Skip to content

Albert Wright/iStock via Getty Images

யாருடைய கைவண்ணம்?

மண்ணில் வித்தை காட்டும் மேலீ பறவை

மண்ணில் வித்தை காட்டும் மேலீ பறவை

 தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கிற மேலீ பறவை, அதனுடைய கூட்டின் தட்பவெப்ப நிலை 32-லிருந்து 34 டிகிரி செல்சியஸ் (93°பாரன்ஹீட்) வரை இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்கிறது. வருஷம் முழுவதும் இரவும் பகலும் இதே தட்பவெப்ப நிலையை அதனால் எப்படிக் காத்துக்கொள்ள முடிகிறது?

 குளிர்காலம் ஆரம்பிக்கும்போது இந்தப் பறவைகள் 3 அடி ஆழத்திலும், 10 அடி அகலத்திலும் ஒரு குழியைத் தோண்டும். இந்தக் குழிக்குள் ஆண் பறவை இலை, தழை, புல், தாவரங்கள் இவற்றையெல்லாம் கொண்டுவந்து நிரப்பும். இப்படியே அதை நிரப்பி நிரப்பி ஒரு பெரிய மேடாக்கும். குளிர்காலத்தில் மழை வரும்போது தாவரங்கள் நிறைந்த இந்த மேடு முழுவதுமாக நனைந்து ஈரமாகிவிடும். அப்போது இந்த ஆண் பறவை அதற்குள் ஒரு குழியைத் தோண்டி முட்டைகளை வைப்பதற்கான ஒரு அறையை உருவாக்கும். அதற்குப் பின்பு, இந்த மேட்டை மணல் போட்டு முழுவதுமாக மூடி வைத்து விடும். இந்த இலை தழைகள் மக்க ஆரம்பிக்கும்போது ஒரு விதமான சூடு உருவாகிறது, அதாவது பெண் பறவை அடைகாக்கும்போது ஏற்படுகிற ஒரு விதமான கதகதப்பான சூழல் உருவாகிறது.

குஞ்சு பொரிப்பதற்காக (A), மேலீ பறவை சூரிய வெப்பத்தையும் இலை தழைகள் மக்கும்போது உருவாகும் சூட்டையும் பயன்படுத்திக்கொள்கிறது (B). சூடு வெளியேறாமல் இருப்பதற்காக மண்ணின் அளவை மாற்றிக்கொண்டே இருக்கிறது (C), பல மாதங்களாக முட்டை இருக்கும் இடத்தின் தட்பவெப்ப நிலையை கிட்டத்தட்ட 34 டிகிரி செல்சியஸில் (93°பாரன்ஹீட்) வைத்துக்கொள்கிறது. இதற்காக அதன் கால்களால் எக்கச்சக்கமான மணலை உள்ளே தள்ளுகிறது, வெளியே போடுகிறது (D)

 ஒவ்வொரு முறையும் பெண் பறவை முட்டையிட தயாராகும்போது ஆண் பறவை அங்கே இருக்கிற மணலை எல்லாம் அகற்றிவிடும். இதனால் பெண் பறவை முட்டையிடும் அறையில் சுலபமாக முட்டையிட முடியும். அதற்குப் பின்பு, ஆண் பறவை உடனடியாகவே அந்த மேட்டை மணலால் மூடிவிடும். செப்டம்பரிலிருந்து பிப்ரவரிக்குள் பெண் பறவை கிட்டத்தட்ட 35 முட்டைகள் வரை போடலாம். a

 இந்தப் பறவைகள் அடிக்கடி தங்களுடைய கூர்மையான மூக்கை அந்த மணலுக்குள்ளே நுழைத்து தட்பவெப்பநிலை சரியாக இருக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருக்கும். பருவ காலத்துக்கு ஏற்றபடி அந்தப் பறவைகள் மேட்டை மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு:

  •   வசந்த காலத்தில், இலை தழைகள் மக்கும்போது கூட்டின் தட்பவெப்பநிலை அதிகரிக்கும். அதனால் ஆண் பறவை அங்கே இருக்கிற சூட்டை வெளியேற்றுவதற்காக முட்டை போடும் அறைக்கு மேலே இருக்கிற மண்ணை எல்லாம் காலால் தள்ளித் தள்ளி வெளியேற்றும். அதற்குப் பின்பு, குளிர்ச்சியான மண்ணால் அந்தக் கூட்டை திரும்பவும் மூடி வைத்துவிடும்.

  •   வெயில் காலத்தில், சூரியனுடைய வெப்பம் முட்டைகளை தாக்காமல் இருப்பதற்காக ஆண் பறவை மேட்டுக்கு மேலே இன்னும் அதிகமான மண்ணை அள்ளிப்போடும். அதன் பின்பு, ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் அந்த மண்ணை எல்லாம் காலால் தள்ளித் தள்ளி வெளியே போட்டுவிடும். அந்த மண்ணும் கூடும் குளிர்ச்சியான பின்பு மண்ணை உள்ளே தள்ளி திரும்பவும் கூட்டை மூடி வைத்துவிடும்.

  •   இலையுதிர் காலத்தில், அந்த இலை தழைகள் மக்கி முடிந்த பின்பு ஆண் பறவை கிட்டத்தட்ட எல்லா மண்ணையுமே வெளியே எடுத்து போட்டுவிடும். ஏன் அப்படிச் செய்கிறது? உச்சி வெயிலில் முட்டைகளும் அந்த மண்ணும் நன்றாக வெயில் காய்வதற்காக. அதற்குப் பின்பு, ராத்திரி அந்தக் கூடு கதகதப்பாக இருப்பதற்காக வெதுவெதுப்பான மண்ணை போட்டு அந்த மேட்டை திரும்பவும் மூடி வைத்துவிடும்.

 ஒவ்வொரு நாளும் ஆண் பறவை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலே ஓயாமல் வேலை செய்கிறது, கிட்டத்தட்ட 850 கிலோகிராம் மண்ணை வெளியே தள்ளுகிறது... உள்ளே போடுகிறது... வெளியே தள்ளுகிறது... உள்ளே போடுகிறது... இப்படி செய்துகொண்டிருப்பதால் அந்த மண்ணுக்கும் பிரயோஜனம் கிடைக்கிறது. அதாவது, அந்த மண் கெட்டியாகாமல் இருக்கிறது. இதனால் முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிந்ததும் அதனால் ஈசியாக குழிக்குள்ளே இருந்து வெளியே வர முடியும்.

 கூட்டுக்குள்ளே இருந்து மண்ணை வெளியே தள்ளும் மேலீ பறவைகளைப் பாருங்கள்

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தன்னுடைய கூட்டின் தட்பவெப்ப நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்த திறமை இந்த மேலீ பறவைக்கு தானாக வந்திருக்குமா, இல்லையென்றால் யாராவது இதைப் படைத்திருப்பார்களா?

a ஏழு முதல் எட்டு வாரங்களில் அந்த முட்டைகள் குஞ்சு பொரித்துவிடும். அதனால் அந்த மேட்டை மாற்றியமைக்கும் வேலை ஏப்ரல் வரை தொடரும்.