மே 23, 2022
உக்ரைன்
அறிக்கை #8 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை
உக்கிரமான போரிலும் தொடரும் உற்சாகமும் ஆறுதலும்
உக்ரைனில் மோசமான சூழ்நிலைமைகள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், அந்நாட்டு கிளை அலுவலகத்தில் பொறுப்பில் இருக்கிற சகோதரர்கள் கடவுளுடைய வார்த்தையிலிருந்து உற்சாகத்தையும் ஆறுதலையும் கொடுப்பதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அந்த நாட்டிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்குத் தப்பித்துப்போன ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்குத் தொடர்ந்து ஆன்மீக உதவி அளிக்கிறார்கள். இதனால் அங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் அதிக பயனடைந்திருக்கிறார்கள். மேற்கு உக்ரைனுக்குத் தப்பித்துப்போன சகோதர சகோதரிகளை கிளை அலுவலக குழு அங்கத்தினராக இருக்கிற ஒரு சகோதரர் சந்தித்தார். அங்கே, யூஸ்காராத் நகரத்தில் இருக்கிற ஒரு ராஜ்ய மன்றத்தில் கிட்டத்தட்ட 30 பேருடன் தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவா என்னைப் பிடித்து அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்ட மாதிரி நான் உணர்ந்தேன்.”
பொறுப்பில் இருக்கிற சகோதரர்கள் 27 பேரழிவு நிவாரணக் குழுக்களில் (DRCs) தைரியமாக சேவை செய்துகொண்டிருக்கிற கிட்டத்தட்ட 100 சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தவும் கடினமாக முயற்சி எடுக்கிறார்கள். அந்தக் குழுவில் சேவை செய்கிற இகொர் என்ற ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “DRC-ல் சேவை செய்ய என்னை நியமித்தபோது நானும் என் மனைவியும் நாங்கள் இருந்த இடத்திலிருந்து தப்பித்துவந்து வேறொருவருடைய வீட்டில் தங்கியிருந்தோம். நாங்கள் ரொம்பவும் சோர்ந்துபோயிருந்த சமயத்தில், ரொம்ப பிஸியாக இருந்த கிளை அலுவலக குழு அங்கத்தினர் ஒருவர், எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களைச் சந்தித்தார். நாங்கள் சொன்னதையும் பொறுமையாக காதுகொடுத்து கேட்டார். அவர் எங்கள்மேல் உண்மையாகவே அக்கறை வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஒரு குழந்தையைப் போல், சில நேரங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கும்போது… அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வரத் தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கும்போது… நம்மால் செய்ய முடிந்த ஒரே விஷயம், யெகோவாவிடம் ஜெபம் செய்வது மட்டும்தான். அப்படிப்பட்ட சமயங்களில் யெகோவா நமக்காக செயலில் இறங்குவதையும் நம்மால் பார்க்க முடியும்.”
போர் நடக்கிற இடங்களுக்கு பக்கத்தில் இருக்கிற ராஜ்ய மன்றங்களில் 4 மன்றங்கள் முழுவதுமாக நாசமடைந்திருக்கின்றன, 8 மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன, 33 மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன.
கீழே இருக்கிற எண்ணிக்கை மே 17, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.
நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை
37 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்
74 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்
45,253 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பான வேறொரு இடத்துக்குத் தப்பித்துப் போயிருக்கிறார்கள்
418 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன
466 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
1,213 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
4 ராஜ்ய மன்றங்கள் நாசமடைந்திருக்கின்றன
8 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
33 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
நிவாரண நடவடிக்கைகள்
27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன
48,806 ஆட்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன
21,786 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்குள்ள சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்