ஜூலை 18, 2022
உக்ரைன்
அறிக்கை #11 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை
யுத்த பூமியில் ‘நன்மை செய்கிறார்கள்’
உக்ரைன் முழுவதும் இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகள் மக்களை மறுபடியும் நேரில் சந்தித்து நல்ல செய்தியைச் சொல்வதால் அதிக சந்தோஷமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு நல்ல நல்ல அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன. நம்முடைய பிரசுரங்களை வீல் ஸ்டேண்டுகளில் மறுபடியும் பார்க்கும்போது அங்கிருக்கிற மக்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்று வட்டார கண்காணிகளும் உள்ளூர் மூப்பர்களும் அறிக்கை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்தப் பகுதியில் இருக்கிறவர்கள், ‘உங்களை கொஞ்ச நாட்களாக பார்க்கவே முடியவில்லையே’ என்றும்கூட சொன்னதாக தெரிவிக்கிறார்கள்.
பெருந்தொற்றுக்கு முன்பு தான் சந்தித்த நபர்களை மறுபடியும் போய் சந்திக்க வேண்டும் என்று ஒடெசா மாகாணத்தில் உள்ள செர்கிவ்கா சபையில் இருக்கும் டட்டியானா முடிவு செய்தார். அவர் இப்படிச் சொன்னார்: ”ஊழியத்தை திரும்பவும் ஆரம்பிப்பதற்காக நாங்கள் எடுத்த முயற்சியை யெகோவா முதல் நாளிலிருந்தே ஆசீர்வதித்ததை நான் பார்த்தேன்.” ஒரு சந்தர்ப்பத்தில், பெருந்தொற்றுக்கு முன்பு தன்னிடம் பைபிள் படிக்க விருப்பமில்லை என்று சொல்லியிருந்த ஒரு பெண்ணை அவர் மறுபடியும் சந்தித்தார். ஆனால் இந்தச் சமயத்தில் அந்தப் பெண் பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ரொம்ப ஆர்வமாக இருந்தார். உடனே பைபிள் படிப்புக்கும் ஒத்துக்கொண்டார். டட்டியானா இப்படிச் சொல்கிறார்: “நான் திரும்பவும் போய் என்னுடைய பழைய மறுசந்திப்புகளை சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும் பைபிள் படிப்பைப் பற்றி சொல்ல வேண்டும்!”
யவ்ஹினியும் லீலியாவும் மரியுபோலைச் சேர்ந்த பிரஸ்தாபிகள். ஆனால், போர் நடப்பதால் அவர்கள் தங்கள் வீட்டை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு ஓடிப் போக வேண்டியிருந்தது. இப்போது அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஊழியம் செய்து வருகிறார்கள். இப்படித் தொடர்ந்து ஊழியம் செய்வது தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி யோசிக்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்திருப்பதாக சொல்கிறார்கள். “எங்கள் வாழ்க்கை முன்பு இருந்ததுபோல் இருக்காது என்று எங்களுக்கு தெரியும். இங்கே புதிதாக எங்கள் வாழ்க்கையைத் தொடங்குவது கஷ்டம்தான். ஆனால் யெகோவாவின் கைகள் சிறியது இல்லை என்பதை நாங்கள் புரிந்திருக்கிறோம். எங்களுக்கு யெகோவாவுடைய சக்தியும் உதவி செய்கிறது, இந்தப் புதிய இடத்தில் புது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எங்கள் சகோதர சகோதரிகளும் உதவத் தயாராக இருக்கிறார்கள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
அந்த நாட்டின் மற்ற இடங்களில் இருக்கிறவர்களுக்கு நம்முடைய சகோதரர்கள் தங்களுடைய நல்ல செயல்களால் சாட்சி கொடுத்து வருகிறார்கள். மைக்கோலைவ் நகரத்தில் இருக்கிற சகோதரர்களில் சிலர் ஒன்றுசேர்ந்து ஒரு சர்வதேச மனிதாபிமான நிவாரண அமைப்புக்கு உதவி செய்தார்கள். பொதுமக்களுக்கு வழங்குகிற நிவாரணப் பொருள்களை வைப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய குடோனை ரிப்பேர் செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் உதவி செய்தார்கள். அவர்கள் அங்கிருந்த தண்ணீர் பைப்புகளை சரி பார்த்தார்கள், அலமாரிகளைத் தயாரித்தும் கொடுத்தார்கள். அதோடு, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த பல டன் பொருள்களை தனித்தனியாக பிரித்து வைப்பதற்கும் உதவினார்கள். அங்கே செய்யப்பட்ட வேலைகள் எல்லாவற்றையும் பார்த்தபோது அந்த மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. “இவ்வளவு அருமையாக இதை செய்து முடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று அவர் சொன்னார்.
உக்ரைனில் இருக்கிற சகோதர சகோதரிகள் சவாலான சூழ்நிலைமைகளைச் சந்திக்கிறார்கள். இருந்தாலும், ஊழியத்தைச் சுறுசுறுப்பாக செய்வதால் கிடைக்கிற சந்தோஷத்தையும் ‘நன்மை செய்வதால்’ கிடைக்கிற சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்கள்.—கலாத்தியர் 6:9.
கீழே இருக்கிற எண்ணிக்கை ஜூலை 13, 2022-ன் கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.
நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை
42 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்
97 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்
28,683 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள்
524 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன
588 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
1,554 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
5 ராஜ்ய மன்றங்கள் நாசமடைந்திருக்கின்றன
10 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
36 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
நிவாரண நடவடிக்கைகள்
27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன
52,947 ஆட்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன
23,863 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்