ஆகஸ்ட் 12, 2022
உக்ரைன்
அறிக்கை #12 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை
“போரே வந்தாலும் சீஷராக்கும் வேலையை தடுத்து நிறுத்த முடியாது”
ஜூலை 23 முதல் 31வரை நடந்த 2022-க்கான ‘சமாதானத்துக்காகப் பாடுபடுங்கள்’! மாநாட்டில், உக்ரைன் முழுவதும் இதுவரை ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிகளும் அங்கிருந்து மற்ற நாடுகளுக்குத் தப்பித்துப் போன பிரஸ்தாபிகளும் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 2 கணக்குப்படி, மொத்தமாக உக்ரைனைச் சேர்ந்த 1113 பேர் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். உக்ரைனில் இருக்கிற ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “போரே வந்தாலும் சீஷராக்கும் வேலையை தடுத்து நிறுத்த முடியாது, ஏனென்றால் ‘எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்’ என்று இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார்.”—மத்தேயு 28:20.
சில அனுபவங்களை அறிக்கை செய்வதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
லுகான்சுக் பகுதியில் கிரெமின்னாவில் இருக்கிற நட்டாலியாவுக்கு 63 வயது. அவரும் அவருடைய இரண்டு மகள்களும் 1990-களில் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். அவருடைய இரண்டு மகள்களும் நல்ல முன்னேற்றம் செய்து ஞானஸ்நானம் எடுத்துவிட்டார்கள். ஆனால் அவர் மட்டும் எடுக்கவில்லை. போர் ஆரம்பித்தபோது, யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிற ஒரு குடும்பத்தார் பாதுகாப்பான இடத்துக்குத் தப்பித்துப் போனபோது நட்டாலியாவையும் தங்களோடு அழைத்துக்கொண்டு போனார்கள். இவானோ-பிராங்கிவ்ஸ்க் என்ற இடத்தில் இருக்கிற ராஜ்ய மன்றத்தில் அவரைப் பத்திரமாகத் தங்க வைத்தார்கள்.
இதைப் பற்றி நட்டாலியா சொல்லும்போது, “அந்தப் பயங்கரமான குண்டுவெடிப்புகளைப் பார்த்து பார்த்து நான் சிரிப்பது என்றால் என்னவென்றே மறந்துவிட்டேன் . சகோதர சகோதரிகள் என்மேல் உண்மையான அன்பு காட்டினார்கள். என்னை அவர்கள் இவ்வளவு அக்கறையாக பார்த்துக்கொள்வார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த சமயத்தில்தான் யெகோவாமேல் நான் வைத்திருந்த அன்பு கொஞ்சம் கொஞ்சமாக மலர ஆரம்பித்தது. நான் பைபிளை நிறைய நேரம் வாசித்தேன். ஒரு சகோதரி எனக்கு இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பித்தார். அவர் எனக்கு யெகோவா கொடுத்த ஒரு பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்’ என்ற முக்கியமான கட்டளைக்கு இசைவாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று அவர் சொல்கிறார்.—மத்தேயு 22:37.
செர்கசியில் இருக்கிற ஓலியா, போர் தொடங்கிய சமயத்தில் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக இருந்தார். மார்ச் 6 அன்று, அவரும் அவருடைய மகளும் பேத்தியும் போலந்துக்குத் தப்பித்து போனார்கள். அவர் இப்படிச் சொல்கிறார்: “நாங்கள் எங்களுடைய கோ பேக்-ஐ மட்டும்தான் எடுத்துக்கொண்டு வந்தோம். இங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் எங்கள் மூன்று பேரையும் ரொம்ப நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். யெகோவாவுடைய அமைப்பு ஒற்றுமையாக இருக்கிறது, அவருடைய சக்தியால் செயல்படுகிறது என்பதை இதைப் பார்த்த பிறகு நான் உறுதியாக நம்ப ஆரம்பித்துவிட்டேன். இதற்குப் பிறகு, என் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று முடிவே பண்ணிவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப கஷ்டமான சமயத்தில் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். அதனால் நான் அவருக்கு சேவை செய்து என் நன்றியைக் காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”
தோனெஸ்க் பகுதியில் இருக்கிற யூலியாவுக்கு 18 வயது. அவளுடைய குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகள். ஆனால் அவள் மட்டும் ஞானஸ்நானம் எடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. போர் தொடங்கி கொஞ்ச நாளுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தை அவள் சொல்கிறாள்: “நான் தரையில் விழுந்து கிடந்தேன், சீக்கிரம் செத்துவிடுவேன் என்றே நினைத்தேன். என் குடும்பம் வாழ்ந்துகொண்டிருந்த மொத்த தெருவும் சின்னாபின்னமாக கிடந்தது. ஆனால் நாங்கள் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டோம். இந்த சம்பவம் நடந்த பிறகு நான் ரொம்ப ஜெபம் பண்ணினேன். யெகோவாவுடைய நல்ல குணங்களைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். நான் அவரிடம் நெருங்கிப் போனேன். என்னுடைய வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகமே என்னை விட்டுப் போய்விட்டது. என் ஜெபத்துக்குப் பதில் கொடுப்பதன் மூலமாக என்னிடம் ரொம்ப நெருக்கமாக இருக்கிறார் என்பதை யெகோவா காட்டினார். முன்பெல்லாம் நான் யெகோவாவைப் பற்றி சும்மா தெரிந்துதான் வைத்திருந்தேன். ஆனால் இப்போது நான் அவரை ரொம்ப நேசிக்கிறேன்.” யூலியா ஜூலை 23-ம் தேதி ஞானஸ்நானம் எடுத்தாள்.
போர் தொடங்கியபோது, டேவிட் என்ற 11 வயது பையனின் குடும்பத்தார் ஜெர்மனிக்கு தப்பித்துப் போய்விட்டார்கள். அவன் தன்னுடைய ஒன்பது வயதிலிருந்தே ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக இருக்கிறான். ஆனால் இப்போது யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆர்வமாக இருக்கிறான். அவன் சொல்லும்போது, “நான் யெகோவாவை ரொம்ப நேசிக்கிறேன். அவருடைய ப்ரெண்ட் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனாலேயே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன். நான் ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவாவுடைய சூப்பரான குடும்பத்தில் நானும் ஒரு ஆளாக ஆனதை நினைத்து சந்தோஷத்தில் அழுதேவிட்டேன். யெகோவாவைப் பற்றியும் அவர் மனிதர்களுக்கு என்னென்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் நான் ஒரு பயனியராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எங்கள் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் எனக்கு ஆசை. அதனால் கண்டிப்பாக ஒரு நாள் நான் ஒரு உதவி ஊழியனாக ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய பெரிய ஆசையே பெத்தேலுக்குப் போய் சேவை செய்வதுதான். 2018-ல், லிவீவ்வில் இருக்கிற கிளை அலுவலகத்தைப் போய் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து இது என்னுடைய லட்சியமாகவே ஆகிவிட்டது” என்று அவன் சொல்கிறான்.
கீவ்வில் இருக்கிற ஒலினா, 2011-ல் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆனார். ஆனால் அவர் பத்து வருஷமாக செயலற்ற பிரஸ்தாபியாக இருந்தார். 2020-ல் சபை மூப்பர்கள் அவரைப் போய்ப் பார்த்து யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள் என்று சிற்றேட்டை அவருக்குக் கொடுத்தார்கள். ஒலினா இப்படிச் சொல்கிறார்: “நான் திரும்பவும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன், கூட்டங்களுக்கு போகவும் ஆரம்பித்தேன். ஆனால், அதற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து திரும்பவும் நிறுத்திவிட்டேன். போர் நடந்துகொண்டிருந்தபோது யெகோவா என்னுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார். அப்போதுதான் யெகோவா என்னைப் பாதுகாக்கிறார், என்மேல் அன்பு வைத்திருக்கிறார், எனக்கு மன சமாதானம் கொடுத்திருக்கிறார் என்பதையெல்லாம் நான் புரிந்துகொண்டேன். நான் ரோமானியாவுக்குத் தப்பித்துப் போனேன். அங்கே சாட்சிகளை சந்தித்தேன். அங்கிருக்கிற சகோதர சகோதரிகள் என்மேல் காட்டிய அன்பும் அக்கறையும் குளிருக்கு இதமாக யெகோவா எனக்கு கதகதப்பான ஒரு போர்வையை போர்த்திவிட்ட மாதிரி இருந்தது.” ஒலினா ஜூலை 24-ஆம் தேதி ஞானஸ்நானம் எடுத்தார். “யெகோவா என்னிடம் பொறுமையாக நடந்துகொண்டதற்காக நான் அவருக்கு நன்றி சொல்கிறேன். ‘என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது’ என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன்” என்றும் அவர் சொல்கிறார்.—பிலிப்பியர் 4:13.
கீழே இருக்கிற எண்ணிக்கை ஆகஸ்ட் 2, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.
நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை
43 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்
97 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்
22,568 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள்
586 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன
613 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
1,632 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
5 ராஜ்ய மன்றங்கள் நாசமடைந்திருக்கின்றன
10 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
37 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
நிவாரண நடவடிக்கைகள்
27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன
53,836 ஆட்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன
24,867 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்குள்ள சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்