Skip to content

இடது: உக்ரைனில் ஒரு அடித்தளத்தில் நம்முடைய சகோதரிகள் பாதுகாப்பாக தங்கியிருக்கிறார்கள். வலது: உக்ரைனில் நம்முடைய சகோதரர்கள் நிவாரணப் பொருள்களை எடுத்துக்கொண்டு வந்து அடுக்கி வைக்கிறார்கள்

மார்ச் 23, 2022
உக்ரைன்

அறிக்கை #4 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

அறிக்கை #4 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

மரியுபோல் நகர தெருக்களில் சண்டையும் குண்டுவெடிப்புகளும் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால் அங்கே இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக நாங்கள் ஊக்கமாக ஜெபம் செய்துகொண்டே இருக்கிறோம். வருத்தமான விஷயம் என்னவென்றால், அங்கே நடந்த குண்டு வெடிப்புகளில் நம்முடைய சகோதர சகோதரிகள் ஆறு பேர் இறந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இதுவரை உக்ரைனில் 10 சகோதர சகோதரிகள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். கடந்த வாரத்தில் 1,000-க்கும் அதிகமான ஆட்கள் பாதுகாப்பாகத் தங்கியிருந்த தியேட்டரின்மேல் குண்டு போடப்பட்டதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன. ஆனால் அதில் நம்முடைய சகோதரர்கள் ஒருவர்கூட கொல்லப்படவில்லை. ஒரு சிலருக்கு சின்னச் சின்ன காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.

கிட்டத்தட்ட 750 சகோதரர்கள் மரியுபோலில் இருந்து பத்திரமாக வெளியேறிவிட்டார்கள். ஆனால், இன்னும் கிட்டத்தட்ட 1600 பேர் அங்கேயே இருக்கிறார்கள். தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த நகரத்தின் கிழக்குப் பகுதியில்தான் இவர்களில் நிறையப் பேர் இப்போது இருக்கிறார்கள்.

முன்பு வந்த ஒரு அறிக்கையில் தெரிவித்தபடி, நம்முடைய ஒரு மாநாட்டு மன்றமும், ராஜ்ய மன்றமும் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் கிட்டத்தட்ட 200 சகோதர சகோதரிகள் பாதுகாப்பாக தங்கியிருக்கிறார்கள். கொஞ்ச நேரத்துக்கு அவர்களால் நம்மோடு தொடர்புகொள்ள முடிந்தபோது அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

“குண்டு வெடிப்பு நடந்து கொண்டிருந்தபோது நிறைய சகோதர சகோதரிகள் ரொம்பவே பயந்துவிட்டார்கள். ஒருசிலர் அழவே ஆரம்பித்துவிட்டார்கள். வெளியே குண்டு வெடிக்கிற சத்தம் கேட்டபோது, குண்டு எங்கள்மேல் விழுந்தோ இல்லையென்றால் அதிலிருந்து வருகிற நெருப்பு எங்கள்மேல் பட்டோ நாங்கள் செத்துவிடுவோம் என்று நினைத்தோம். அப்போது ஒரு மூப்பர் எங்களிடம் ராஜ்ய பாடல்கள் பாடச் சொன்னார். நாங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து 10-லிருந்து 15 பாடல்கள் அடுத்தடுத்து பாடினோம். குண்டு வெடிக்கிற சத்தம் அதிகமாக அதிகமாக கட்டிடமும் இன்னும் அதிகமாக குலுங்க ஆரம்பித்தது. அப்போது நாங்கள் இன்னும் சத்தமாக பாட ஆரம்பித்தோம். அதற்குப் பிறகு சங்கீதம் 27-ஐ வாசித்து அதைப் பற்றிக் கலந்து பேசினோம். அதற்குப் பிறகு ஒவ்வொருவரும் எங்களுக்குப் பிடித்த பைபிள் வசனங்களைப் பற்றிச் சொல்லி, அது எங்களை எப்படிப் பலப்படுத்துகிறது என்றும் சொன்னோம். . . . ‘கனிவும் இரக்கமும் உள்ள தகப்பனும் எல்லா விதமான ஆறுதலின் கடவுளுமாக’ இருக்கிற யெகோவா ரொம்ப கஷ்டமான சமயத்திலும் எங்களுக்கு மன அமைதி தருகிறார் என்பதை நாங்கள் நேரடியாகவே அனுபவித்தோம்.”—2 கொரிந்தியர் 1:3, 4.

தங்களையே தியாகம் செய்கிற மூப்பர்களும், உள்ளூர் DRC குழுக்களில் சேவை செய்கிறவர்களும் சக வணக்கத்தாரைத் தேடிக் கண்டுபிடித்து, உணவையும் மருந்தையும் தேவையில் இருக்கிறவர்களுக்கு கொண்டுபோய் கொடுக்கிறார்கள். இவற்றையெல்லாம் அவர்களுடைய உயிரையே பணயம் வைத்து செய்கிறார்கள். சில சமயங்களில் இப்படித் தேடிப் போகும்போது துப்பாக்கிக் குண்டுகள் தங்கள்மேல் பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தச் சகோதரர்கள் தரையோடு தரையாக தவழ்ந்து போக வேண்டியிருக்கிறது. சக வணக்கத்தாருக்காக தங்கள் ‘உயிரையே பணயம் வைக்கிற’ இந்தச் சகோதரர்களை நினைக்கும்போது எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.—ரோமர் 16:4.

எரிபொருளும் மின்சாரமும் இல்லாததால் அந்த ஊருக்குள் இருக்கிற தைரியமுள்ள சகோதரிகள், வீட்டுக்கு வெளியே விறகுகளை வைத்து உணவு சமைக்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த உணவு வயதானவர்களுக்கும் உடம்பு முடியாத பிரஸ்தாபிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. நம்முடைய நண்பர்கள் நிறைய பேர் தங்களுடைய வீடு, கார், சொத்துக்கள் எல்லாவற்றையுமே இழந்துவிட்டார்கள். இருந்தாலும் சக வணக்கத்தார் காட்டுகிற அன்புக்கும் அக்கறைக்கும் ரொம்ப நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

சகோதரிகள் தாங்கள் பாதுகாப்பாகத் தங்கியிருக்கும் அடித்தளத்தின் வாசலுக்கு வெளியே உணவு சமைக்கிறார்கள்

பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கிறவர்கள் யெகோவாவைத் தவறாமல் வணங்குவதற்காக ஒன்றுகூடி பைபிளைப் படிக்கிறார்கள். முடியும்போதெல்லாம் பைபிளில் இருக்கிற நல்ல செய்தியை மற்றவர்களிடமும் சொல்கிறார்கள்.

கீழே இருக்கிற எண்ணிக்கை மார்ச் 22, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்

நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை

  • 10 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்

  • 27 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்

  • 33,180 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு மாறிப் போயிருக்கிறார்கள்

  • 78 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன

  • 102 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 484 வீடுகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன

  • 1 ராஜ்ய மன்றம் நாசமடைந்துவிட்டது

  • 4 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 18 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன

நிவாரண நடவடிக்கைகள்

  • 27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன

  • 25,069 பிரஸ்தாபிகளைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன

  • 14,308 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்குள்ள சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்