Skip to content

கட்டுமான வாலண்டியர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கிற சேதமடைந்த வீடுகளை ரிப்பேர் செய்கிறார்கள்

டிசம்பர் 29, 2022
உக்ரைன்

அறிக்கை #15 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

அறிக்கை #15 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

பிப்ரவரி 2022-ல் உக்ரைனில் போர் தொடங்கிய சமயத்திலிருந்து யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளில் சுமார் 3000 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்திருக்கின்றன, இல்லையென்றால் நாசமடைந்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில், பேரழிவு நிவாரண டிபார்ட்மென்ட் (DRD) மற்றும் உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான டிபார்ட்மென்ட் ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் உக்ரைனில் இருக்கிற சகோதரர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கிற சேதமடைந்த வீடுகளை ரிப்பேர் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீடுகளில் இருந்த நாசமடைந்த கூரைகளையும் ஜன்னல்களையும் புதிதாக மாற்றியிருக்கிறார்கள், சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகளையும் செய்திருக்கிறார்கள். ஒருசில சந்தர்ப்பங்களில் ஒரு வீடு முற்றிலுமாக நாசமடைந்துவிட்டால், பக்கத்தில் இருந்த கேரேஜ் அல்லது அதுபோன்ற இடங்களில் சிறிய வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இதுவரைக்கும் 37 கட்டுமான வேலைகள் முடிந்துவிட்டன, 48 வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தக் கொந்தளிப்பான காலங்களில் கட்டுமான வேலைகளை செய்வது ஒரு பெரிய சவால்தான். ஆனாலும் இந்த நிவாரண வேலைக்கு உதவி செய்வதை சகோதரர்கள் நிறுத்தவே இல்லை. கீவ் பகுதி, வெலைகா டைமெர்கா என்ற இடத்தில் இருக்கும் 70 வயதான சகோதரி ஸ்வெட்லானா இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய வீட்டின் கூரையையும் முன்பக்கத்தையும் ரிப்பேர் செய்கிற அளவுக்கு என் கையில் காசு இல்லை. ஆனால் யெகோவா எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியே கொடுத்துவிட்டார். நம்முடைய சகோதரர்கள் வந்து, மூன்றே நாளில் எல்லா வேலைகளையும் முடித்து கொடுத்துவிட்டார்கள்.”

கீவ் பகுதியில், ஹொரன்கோவில் இருக்கும் சகோதரி நாடியா நம்முடைய நிவாரண வேலைகள், ஊழியத்துக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது என்று சொல்கிறார். “சகோதரர்கள் செய்துகொடுத்த வேலைகள் சுற்றி இருக்கிற மக்களுக்கு ஒரு பெரிய சாட்சியாக இருக்கிறது. எனக்கு முன்பின் தெரியாத மக்கள் கூட யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கிற உண்மையான அன்பைப் பற்றிப் பேசுகிறார்கள். நம்முடைய சகோதர சகோதரிகள் வந்து எனக்கு உதவி செய்துகொடுத்தார்கள் என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை” என்று அவர் சொல்கிறார்.

ஒரு சிலர் தங்கள் சொந்த வீடுகளை இழந்திருந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வந்தார்கள். அதற்கு ஒரு உதாரணம்தான் எவ்ஹன்- டட்டியானா தம்பதி. அந்த தம்பதியின் வீடு குண்டு வெடிப்பால் தரைமட்டமானது. ஆனால் தாங்கள் இழந்துவிட்ட விஷயங்களைப் பற்றியே அவர்கள் யோசித்துக்கொண்டிருக்காமல் சக வணக்கத்தாருக்கு உதவி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டார்கள். எவ்ஹன் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் வாழ்க்கையில், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்குத்தான் எப்போதுமே முதலிடம் கொடுத்திருக்கிறோம். இப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வதால் எங்களுடைய பிரச்சினைகளை எங்களால் நன்றாக சமாளிக்க முடிகிறது.”

கீவ் பகுதி, வெலைகா டைமெர்கா என்ற இடத்தில் நாசமடைந்த ஒரு வீடு, முன்பும் இப்போதும்

கீவ் பகுதி, ஹோஸ்டோமெலில் இருக்கிற சகோதரி லிடியாவின் வீட்டை சகோதரர்கள் ரிப்பேர் செய்துகொடுத்தார்கள். இதனால் நிவாரண வேலையில் உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை லிடியாவுக்கும் வந்தது. அவர் இப்படிச் சொல்கிறார்: “இரண்டு வாரங்களாக, கிட்டத்தட்ட 16 சகோதர சகோதரிகள் வந்து என்னுடைய வீட்டை ரிப்பேர் செய்துகொடுத்தார்கள். அதனால் நான் இப்போதே புதிய உலகத்தில் வாழ்கிறேனோ என்று எனக்கு தோன்றியது. நானும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”

உக்ரைன் கிளை அலுவலக குழுவில் சேவை செய்கிற ஒரு சகோதரர், தங்கள் வீட்டை இழந்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நிவாரண வேலை நடைபெறுகிற இடத்துக்குப் போனார். அவர் இப்படிச் சொல்கிறார்: “உக்ரைனில் இருக்கும் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதில் ரொம்ப ஸ்பெஷல்தான். இருந்தாலும், இந்தப் போர் சமயத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் இன்னும் நெருக்கமாகிவிட்டார்கள். நம் அன்பான சகோதரர்களுக்கு உதவி கிடைப்பதால் ஊழியத்தை அவர்கள் இன்னும் அதிகமாக செய்கிறார்கள். 2 கொரிந்தியர் 9:12 சொல்கிற மாதிரி கடவுளுக்கு தாராளமாக நன்றி சொல்ல இது நிறைய பேரை தூண்டியிருக்கிறது. இதைப் பார்ப்பது மனதுக்கு ரொம்ப இதமாக இருக்கிறது.”

கீழே இருக்கிற எண்ணிக்கை டிசம்பர் 20, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.

நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை

  • 47 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்

  • 97 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்

  • 11,477 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்குத் தப்பித்துப் போயிருக்கிறார்கள்

  • 590 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன

  • 645 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 1,722 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன

  • 7 ராஜ்ய மன்றங்கள் நாசமடைந்திருக்கின்றன

  • 19 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 68 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன

நிவாரண நடவடிக்கைகள்

  • 26 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன

  • 54,212 ஆட்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன

  • 26,892 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்