Skip to content

உலக செய்திகள்

விசுவாசத்துக்காக சிறைவாசம்—கிரிமியா

விசுவாசத்துக்காக சிறைவாசம்—கிரிமியா

ரஷ்ய அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகள்மேல் நடத்திவரும் கொடூரமான தாக்குதல்கள் இப்போது கிரிமியாவிலும் தொடங்கிவிட்டன. ரஷ்ய அரசாங்கம் சாட்சிகளுடைய சட்டப்பூர்வ நிறுவனங்களைத் தடை செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அவர்களுடைய கடவுளை அவர்கள் அமைதியாக வணங்குவதைத் தடுத்து நிறுத்துவதில் குறியாக இருக்கிறது. ஏப்ரல் 2017 தடையுத்தரவுக்குப் பிறகு, சாட்சிகள் எங்கெல்லாம் ஒன்றுகூடி வந்தார்களோ அங்கெல்லாம் ரஷ்ய அதிகாரிகள் நிறைய சோதனைகளை நடத்தியிருக்கிறார்கள். அதனால், ரஷ்யா முழுவதும் நிறைய சாட்சிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது கிரிமியாவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் அதே விதமான கடுமையான தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.

நவம்பர் 15, 2018-ல், கிரிமியாவிலேயே முதல் தடவையாக பெரிய அளவிலான சோதனைகள் டிசான்காயில் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 200 போலீசாரும் சிறப்புப் படை அதிகாரிகளும் எட்டு வீடுகளைச் சோதனை செய்தார்கள். அங்கே சாட்சிகள் பைபிளைப் படிக்கவும் அதைப் பற்றிக் கலந்துபேசவும் சிறு தொகுதிகளாக ஒன்றுகூடி வருவது வழக்கம். ஆறு சாட்சிகள் ஒன்றுகூடி வந்த செர்கே ஃபிலடோவ் என்பவரின் வீட்டுக்குள் கிட்டத்தட்ட 35 அதிகாரிகள் ஆயுதங்களோடும் முகமூடியோடும் அத்துமீறி நுழைந்து பயங்கரமாகத் தாக்கினார்கள். அங்கிருந்த சாட்சிகள் அதைப் பார்த்து மிரண்டுபோய்விட்டார்கள். அங்கிருந்த 78 வயதான ஒருவரை சுவரோடு சுவராக மோதி தரையில் தள்ளிவிட்டார்கள். பிறகு, அவருடைய கைகளில் விலங்குகளை மாட்டி, அவரைப் பயங்கரமாக அடித்தார்கள். அதனால் அவரை அவசரமாக ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போக வேண்டியதாகிவிட்டது. அங்கு நடந்ததைப் பார்த்து பீதியடைந்த வயதான இரண்டு ஆண்களுக்கு இரத்த அழுத்தம் ரொம்பவே அதிகமாகிவிட்டதால் அவர்களையும் அவசரமாக ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போக வேண்டியதாகிவிட்டது. இன்னொரு வருத்தமான விஷயம் என்னவென்றால், ஒரு இளம் பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது அவருக்குக் கருச்சிதைவு ஆகிவிட்டது.

அந்தச் சோதனைக்குப் பிறகு, ரஷ்ய குற்றவியல் சட்டப் பிரிவு 282.2(1)-ன் அடிப்படையில், ஒரு “தீவிரவாத அமைப்பின்” செயல்களை ஏற்பாடு செய்ததாகச் சொல்லி ஃபிலடோவைக் குற்றம்சாட்டினார்கள். மார்ச் 5, 2020 அன்று, குற்றவாளிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட முகாமில் ஃபிலடோவ் ஆறு வருஷங்கள் இருக்க வேண்டுமென்று கிரிமியாவின் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டதுமே அவரை முகாமுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

டிசான்காயில் 2018-ல் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்பு, சிறப்புப் படை அதிகாரிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்பட்டு சாட்சிகளுடைய வீடுகளில் அத்துமீறி நுழைகிறார்கள். கடைசியாக மே 22,2023-ல் அதிகாலை 6.30 மணிக்கு பத்துக்கும் மேலான அதிகாரிகள் ஃபியோடொஸியாவில் ஒரு வீட்டில் நுழைந்தார்கள். அதில் ஐந்து அதிகாரிகளின் கையில் ஆயுதங்கள் இருந்தன. சாட்சிகளை தரையில் படுக்க கட்டளையிட்டார்கள், வீட்டையும் மூன்று மணிநேரத்துக்கும்மேல் சோதனையிட்டார்கள். அதில் ஒரு சகோதரரை மட்டும் மேலும் விசாரிப்பதற்காக அவர்களோடு செவாஸ்டோபோலுக்கு கொண்டுபோனார்கள். இப்படி அவர்கள் வீடுகளைச் சோதனை செய்து, அவர்களை விசாரணை செய்து, குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததால் ஒன்பது சாட்சிகள் (ஆண்கள்) ஆறரை வருஷங்கள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாரும் தீவிரவாத அமைப்பின் செயல்களை ஆதரித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள்.

காலவரிசை

  1. ஜூலை 17, 2024

    கிரிமியாவில் இப்போது ஒன்பது யெகோவாவின் சாட்சிகள் சிறையில் இருக்கிறார்கள்.

  2. மே 22, 2023

    காவல்துறை அதிகாரிகள், ஃபியோடொஸியாவில் இருக்கிற ஒரு யெகோவாவின் சாட்சியின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். எலெக்ட்ரானிக் கருவிகளை கைப்பற்றியதோடு ஒரு சாட்சியையும் விசாரணைக்காக அழைத்து சென்றார்கள்.

  3. ஆகஸ்ட் 5, 2021

    எட்டு யெகோவாவின் சாட்சிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அலெக்ஸாண்டர் டூபோவென்கோவும், அலெக்ஸாண்டர் லிட்வின்யுக்கும் கைது செய்யப்பட்டார்கள்.

  4. அக்டோபர் 1, 2020

    செவாஸ்டோபோலில் ஒன்பது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஐகோர் ஷ்மிட் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குமுன் காவலில் வைக்கப்பட்டார்.

  5. ஜூன் 4, 2019

    சிறப்புப் படை அதிகாரிகள் செவாஸ்டோபோலில் இருக்கும் பத்து யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனைக்குப் பிறகு, ஸ்டாஷெவ்ஸ்கி தீவிரவாத செயல்களை ஏற்பாடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

  6. மார்ச் 20, 2019

    சிறப்புப் படை அதிகாரிகள் அலுப்கா, யால்டா ஆகிய நகரங்களில் இருந்த எட்டு சாட்சிகளுடைய வீடுகளைச் சோதனை செய்தார்கள். அதோடு, ஆர்ட்டம் கெரசிமோவை விசாரணை செய்து, தீவிரவாத செயல்களை ஏற்பாடு செய்ததாகச் சொல்லி குற்றம்சாட்டினார்கள்.

  7. நவம்பர் 15, 2018

    கிட்டத்தட்ட 200 போலீசாரும் சிறப்புப் படை அதிகாரிகளும் டிசான்காயில் இருந்த எட்டு வீடுகளைச் சோதனை செய்தார்கள். ஃபிலடோவின் வீட்டையும் சோதனை செய்தார்கள்.