Skip to content

சகோதரி ஒலினா, குண்டு வெடிப்பில் மிகவும் சேதமடைந்த தன் வீட்டுக்கு முன்பு. சகோதர சகோதரிகள் உடனடியாக அவருக்கு உதவி செய்ய வந்தார்கள்

ஜூலை 4, 2022
உக்ரைன்

அறிக்கை #10 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

“தைரியம், கரிசனை, நம்பகத்தன்மைக்கு” முன்மாதிரிகள்

அறிக்கை #10 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

இந்தக் கஷ்டமான காலத்திலும் உக்ரைனில் இருக்கிற சகோதர சகோதரிகள் தங்களுடைய சக வணக்கத்தாருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள், சுயநலமில்லாத அன்பை ஒருவருக்கொருவர் தொடர்ந்து காட்டுகிறார்கள்.

சகோதரி ஒலினாவுக்கு 81 வயது. ஜூன் 6-ம் தேதி அவருடைய வீட்டுக்கு ரொம்ப பக்கத்திலேயே ஒரு குண்டு வெடித்தது. அதனால் அவருடைய பக்கத்து வீடு தரைமட்டமானது. அந்த இடத்தில் 23 அடி ஆழத்துக்கு ஒரு பெரிய பள்ளமே உருவானது. அந்தப் பயங்கரமான குண்டு வெடிப்பில் சகோதரி ஒலினாவின் வீடும்கூட மிகவும் சேதமடைந்தது.

அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று என்னுடைய தலைக்கு ரொம்ப பக்கத்திலேயே ஒரு சுவர் இடிந்து விழுந்தது. எங்கே பார்த்தாலும் கருகருவென்று ஒரே தூசியும் புகையுமாக இருந்தது. கண்ணாடி துகள்களும் கற்களும் மண்ணும் எல்லா இடத்திலும் சிதறிக் கிடந்தன. என் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் யெகோவாவுக்கு உடனே நன்றி சொன்னேன்.” குண்டு வெடித்த கொஞ்ச நேரத்திலேயே சகோதரி ஒலினாவைப் பார்ப்பதற்காக அங்கிருந்த சகோதர சகோதரிகள் வந்தார்கள். அங்கே வந்திருந்த சகோதரர் ஒருவருடைய வீடும் கூட மிகவும் சேதமடைந்திருந்தது. சகோதரி ஒலினா தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்: “அந்தச் சகோதரர்கள் என்னுடைய நிலைமையைப் பார்த்து அதிர்ச்சியில் என்ன பேசுவது என்றே தெரியாமல் அப்படியே நின்று விட்டார்கள். ஆனால் அவர்கள் அங்கே வந்திருந்ததே எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. அவர்கள் என் பக்கத்தில் இருந்தது என் மனதுக்கு ரொம்ப இதமாக இருந்தது.”

செர்கீ என்ற மூப்பர் சபையில் இருந்த சில இளைஞர்களோடு சேர்ந்து சகோதரி ஒலினாவை அடிக்கடி போய்ப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “சகோதரி ஒலினாவின் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு குண்டு வெடித்தது என்று கேட்டவுடனே எனக்கு ரொம்ப பதட்டமாக இருந்தது, அவருக்கு என்ன ஆனதோ என்று யோசித்து ரொம்ப கவலைப்பட்டேன். ஆனால் அவருக்கு அவ்வளவாக அடிபடவில்லை, சிறு சிறு காயங்கள்தான் ஏற்பட்டது என்று தெரிந்த பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. அவர் வீடு நாசமடைந்து கிடந்த சமயத்தில், அவர் எங்களிடம் முதலில் தரச் சொல்லிக் கேட்டது, கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவருக்கு கிடைத்த சில பைபிள் பிரசுரங்களைத்தான். இது என் மனதை மிகவும் தொட்டது.”

நல்ல விஷயம் என்னவென்றால், அவருடைய சொந்தக்காரர்கள் அவர் தங்குவதற்காக ஒரு புது வீட்டைப் பார்த்துக் கொடுத்தார்கள். அவருடைய சபையில் இருப்பவர்களும் அவருக்கு தொடர்ந்து உதவி செய்துகொண்டு வருகிறார்கள். மூப்பர்களும் சகோதரி ஒலினாவிடம் தினமும் ஃபோன் செய்து பேசுகிறார்கள். சபைக் கூட்டங்களை அவர் நன்றாக கேட்க வேண்டும் என்பதற்காக அங்கிருக்கிற சகோதர சகோதரிகள் அவருக்கு காது கேட்கிற மெஷினையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். சகோதரி ஒலினா இப்படிச் சொல்கிறார்:“சில சமயங்களில் எனக்கு தெம்பே இல்லாத மாதிரி இருக்கும். ஆனால் கூட்டங்களுக்குப் போவது எனக்கு சக்தி கொடுத்திருக்கிறது. சகோதர சகோதரிகள் என்னை அடிக்கடி கூப்பிட்டு பேசுவதால் அவர்களுக்கு நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.”

200 பிரஸ்தாபிகளோடு ஒரு ராஜ்ய மன்றத்தின் அடித்தளத்தில் தஞ்சம் புகுந்திருந்த ஒரு தம்பதி தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். அவருடைய மனைவி இப்படி எழுதினார்: “முக்கியமாக, அங்கிருந்த அன்பான மூப்பர்கள் எங்களிடம் காட்டிய அக்கறை என் மனதைக் கவர்ந்தது. இவர்களைப் பார்த்தபோது, தன்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே பணயம் வைத்து சிங்கத்தோடும் கரடியோடும் சண்டை போட்ட தாவீதுதான் என் ஞாபகத்துக்கு வந்தார். எங்களுக்கு சாப்பாடு… தண்ணீர்… விளக்கை எரிய வைப்பதற்கான எரிபொருள்… இதையெல்லாம் வாங்குவதற்காக அங்கிருந்த மூப்பர்கள் தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள். இதனால் சபை கூட்டங்களையும் வெளி ஊழியக் கூட்டங்களையும் எங்களால் தொடர்ந்து நடத்த முடிந்தது. வெளியே தொடர்ந்து குண்டு வெடித்துக் கொண்டிருந்தாலும், தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்த சகோதர சகோதரிகளையும் அந்த மூப்பர்கள் அடிக்கடி போய்ப் பார்த்தார்கள். அவர்களுக்கு சாப்பாடும் தண்ணீரும் கொண்டு போய்க் கொடுத்தார்கள், ஆறுதலாகவும் பேசினார்கள். மூப்பர்கள் இப்படிச் செய்ததால் அவர்கள்மேல் நான் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகமானது. இதற்கு முன்பு வரை நான் அவர்களை சபையில் போதிக்கிறவர்களாக, நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறவர்களாக மட்டும்தான் பார்த்தேன். ஆனால், இப்போது அவர்கள் எங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான மேய்ப்பர்களாக இருப்பதைக் கண்ணாரப் பார்க்கிறேன். இவர்கள் தைரியம், கரிசனை, நம்பகத்தன்மைக்கு முன்மாதிரிகள்! இவர்களுக்கு நான் ரொம்பவே நன்றியோடு இருக்கிறேன்.”

நிவாரண வேலைகளை முன்நின்று நடத்துகிறவர்களைப் பற்றி உக்ரைன் கிளை அலுவலகத்துக்கு அங்குள்ள ஒரு சபையில் இருக்கும் பிரஸ்தாபிகள் இப்படி எழுதினார்கள்: “நாங்கள் உங்களுக்கு மனதார நன்றி சொல்கிறோம். யெகோவா அவருடைய ஊழியர்களைப் பயன்படுத்தி எங்களை எவ்வளவு அக்கறையாக கவனித்துக்கொள்கிறார் என்று யோசித்துப் பார்க்கும்போது நாங்கள் அப்படியே அசந்துபோய் விட்டோம். ‘நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’ என்று இயேசு சொன்ன வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை என்பதை எங்களுடைய அனுபவத்திலிருந்தே தெரிந்துகொண்டோம்.”—யோவான் 13:35.

கீழே இருக்கிற எண்ணிக்கை ஜூன் 21, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.

நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை

  • 42 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்

  • 83 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்

  • 31,185 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள்

  • 495 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன

  • 557 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 1,429 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன

  • 5 ராஜ்ய மன்றங்கள் நாசமடைந்திருக்கின்றன

  • 8 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 34 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன

நிவாரண நடவடிக்கைகள்

  • 27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன

  • 52,348 ஆட்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன

  • 23,433 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்குள்ள சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்