந்தளவுக்கு யெகோவாவை நம்பியிருக்கிறார்கள் என்பதை நேருக்கு நேர் பார்த்தபோது என் நம்பிக்கை இன்னும் பலமானது.”
இந்தியாவில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்தில் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மற்ற எல்லாருக்காகவும் உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் ஜெபம் செய்கிறோம். வன்முறையும் வேதனையும் மரணமும் இல்லாத ஒரு காலம் வரப்போவதாக பைபிள் தரும் வாக்குறுதி நமக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறது. எப்போதும் யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கையை வைக்க நாம் தீர்மானமாக இருக்கிறோம்.—சங். 56:3.