Skip to content

யாருடைய கைவண்ணம்?

தாய்ப்பால்—ஆரோக்கியம் தரும் அருமையான உணவு!

தாய்ப்பால்—ஆரோக்கியம் தரும் அருமையான உணவு!

 “பவுடர் பால் என்றைக்குமே தாய்ப்பாலுக்கு ஈடாகாது” என்று பிரசவம் பார்க்கிற நர்சுகளுக்கான ஒரு புத்தகம் சொல்கிறது. தாய்ப்பால்தான் சிறந்தது என்பதற்கு ஒரு காரணம் என்னவென்றால், குழந்தையுடைய தேவைக்கு ஏற்ற மாதிரி தாயின் உடலிலிருந்து தாய்ப்பால் சுரக்கிறது.

 யோசித்துப் பார்க்க: ஒவ்வொரு தடவை குழந்தை பால் குடிக்கும்போதும் அந்தப் பாலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. குழந்தை பால் குடிக்கும்போது, முதலில் வருகிற பாலில் நிறைய புரோட்டீன், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நீர்ச்சத்து இருக்கின்றன. ஆனால் கடைசியில் வருகிற பாலில் அதிக கொழுப்புச் சத்து இருக்கிறது. இதனால் குழந்தைக்கு வயிறு நிறைந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, குழந்தையின் வயதுக்கும் பருவ காலத்துக்கும் ஏற்ற மாதிரி கூட தாய்ப்பாலில் மாற்றம் ஏற்படுகிறது.

 தாய்ப்பாலில், மெலடோனின் போன்ற சில விதமான ஹார்மோன்கள் ராத்திரியில் அதிகமாக சுரக்கின்றன. மற்ற ஹார்மோன்கள் பகலில் அதிகமாக சுரக்கின்றன. இப்படி, அந்தந்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி ஹார்மோன்கள் சுரப்பதால் சரியான நேரத்தில் தூங்கும் அல்லது விழித்திருக்கும் பழக்கம் குழந்தைக்கு வந்துவிடுகிறது.

 குழந்தை பிறந்த முதல் சில நாட்களில் தாயின் உடம்பில் சுரக்கிற பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதற்கு கொலஸ்ட்ரம் என்று பேர். இந்த கொலஸ்ட்ரம் ரொம்ப ஈசியாக ஜீரணமாகிவிடும். அதுமட்டுமல்ல, இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குழந்தை அதைக் கொஞ்சமாக குடித்தால் கூட, அதனுடைய குட்டி வயிற்றுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. குழந்தையின் உடம்பில் ரொம்ப ஈசியாக நோய்கள் தொற்றிக்கொள்ளும் என்பதால் கொலஸ்ட்ரமில் கொட்டி கிடக்கிற முக்கியமான நோய் எதிர்ப்புப் பொருள்கள், நோய்த் தொற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்ல, அதனுடைய வயிற்றில் இருக்கிற கழிவுகளை வெளியேற்றுவதற்கும் அது உதவி செய்கிறது. இப்படி குழந்தையுடைய செரிமான அமைப்பை சுத்தப்படுத்துவது இந்த கொலஸ்ட்ரம்தான்.

 ஒருவேளை இரட்டை குழந்தைகள் பிறந்தால் ‘பால் பத்தாமல் போய்விடுமோ’ என்று தாய் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்குமா? இல்லவே இல்லை! குழந்தைகளுடைய தேவைக்கு ஏற்ற மாதிரி பால் அதிகமாக சுரந்துகொண்டே இருக்கும்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தனித்தன்மை கொண்ட இந்த தாய்ப்பால் பரிணாமத்தால் வந்திருக்குமா? இல்லையென்றால், யாராவது படைத்திருப்பார்களா?