ஜூன் 10, 2022
உக்ரைன்
அறிக்கை #9 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை
உக்ரைன் நாட்டிலேயே வேறு இடங்களுக்கு தப்பித்துப் போன சகோதர சகோதரிகளைக் கவனித்துக்கொள்வதற்காக உக்ரைன் கிளை அலுவலகம் 27 பேரழிவு நிவாரணக் குழுக்களை அமைத்திருக்கிறது. போர் தொடங்கிய சமயத்திலிருந்து 250 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருள்கள், அதாவது உணவு… உடை… சுகாதார பொருள்கள் போன்றவை, போலந்து நாட்டிலிருந்து வந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, உக்ரைன் நாட்டிலேயே பாதுகாப்பான இடங்களில் இருக்கிற சகோதரர்களும் 80 டன்னுக்கும் அதிகமான உணவுப் பொருள்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கீவ்வில் இருக்கிற வாலன்டீனா சகோதரிக்கு பேரழிவு நிவாரணக் குழுவில் சேவை செய்கிற சகோதரர்கள் உதவி செய்திருக்கிறார்கள். அதைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார்: “போர் ஆரம்பித்த பிறகு, ஊருக்குள்ளே இருப்பது ரொம்பவே ஆபத்தானதாக இருந்தது. அதனால், செர்கசி பகுதியில் இருக்கிற ஒரு சின்ன ஊருக்கு நாங்கள் தப்பித்து போய்விட்டோம். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நான் இங்கேதான் இருக்கிறேன். இங்கிருக்கிற சகோதர சகோதரிகள் என்னை ரொம்ப நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். உணவும் சுகாதார பொருள்களும் வைக்கப்பட்டிருந்த நிறைய அட்டைப் பெட்டிகளை அவர்கள் எனக்கு கொண்டுவந்து கொடுத்தார்கள். அதெல்லாம் என் மனதை ரொம்ப தொட்டுவிட்டது, எனக்கு பேச்சே வரவில்லை. ஒரு அட்டைப் பெட்டியில், நான்கு வயதான பிளாங்கா அவளே வரைந்த ஒரு அழகான போஸ்ட் கார்டை எனக்காக அனுப்பி வைத்திருந்தாள் . . . அதை நான் பொக்கிஷம் மாதிரி பத்திரமாக வைத்துக்கொள்வேன். என்னுடைய எல்லா சகோதரர்களுக்கும், ரொம்ப முக்கியமாக யெகோவாவுக்கும் மனதார நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன என்னால் செய்ய முடியும்?”
செவரோதோனெஸ்க் பகுதியில் இருக்கிற 83 வயதான வாலன்டீனா சகோதரி உடல்நலப் பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறார். அவர் இப்படி எழுதுகிறார்: “போர் தொடங்கிய சமயத்தில் நான் தனியாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தேன். என்னுடைய ஒரே பையன் போர் தொடங்குவதற்கு முன்பாகவே செத்துவிட்டான். அந்த ஊரில் நாள் முழுவதும் குண்டு வெடித்துக்கொண்டே இருந்ததால் எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது. அங்கே தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, கேஸ் இல்லை, இன்டர்நெட் வசதியும் அவ்வளவாக இல்லை. ஆனாலும் சகோதரர்கள் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து எனக்கு உதவி செய்தார்கள். அவர்களுக்கு நான் ரொம்ப நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.”
அவர் தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்: “சகோதரர்கள் என்னையும் என்னை மாதிரி உடம்பு முடியாமல் இருந்த இரண்டு சகோதரிகளையும் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்த நிப்ரோ என்ற ஒரு நகரத்துக்கு பிறகு கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கே நான் தங்குவதற்கு சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள். யெகோவாவின் சாட்சிகளின் ஒரு குடும்பத்தோடுதான் நான் இப்போது தங்கியிருக்கிறேன். அவர்கள் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவர் மாதிரியே நடத்துகிறார்கள். நான் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும், பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் எனக்கு ஒரு ஸ்மார்ட் ஃபோன்கூட வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். சகோதரர்கள் என்மேல் காட்டிய அன்பையும் பாசத்தையும் நான் ஒருநாளும் மறக்க மாட்டேன்.”
உக்ரைனில் இருக்கிற நம்முடைய அன்பான சகோதர, சகோதரிகளுக்கு ‘ஒரு குறையும் வரக் கூடாது’ என்பதற்காக நம்முடைய அன்பான அப்பா யெகோவா அவர்களை ரொம்ப நன்றாக கவனித்துக்கொள்கிறார். (சங்கீதம் 34:10) அதைப் பார்க்கும்போது நம்முடைய இதயத்தில் சந்தோஷமும் நன்றியும் பொங்கிவழிகிறது.
கீழே இருக்கிற எண்ணிக்கை ஜூன் 7, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்..
நம்முடைய சகோதர சகோதரிகள் நிலைமை
42 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்
82 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்
46,145 பிரஸ்தாபிகள் இப்போது உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள்
469 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன
540 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
1,405 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
5 ராஜ்ய மன்றங்கள் நாசமடைந்திருக்கின்றன
8 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன
33 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன
நிவாரண நடவடிக்கைகள்
27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன
50,663 ஆட்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன
22,995 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்குள்ள சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்