Skip to content

இடது: கீவ்வில் நாசமடைந்த ஒரு கட்டிடம். மேலே வலது: ஒரு அடித்தளத்தில் பாதுகாப்பாக தங்கியிருக்கும் சகோதர சகோதரிகள் JW லைப்ரரி ஆப்-ல் இருக்கிற விஷயங்களைப் படித்து ஆறுதல் அடைகிறார்கள். கீழே வலது: உக்ரைனில் இருந்து ஸ்லோவாக்கியாவுக்கு அகதிகளாக போன ஒரு குடும்பத்தார் அங்கே உணவு சாப்பிடுகிறார்கள்

மார்ச் 11, 2022
உக்ரைன்

அறிக்கை #2 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

அறிக்கை #2 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

போர் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிற மரியுபோல் போன்ற பகுதிகளில் மின்சாரம் இல்லை, அதனால், குளிரைத் தாக்குப்பிடிக்க உதவும் ஹீட்டர்களைப் பயன்படுத்த முடியவில்லை. தொலைபேசி இணைப்புகளும் இன்டர்நெட் வசதிகளும் சரியாக வேலை செய்யவில்லை. நிறைய வீடுகளில் ஜன்னல்கள் நாசமாக்கப்பட்டிருக்கின்றன, உணவுப் பொருள்களுக்கும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்கிறது. 2,500-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் மரியுபோலில் இருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். புசா, செர்னிகிவ், ஹோஸ்டோமெல், இர்பின், கீவ், சுமி போன்ற சில நகரங்களில் தப்பித்துப் போவதற்கான பாதைகள் திறக்கப்பட்டதால் நிறைய பேர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம்முடைய சகோதர சகோதரிகள் நிறைய பேரும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குப் போயிருக்கிறார்கள்.

ஹோஸ்டோமெல் பகுதியில் வசிக்கிற 36 வயதுள்ள ஒரு சகோதரர் மூப்பராகவும் பயனியராகவும் சேவை செய்கிறார். அவர் தன்னுடைய மனைவியோடும் பெற்றோரோடும் அங்கிருந்து தப்பித்துப் போனார். அந்த நகரத்தில் போர் தொடங்கியபோது என்ன நடந்தது என்று அவர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிறார்:

“எங்கள் வீட்டுக்கு மேலேயே ஹெலிகாப்டர் பறந்தது. ரோட்டில் எங்கே பார்த்தாலும் ராணுவ வண்டிகள் இருந்தன. போர் வீரர்கள் எங்களுடைய வீட்டை சுற்றிவளைத்துவிட்டார்கள். அந்தச் சமயத்தில் நாங்கள் அடித்தளத்தில் ஒளிந்துகொண்டிருந்தோம். அதில் ஒருவர் அந்த அடித்தளத்தைப் பார்த்து நிறைய தடவை துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒரு துப்பாக்கி குண்டு எங்கள் அம்மாவுடைய ‘கோ பேக்’-ஐ (go bag) பதம் பார்த்தது. நல்லவேளையாக எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. எங்கள் தலைக்குமேல் நிறைய குண்டுகள் வெடித்துக்கொண்டே இருந்தன. துப்பாக்கி சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட மூன்று, நான்கு மணிநேரம் நாங்கள் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தோம். . . . அடுத்த நாள் காலையில் நாங்கள் எங்களுடைய வண்டியை எடுத்துக்கொண்டு அங்கே இருந்து கிளம்பும்போது எங்களுக்கு ரொம்ப பக்கத்திலேயே சண்டை தொடங்கியது. ரோட்டில் எங்கே பார்த்தாலும் பீரங்கியை நிறுத்தி வைத்திருந்தார்கள். . . . அது ரொம்ப ஆபத்தானதாக இருந்தது. ஆனால் அங்கே தங்கியிருந்தது அதைவிட ஆபத்தானதாக இருந்தது.

“இந்த எல்லா சம்பவங்களாலும் எங்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாற்றிவிட்டது. ஆனால், பைபிள் நியமங்களின்படி எப்படி வாழ வேண்டும் என்று நாங்கள் கற்றுக்கொண்டோம். உதாரணமாக, நாளைய தினத்தை நினைத்து எப்படிக் கவலைப்படாமல் இருப்பது... அத்தியாவசிய பொருள்களை வைத்து எப்படித் திருப்தியாக வாழ்வது... ரொம்ப கஷ்டமான சூழ்நிலையிலும் யெகோவாவை எப்படி முழுமையாக நம்பியிருப்பது... என்றெல்லாம் கற்றுக்கொண்டோம்.”

உக்ரைனில் இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகள் சகித்துக்கொண்டிருக்கிற கஷ்டங்கள் எல்லாம் நம்முடைய கடவுளான யெகோவாவுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். அவர் அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வார், அதில் சந்தேகமே இல்லை.—2 பேதுரு 2:9.

ஒரு குடும்பம் தங்கள் வீட்டின் அடித்தளத்தில் பாதுகாப்பாக தங்கியிருக்கிறார்கள். பிற்பாடு, பாதுகாப்பான இடத்துக்குத் தப்பித்துப் போனார்கள்

மார்ச் 10, 2022 கணக்குப்படி உக்ரைனிலிருந்து வந்த அறிக்கைக்கு இசைவாக கீழே எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை

  • 2 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்

  • 8 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்

  • 25,407 பிரஸ்தாபிகள் உக்ரைனில் வேறொரு இடத்துக்கு மாறிப் போயிருக்கிறார்கள்

  • 25 வீடுகள் நாசமடைந்துவிட்டன

  • 59 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 222 வீடுகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன

  • 7 ராஜ்ய மன்றங்கள் சேதமடைந்திருக்கின்றன

நிவாரண நடவடிக்கைகள்

  • 27 பேரழிவு நிவாரண குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன

  • 10,566 பிரஸ்தாபிகளைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன

  • 9,635 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்குள்ள சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்