ஏப்ரல் 29, 2022
உக்ரைன்
அறிக்கை #7 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை
2,10,000-க்கும் அதிகமானவர்கள் நினைவு நாளுக்கு வந்தார்கள்
உக்ரைன் முழுவதும் இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகள் யெகோவாவின் உதவியோடு கிறிஸ்துவின் மரண நினைவு நாளை அனுசரித்தார்கள் என்று சொல்வதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். மேற்கு உக்ரைனில் தஞ்சம் புகுந்திருந்த சகோதர சகோதரிகள் அங்கிருந்த பல ராஜ்ய மன்றங்களில் நினைவு நாளை அனுசரித்தார்கள். நிறைய இடங்களில் சிறு சிறு தொகுதிகளாக சகோதரர்கள் நினைவு நாளை நடத்தினார்கள். வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலைமையில் இருந்தவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அதில் கலந்துகொண்டார்கள்.
நினைவு நாள் அன்று, அந்த நாட்டின் பல இடங்களில் விமானம் மூலமாக தாக்குதல் நடத்தப்படும் என்பதற்கான அபாய ஒலி (சைரன்) நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், சாயங்காலத்துக்கு பிறகு அந்த சைரன் சத்தம் நின்றுவிட்டது. தோனெத்ஸ்க் பகுதியில் இருக்கிற டுரூஸ்கிவ்கா ஊரைச் சேர்ந்த ஷெர்கீ இப்படிச் சொல்கிறார்: “குண்டு வெடிப்பால் நினைவு நாள் நிகழ்ச்சி பாதியில் நின்றுவிடக் கூடாது என்று நாங்கள் ஜெபம் செய்துகொண்டே இருந்தோம். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்புதான் குண்டுவெடிப்பும் நின்றது, அந்த சைரன் சத்தமும் நின்றது.”
கீவ்வுக்குப் பக்கத்தில் இருக்கிற நெமிஷேவ் என்ற இடத்தில் வயதானவர்களாலும் உடம்பு முடியாதவர்களாலும் ஒருசில மாதங்களாகவே கூட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாருமே நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக விட்டலே என்ற மூப்பர் உதவி செய்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை. அதனால் நாங்கள் நினைவு நாள் நிகழ்ச்சியை டார்ச் லைட் வைத்துதான் நடத்த வேண்டியிருந்தது. எங்கள் அறையைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்கும் எதுவும் இல்லை. பாட்டு பாடுவதற்கு மியூஸிக்கும் இல்லை. அதனால் நாங்கள் பாடுவதற்காக என்னுடைய மகள்தான் வயலின் வாசித்தாள்.”
போர் நடக்கிற பகுதியில் இருக்கிற அலெக்சாண்டர் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “நினைவு நாள் அழைப்பிதழைக் கொடுக்கிற சமயம் வந்தபோது, எங்களுடைய சபை தொகுதியில் இருக்கிற மக்களுக்கு அதைக் கொடுப்பதற்காக எங்களால் கடிதம் எழுத முடியவில்லை. ஏனென்றால் அங்கிருந்த சில வீடுகளில் குண்டு போட்டிருந்தார்கள். நிறைய வீடுகளில் ஆளே இல்லை. அதனால் எங்களுக்குத் தெரிந்தவர்கள்… அடித்தளத்தில் நாங்கள் சந்தித்த மக்கள்… எங்களுடன் தப்பித்து வந்தவர்கள்… என எல்லாரையும் அழைத்தோம். அவர்களில் நிறைய பேர் இதற்கு முன்பு சாட்சிகள் அவர்களை சந்தித்தபோது காதுகொடுத்துக் கேட்டதே இல்லை. ஆனால் இப்போது நினைவு நாள் நிகழ்ச்சியில் எங்களுடன் கலந்துகொண்டார்கள்.”
உக்ரைனில் இருக்கிற எல்லா சபைகளில் இருந்தும் முழுமையான அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. என்றாலும், 210,000-க்கும் அதிகமானோர் நினைவு நாளில் கலந்துகொண்டார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைப் பற்றி உக்ரைனில் இருக்கும் ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “கடலில் பயணம் செய்கிறவர்களுக்கு, கரை பக்கத்தில் வந்துவிட்டது என்று கலங்கரை விளக்கம் எப்படி உறுதி அளிக்கிறதோ அதேபோல் இந்த நினைவு நாள் நிகழ்ச்சியும் யெகோவாவின் நாள் ரொம்ப பக்கத்தில் வந்துவிட்டது என்ற உறுதியை எனக்கும் கொடுத்திருக்கிறது. இந்த வருஷம் நினைவு நாளில் கலந்துகொண்டது என்னுடைய விசுவாசத்தை ரொம்பவும் பலப்படுத்தியிருக்கிறது.”
கீழே இருக்கிற எண்ணிக்கை ஏப்ரல் 21, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.
நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை
35 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்
60 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்
43,792 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பான வேறொரு இடத்துக்குத் தப்பித்துப் போயிருக்கிறார்கள்
374 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன
347 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
874 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
1 ராஜ்ய மன்றம் நாசமடைந்திருக்கிறது
10 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
27 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
நிவாரண நடவடிக்கைகள்
27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன
44,971 ஆட்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன
19,961 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்