Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

ஆபாசம்—உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பது எப்படி?

ஆபாசம்—உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பது எப்படி?

 “ஆபாசத்தால் வருகிற ஆபத்துகள் எங்களுக்கு தெரியாது என்றில்லை. அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், என் மகளால் அதை இவ்வளவு ஈஸியாக பார்க்க முடியும் என்றுதான் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது.”—நிக்கோல்.

இந்தக் கட்டுரையில்

 நீங்கள் எதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

 ரொம்ப சின்ன வயதிலேயே ஆபாசக் காட்சிகள் பிள்ளைகளின் கண்ணில் படுகின்றன. பிள்ளைகளுக்கு 11 வயது ஆகும் போதே ஆபாசக் காட்சிகள் அவர்களுடைய பார்வையில் படுவதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.

 ஆபாசம்—பிள்ளைகள் அதைத் தேடிப் போக வேண்டியதில்லை, அதுவே அவர்களைத் தேடி வரும். உதாரணமாக, பிள்ளைகள் இன்டர்நெட்டில் எதையாவது தேடிக்கொண்டிருக்கும்போது... சோஷியல் மீடியாவில் எதையாவது அலசிக்கொண்டிருக்கும்போது... ஆபாசக் காட்சிகளைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. ஆன்லைனில் வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, ஆபாசக் காட்சிகள் நிறைந்த விளம்பரங்கள் திடீரென வரலாம். ஆபாசம் நிறைய விதங்களில் கிடைக்கின்றன, அதில் சர்வ சாதாரணமாக கிடைப்பது, ஃபோட்டோக்களும் வீடியோக்களும்தான். ஆபாசக் கதைகளும் இன்டர்நெட்டில் ரொம்ப சுலபமாக கிடைப்பதால், அதை ஒருவரால் எளிதாக வாசிக்க முடிகிறது, அதன் ஆடியோ பதிவுகளை சுலபமாக கேட்கவும் முடிகிறது.

 பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டிய இன்னொரு விஷயம், அவர்களுடைய பிள்ளைகளின் மொபைலுக்கு மற்றவர்களும் கூட ஆபாசப் படங்களை அனுப்பி வைப்பார்கள் என்பதுதான். 900-க்கும் அதிகமான இளைஞர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தங்களோடு படிக்கும் பிள்ளைகள் நிர்வாண படங்களையும், வீடியோக்களையும் தங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருப்பதாக அதில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 90 சதவீத பெண் பிள்ளைகளும், 50 சதவீத ஆண் பிள்ளைகளும் சொன்னார்கள்.

 எளிதாக கிடைக்கிற ஆபாசத்தில் பொதுவாக வன்முறை நிறைந்திருக்கும். ரொம்ப சுலபமாக கிடைக்கிற ஆபாசத்தில் ஓரளவுக்கு வன்முறை நிறைந்திருக்கிறது, அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை.

 ஆபாசம் பிள்ளைகளுக்கு தீங்கிழைக்கிறது. ஆபாசத்தைப் பார்க்கிற பிள்ளைகள் கீழே சொல்லப்பட்டிருக்கிற பிரச்சினைகளை அனுபவிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது.

  •   அவர்கள் ஸ்கூல் படிப்பு மோசமாகிவிடலாம்

  •   அவர்களுக்கு கவலை, மனசோர்வு வரலாம், தங்களைப் பற்றியே ரொம்ப தாழ்வாக நினைக்கலாம்

  •   பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவில் ஈடுபட யாராவது முயற்சி செய்தால், அது அவ்வளவு மோசமில்லை என்ற எண்ணம் கூட வரலாம்

 சுருக்கமாகச் சொன்னால்: ஆபாசம் பிள்ளைகளை ரொம்ப மோசமாக பாதிப்பதால், பெற்றோர்களுக்குத்தான் அவர்களைப் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு இருக்கிறது.

 பைபிள் நியமம்: “இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கவும் வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.”—உபாகமம் 6:6, 7.

 ஆபாசம்—உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பது எப்படி?

 பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை. உங்கள் பிள்ளை எங்கே, எப்போது ஆபாசத்தைப் பார்க்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஸ்கூல் இடைவேளை சமயத்தில் யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் அவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

ஆபாசம் உங்கள் பிள்ளையின் பார்வையில் படுவதற்கு நிறைய விதங்களில் வாய்ப்பு இருக்கிறது.

 உங்கள் பிள்ளையின் மொபைலுக்கு என்னென்ன தகவல்கள் வரலாம், என்ன வரக் கூடாது என்பதை நீங்கள் முடிவு செய்வதற்கு, அதில் இருக்கிற பாதுகாப்பு அம்சங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அதோடு, அவர்கள் பயன்படுத்துகிற ‘ஆப்’-களையும், அவர்கள் விளையாடுகிற கேம்ஸ்களையும் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, சில மெசேஜ் ‘ஆப்’-களில் ஆபாச தகவலோ, படமோ, வீடியோவோ வந்து கொஞ்ச நேரத்துக்குள் மறைந்து போகிற மாதிரியான செட்டிங் இருக்கிறது. இப்போது இருக்கிற நிறைய ஆன்லைன் வீடியோ கேம்ஸில், விளையாடுகிறவர்கள் இடையில் ஆபாசத்தை பார்க்க முடியும். அதோடு ஆன்லைனிலேயே விளையாட்டுக்கு நடுவில் செக்ஸில் ஈடுபடவும் முடியும்.

 “உங்கள் பிள்ளையிடம் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் ஒரு பெற்றோராக, அதை எப்படிப் பயன்படுத்துவது என்று நீங்கள் முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிள்ளை எந்த வெப்சைட்டை பார்க்கலாம், எவ்வளவு நேரம் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பதை கட்டுப்படுத்துகிற செட்டிங்கை, அதாவது பெற்றோர் கட்டுப்பாடுகளை (parental controls) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதே மாதிரி, உங்கள் பிள்ளை எதையெல்லாம் பார்க்கிறது என்பதை கண்காணிக்கவும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதை நான் என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.”—டேவிட்.

 பைபிள் நியமம்: “புத்தி உள்ளவனின் இதயம் அறிவைச் சம்பாதிக்கும்.”—நீதிமொழிகள் 18:15.

 ஆபாசத்தின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருப்பதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். ஆபாசத்தின் பிடியில் உங்கள் பிள்ளை மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு சில நடவடிக்கைகளை எடுங்கள். உதாரணமாக, உங்கள் பிள்ளையின் போனில் மட்டுமல்ல, உங்கள் வீட்டில் இருக்கிற எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் ஆபாசமான காட்சிகள் வருவதைத் தடுக்கிற செட்டிங்கை வையுங்கள். பெற்றோர் கட்டுப்பாடு (parental controls) செட்டிங்கை ‘ஆன்’ செய்யுங்கள். உங்கள் பிள்ளை பயன்படுத்துகிற எல்லா பாஸ்வேர்ட்களையும் தெரிந்து வைத்திருங்கள்.

 “எங்களுடைய எலக்ட்ரானிக் சாதனங்களில் பெற்றோர் கட்டுப்பாடு (parental controls) செட்டிங்கை ‘ஆன்’ செய்து வைத்திருந்தேன். ஸ்மார்ட் டிவியில், எங்களுடைய பையன் சில நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத மாதிரி செட்டிங் அமைத்திருந்தேன். அதோடு அவனுடைய ஸ்மார்ட் ஃபோனில் இருக்கிற ‘பின் நம்பரை’ தெரிந்து வைத்திருந்தேன். இப்படியெல்லாம் நான் பண்ணியது எங்களுக்கு கைகொடுத்தது.”—மரிஸியோ.

 “என் பசங்களை அவர்களுடைய ரூம் கதவை மூடிக்கொண்டு வீடியோ பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் தூங்கப் போகும்போது பெட் ரூமுக்குள் மொபைல் எடுத்துக்கொண்டு போகவும் அனுமதிக்க மாட்டேன்.”—கியன்லுக்கா.

 பைபிள் நியமம்: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.”—நீதிமொழிகள் 22:3.

 ஆபாசத்தினால் வருகிற ஆபத்துகளைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு முன்கூட்டியே சொல்லிக்கொடுங்கள். ஃப்ளேவியா என்ற ஒரு அம்மா இப்படிச் சொல்கிறார்: “ஆபாசத்தைப் பற்றி சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் பேசவே மாட்டார்கள். எங்கள் பிள்ளைகளுக்கெல்லாம் இந்த மாதிரி பிரச்சினை வரவே வராது என்று அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள்.” ஆனால், சில பெற்றோர்கள், ‘இதைப் பற்றி நான் என் பிள்ளைகளிடம் பேசினால், ஆர்வக்கோளாறில் அதைப் பார்த்து விடுவார்களோ’ என்று நினைத்து பயப்படுகிறார்கள். ஆனால், இப்படி நினைப்பது ரொம்ப தவறு. ஆபாசம் பிள்ளைகளின் கண்களில் படுவதற்கு முன்பே, ஞானமுள்ள பெற்றோர் அதனால் வருகிற ஆபத்துகளைப் பற்றி அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். நீங்கள் அதை எப்படிச் செய்யலாம்?

 உங்களுக்கு சின்ன பிள்ளைகள் இருந்தால் இப்படிச் சொல்லிக்கொடுங்கள்: அசிங்கமான காட்சிகள் அவர்கள் ஃபோனில் வந்தால் உடனடியாக கண்ணை மூடிக்கொள்ள வேண்டும், அல்லது ஃபோனை ‘ஆஃப்’ பண்ண வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். அப்படி எதையாவது அவர்கள் பார்த்தாலோ கேட்டாலோ உடனடியாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள். a

 “என் மகன் ரொம்ப சின்ன பையனாக இருந்த போதே ஆபாசத்தைப் பார்ப்பதால் வருகிற ஆபத்துகளைப் பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தோம். அவனுக்கு கிட்டத்தட்ட 11 வயது இருக்கும்போது அவனுடைய ஸ்மார்ட் ஃபோனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தான், அப்போது ஆபாசமான விளம்பரங்கள் திடீரென வர ஆரம்பித்தன. அவனுடைய ஆபாச படத்தையும் அனுப்பச் சொல்லி அதில் மெசேஜ் வர ஆரம்பித்தது. நாங்கள் இதைப் பற்றி முன்பே பேசி இருந்ததால் அவன் உடனடியாக வந்து எங்களிடம் சொன்னான்.”—மரிஸியோ.

 பைபிள் நியமம்: “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.”—நீதிமொழிகள் 22:6.

 உங்களுக்கு பெரிய பிள்ளைகள் இருந்தால், ஆபாசத்தைப் பார்க்கிற... கேட்கிற... வாசிக்கிற... எண்ணமே வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று சொல்லிக்கொடுங்கள். ஆபாசத்தைப் பார்க்கிற சூழ்நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும், ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று குடும்பமாக நீங்கள் வைத்திருக்கிற கட்டுப்பாடுகளைப் பற்றி உங்கள் பிள்ளையை எழுதிக் கொடுக்க சொல்லுங்கள். ஆனால் இதையும் மீறி உங்கள் பிள்ளை ஆபாசத்தை பார்த்துவிட்டால் அதனால் வருகிற விளைவுகளைப் பற்றி, அதாவது தன்னுடைய சுயமரியாதையை... பெற்றோருடைய நம்பிக்கையை... கடவுளோடு இருக்கிற நல்ல பந்தத்தை இழந்துவிட வேண்டியிருக்கும் என்பதையும் கூட, அதில் எழுதச் சொல்லுங்கள். b

 “உங்கள் பிள்ளைகள் வளர வளர, ஆபாசத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வரலாம். அப்படிப் பார்த்துவிட்டால், கால காலத்துக்கும் இருக்கப்போகிற பாதிப்புகளைப் பற்றி யோசித்துப் பார்க்க அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.”—லாரெட்டா.

 “ஆபாசத்தினால் வருகிற ஆபத்துகளைப் பற்றி மட்டுமல்ல அதைப் பார்த்தால் யெகோவா என்ன நினைப்பார் என்பதைப் பற்றி பிள்ளைகள் புரிந்து வைத்திருந்தால் அதை ஒதுக்கித்தள்ளுவது அவர்களுக்கு சுலபமாக இருக்கும்.”—டேவிட்.

 பைபிள் நியமம்: ‘ஞானம் பாதுகாப்பு தரும்.’—பிரசங்கி 7:12.

 அடிக்கடி பேசுங்கள். நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும், இதுதான் உண்மை. பாலியல் தொல்லை, ஆபாசத்தைப் பார்ப்பது போன்ற விஷயங்களைப் பற்றி பெற்றோர்கள் தங்களிடம் பேச வேண்டும் என்று பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள். இங்கிலாந்துக்கான குழந்தை நல ஆணையர் டேம் ரேச்சல் டிஸோசா இப்படிச் சொல்கிறார்: “[குழந்தைகளிடம் இருந்து வரும்] முக்கியமான செய்தி என்னவென்றால், சின்ன வயதிலேயே பேசுங்கள், அடிக்கடி பேசுங்கள் என்பதுதான். பிள்ளைகளின் வயதுக்கேற்ற மாதிரியும் பக்குவத்துக்கு ஏற்ற மாதிரியும் பெற்றோர்கள் அவர்களிடம் பேச வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.”

 “நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது சில விஷயங்களைப் பற்றி என் பெற்றோர் என்னிடம் பேசவே மாட்டார்கள். ஆனால் அதை அவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்று நான் ரொம்ப ஆசைப்பட்டேன். இப்போது, ஒரு அம்மாவாக என் பிள்ளையிடம் செக்ஸை பற்றி அடிக்கடி தயங்காமல் பேசுவதற்கு நான் ரொம்ப முயற்சி எடுக்கிறேன்.”—ஃப்ளேவியா.

 உங்கள் பிள்ளை ஆபாசத்தின் வலையில் சிக்கிவிட்டால்...

 பதட்டப்படாதீர்கள். உங்கள் பிள்ளை ஆபாசத்தைப் பார்த்ததாகவோ, கேட்டதாகவோ அல்லது வாசித்ததாகவோ உங்களுக்கு தெரிய வந்தால் உடனே கோபப்படாதீர்கள். அப்படிச் செய்ததை நினைத்து உங்கள் பிள்ளை ஏற்கெனவே வருத்தப்பட்டுக்கொண்டிருக்கலாம், அல்லது குற்ற உணர்ச்சியில் தவித்துக்கொண்டிருக்கலாம். நீங்கள் கோபப்பட்டு கத்தினால் உங்கள் பிள்ளை மனம் உடைந்துபோய் விடலாம். இதுபோன்ற ஒரு தவறை மறுபடியும் செய்தால் உங்களிடம் வந்து பேசவே தயங்கலாம்.

 பைபிள் நியமம்: “அறிவுள்ளவன் அளவோடு பேசுவான். பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான்.”—நீதிமொழிகள் 17:27.

 உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். என்ன நடந்திருக்கும் என்று நீங்களாகவே முடிவுக்கு வருவதற்கு முன்பு, உங்கள் பிள்ளைக்கு ஆபாசத்தைப் பார்க்கும் சூழ்நிலை எப்படி ஏற்பட்டது என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆபாசப் படத்தை யாராவது அனுப்பினார்களா, இல்லையென்றால் உங்கள் பிள்ளையே தேடிப் போய் பார்த்ததா? இதுதான் முதல் தடவையா அல்லது இதற்கு முன்பே ஆபாசத்தை உங்கள் பிள்ளைப் பார்த்திருக்கிறதா? உங்கள் பிள்ளை பயன்படுத்துகிற எலக்ட்ரானிக் சாதனத்தில் ஆபாசமான தகவல்கள் வருவதைத் தடுப்பதற்கான செட்டிங் இருந்ததா அல்லது பெற்றோர் கட்டுப்பாடு (parental controls) ‘ஆன்’ செய்யப்பட்டிருந்ததா? அதையும் மீறி உங்கள் பிள்ளை அதைப் பார்ப்பதற்காக ஏதாவது தில்லுமுல்லு வேலைப் பார்த்ததா? இப்படியெல்லாம் கேட்கும்போது, உங்கள் முக்கிய நோக்கம் உங்கள் பிள்ளையின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்வதுதான், குறுக்கு விசாரணை செய்வது அல்ல.

 பைபிள் நியமம்: “மனிதனுடைய உள்ளத்தில் இருக்கும் யோசனைகள் ஆழமான தண்ணீர்போல் இருக்கின்றன. ஆனால், பகுத்தறிவு உள்ளவன் அதை மொண்டெடுப்பான்.”—நீதிமொழிகள் 20:5.

 நீங்கள் செய்ய வேண்டியவை. உங்கள் பிள்ளை ஆபாசத்தை எதேச்சையாக பார்த்ததாக உங்களுக்குத் தெரியவந்தால், ஆபாசக் காட்சிகள் வருவதைத் தடுப்பதற்கான செட்டிங்கையும் பெற்றோர் கட்டுப்பாடு (parental controls) செட்டிங்கையும் அதற்கேற்ப நீங்கள் மாற்ற வேண்டியிருக்கலாம்.

 ஒருவேளை, உங்கள் பிள்ளையே தேடிப் போய் பார்த்ததாக தெரிய வந்தால், அன்பாகவும் அதேசமயத்தில் கண்டிப்போடும் திருத்துங்கள். ஆபாசத்தை ஒதுக்கித்தள்ள வேண்டும் என்ற எண்ணத்தை பிள்ளையின் மனதில் ஆழமாக பதிய வைப்பதற்கு யோபு 31:1, சங்கீதம் 97:10 மற்றும் சங்கீதம் 101:3 போன்ற வசனங்களில் உள்ள காரணங்களை சுட்டிக்காட்டி பேசுங்கள். c இந்த விஷயத்தில் உங்கள் பிள்ளை எந்தளவுக்கு முன்னேற்றம் செய்திருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கும், இன்னும் உங்களுடைய உதவி ஏதாவது தேவைப்படுமா என்று தெரிந்துகொள்வதற்கும், ஒவ்வொரு வாரமும் நீங்கள் இதைப் பற்றி பேசுவீர்கள் என்றும் சொல்லி வையுங்கள்.

 பைபிள் நியமம்: “உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி வளர்த்து வாருங்கள்.”—எபேசியர் 6:4.

a உங்கள் பிள்ளையிடம் அவர்கள் வயதுக்கு தகுந்த மாதிரி செக்ஸைப் பற்றி எப்படிப் பேசலாம் என்று தெரிந்துகொள்ள, “செக்ஸைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

b உங்கள் பிள்ளை எழுதிக் கொடுத்த பேப்பரில் என்னென்ன விஷயங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்வதற்கு “ஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?” என்ற ஒர்க் ஷீட்டை (ஆங்கிலம்) பாருங்கள்.

cஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?” என்ற கட்டுரையும் உங்களுக்கு உதவும்.