ஏப்ரல் 1, 2022
உக்ரைன்
அறிக்கை #5 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை
வருத்தகரமாக, மார்ச் 29, 2022 கணக்குப்படி மரியுபோல் நகரத்தில் நம்முடைய சகோதர சகோதரிகளில் இன்னும் ஏழு பேர் இறந்துவிட்டார்கள். இதுவரை உக்ரைனில் ஒட்டுமொத்தமாக 17 சகோதர சகோதரிகள் இந்தப் போருக்குப் பலியாகியிருக்கிறார்கள்.
உக்ரைனில் இருக்கிற பேரழிவு நிவாரணக் குழுக்களில் (DRCs) சேவை செய்பவர்கள் நிவாரண பொருள்களைக் கொடுப்பதற்காக ராத்திரி பகல் என்றும் பார்க்காமல் கடினமாக உழைக்கிறார்கள். போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட இடங்களில் இருக்கிற தங்களுடைய சக வணக்கத்தாரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக தங்கள் உயிரைக் கூட பணயம் வைக்கிறார்கள்.
உதாரணமாக DRC-ல் சேவை செய்கிற சகோதரர்கள், போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற நகரங்களான கார்கீவ், கிராமடோர்ஸ்க், மரியுபோல் போன்ற இடங்களில் இருக்கிறவர்களுக்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வெற்றிகரமாக கொண்டுபோய் கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2700 பிரஸ்தாபிகளுக்கு உணவையும் மருந்தையும் கொண்டுபோய்க் கொடுப்பதற்காக DRC-ல் இருக்கிற ஒரு சகோதரர் தினமும் 500-க்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் செய்கிறார். அதற்காக நிறைய ராணுவ சோதனைச் சாவடிகளை அவர் கடந்துபோக வேண்டியிருக்கிறது.
போர் நடக்கும் இடங்களில் இருக்கிற சகோதர சகோதரிகளை பத்திரமாக மீட்பதற்காக DRC குழுக்களைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்து வசதிகளைக் கூட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். செர்னிகிவ் DRC-ல் சேவை செய்யும் ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “போர்வீரர்கள் வீடுகளைக் குறிவைத்து குண்டுகளைப் போட ஆரம்பித்தபோது ஊருக்குள்ளே இருப்பது ரொம்பவும் ஆபத்து என்பது தெளிவாகத் தெரிந்தது. குண்டு வெடிப்புகள் நடந்துகொண்டிருந்ததால் மின்சாரமும் இன்டர்நெட் வசதியும் சுத்தமாக இல்லாமல் போனது. அதனால் ஊரை விட்டு உடனே வெளியேறுவதற்கான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை மூப்பர்கள் ஊருக்குள் விரைந்து சென்று அடித்தளத்தில் பத்திரமாக தங்கியிருந்த பிரஸ்தாபிகளுக்குச் சொன்னார்கள்.”
சொந்தமாக போக்குவரத்து நிறுவனம் வைத்திருந்த ஒருவர், தன்னுடைய வேன்களையும் பஸ்சையும் பயன்படுத்துவதற்கு ஒத்துக்கொண்டார். செர்னிகிவில் இருக்கிற நம்முடைய 254 சகோதர சகோதரிகளைப் பத்திரமாக மீட்பதற்காக ஒன்பது தடவை அவர் தன்னுடைய வண்டியில் போய்வர வேண்டியிருந்தது. ஒரு சமயம், அவருடைய பஸ் அந்த ரோட்டை பத்திரமாக கடப்பதற்காக பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி அதை ரிப்பேர் கூட செய்தார். அவர் செய்த இந்த உதவிக்காக நம்முடைய சகோதரர்கள் அவருக்கு ரொம்பவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தொடர்கதையாக நீண்டுகொண்டே போகிற இந்தப் போரில் தங்களுடைய அன்பானவர்களை இழந்தவர்களுக்காக நாங்களும் வருந்துகிறோம். மரணமும் துக்கமும் இருக்கவே இருக்காது என்று கடவுளுடைய வார்த்தையான பைபிள் தருகிற இந்த நம்பிக்கை நிஜமாகும் நாளுக்காக நாம் எல்லாருமே ஆவலாக காத்திருக்கிறோம்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
கீழே இருக்கிற எண்ணிக்கை மார்ச் 29, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.
நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை
17 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்
35 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்
36,313 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு மாறிப் போயிருக்கிறார்கள்
114 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன
144 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
612 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
1 ராஜ்ய மன்றம் நாசமடைந்திருக்கிறது
7 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
23 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
நிவாரண நடவடிக்கைகள்
27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன
34,739 பிரஸ்தாபிகளைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன
16,175 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்