இந்தியா—ஒரு கண்ணோட்டம்
1905-லிருந்து யெகோவாவின் சாட்சிகள் இந்தியாவில் இருந்துவருகிறார்கள். 1926-ல் பாம்பேயில் (இப்போது மும்பையில்) தங்களுடைய அலுவலகத்தை நிறுவினார்கள். 1978-ல் அவர்கள் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். இந்தியாவின் அரசியல் அமைப்பு தரும் உத்தரவாதங்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒருவர் தன் மத நம்பிக்கையை வெளிப்படையாகச் சொல்வதற்கும், அதைக் கடைப்பிடிப்பதற்கும், மற்றவர்களுக்குப் பரப்புவதற்கும் உரிமை இருக்கிறது என்ற உத்தரவாதம் அவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிறது. பிஜோ இம்மானுவேலுக்கும் கேரளா அரசுக்கும் இடையே நடந்த முக்கியமான வழக்கில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. இவர்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியினால் இந்தியக் குடிமக்கள் எல்லாருக்குமே கூடுதலான உரிமைகள் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் யெகோவாவின் சாட்சிகள் பொதுவாக எந்தத் தடையும் இல்லாமல் தங்கள் கடவுளைச் சுதந்திரமாக வழிபடுகிறார்கள். ஆனால், சில மாநிலங்களில் கலகக் கும்பல்கள் அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள், மற்றவர்களும் எதிர்ப்பு காட்டியிருக்கிறார்கள்.
ஒருவர் தன் மத நம்பிக்கையைப் பரப்புவதற்கும், மற்றவர்களை மதம் மாற்றுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று 1977-ல் உச்ச நீதிமன்றம் சொன்னது. மற்றவர்களை மதமாற்றம் செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும், மதமாற்றத்துக்கு எதிராக சில மாநிலங்கள் போட்டிருக்கும் சட்டங்கள் செல்லுபடியாகும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. யெகோவாவின் சாட்சிகளைத் தாக்கும் கலகக் கும்பல்களை போலீஸ் பிடிக்கும்போது அந்தக் கும்பல்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, யெகோவாவின் சாட்சிகள் மதமாற்றம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடித்ததாகப் பொய்க் குற்றம் சாட்டியிருக்கின்றனர். மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் இல்லாத மாநிலங்களில், யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களுடைய மதங்களை இழிவுபடுத்துவதாக எதிரிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். குடியேற்ற காலப்பகுதியில் இருந்த ஒரு சட்டத்தை யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்குத் தவறாகப் பொருத்திக் காட்டியிருக்கிறார்கள். அதனால், 2002-லிருந்து கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான சந்தர்ப்பங்களில் கலகக் கும்பல்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பயங்கரமாகத் தாக்கியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை உள்ளூர் அதிகாரிகள் இன்னும்தான் அதிகமாக்குகிறார்கள். ஏனென்றால், பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் சரியாகப் பாதுகாப்பதும் இல்லை, தாக்குகிறவர்களைச் சரியாகத் தண்டிப்பதும் இல்லை.
இந்தியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கிறார்கள், நீதிமன்றங்களில் வழக்குகளையும் பதிவு செய்கிறார்கள். பிஜோ வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உள்ளூர் அதிகாரிகளும் மற்றவர்களும் மதித்து நடப்பார்கள் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். அதாவது, “பொறுத்துப் போவதையே நம்முடைய பாரம்பரியம் போதிக்கிறது; பொறுத்துப் போவதையே நம்முடைய கொள்கை போதிக்கிறது; பொறுத்துப் போவதையே நம்முடைய அரசியல் அமைப்பின் சட்டமும் செயல்படுத்துகிறது; அதை நாம் நீர்த்துப்போகச் செய்யக் கூடாது” என்ற தீர்ப்பை எல்லாரும் மதித்து நடப்பார்கள் என்று நம்புகிறார்கள். தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க தாங்கள் எடுக்கும் முயற்சிகள் கலகக் கும்பல்களின் தாக்குதல்களை நிறுத்தும் என்றும், மத சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கும் என்றும் யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள்.