Skip to content

குடும்ப ஸ்பெஷல்

கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது . . .

கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது . . .

 விருப்பங்களிலும் பழக்கவழக்கங்களிலும் சுபாவத்திலும் வேறுபாடுகள் வரும்போது, அவற்றைச் சமாளிப்பது தம்பதிகளுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இதைவிட சவாலான சில பிரச்சினைகளும் வரலாம். உதாரணத்துக்கு,

  •    சொந்தக்காரர்களோடு எவ்வளவு நேரம் செலவு செய்வது

  •    பணத்தை எப்படி ஞானமாகப் பயன்படுத்துவது

  •    குழந்தைகளைப் பெற்றெடுப்பதா வேண்டாமா

 இதுபோன்ற விஷயங்களில் உங்களுக்கும் உங்கள் கணவனுக்கும் / மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் என்ன செய்வது?

 நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

 ஒத்துப்போவது என்பது, எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி யோசிப்பதைக் குறிப்பதில்லை. நிறைய விஷயங்களில் ஒத்துப்போகிற கணவன் மனைவிக்குக்கூட சில முக்கியமான விஷயங்களில் கருத்து வேறுபாடு வரலாம்.

 “எங்க குடும்பத்துல, நாங்க எல்லாரும் அடிக்கடி ஒண்ணா சேர்ந்து நேரம் செலவு செய்வோம். சனி, ஞாயிறுகள்ல தாத்தா-பாட்டி, அத்தை-மாமா, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கச்சினு ஒண்ணா சேர்ந்து ஜாலியா இருப்போம். ஆனா, என்னோட கணவரோட குடும்பத்துல அப்படி இல்ல. அதனால, குடும்பத்துல இருக்கிறவங்களோட சேர்ந்து எவ்வளவு நேரம் செலவு செய்யணும்... தூரமா இருக்கிற சொந்தக்காரங்ககிட்ட எவ்வளவு நேரம் பேசணும்... இந்த மாதிரியான விஷயங்கள்ல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்தே போகல.”—தமாரா.

 “நானும் என்னோட மனைவியும் வித்தியாசமான சூழ்நிலையில வாழ்ந்ததால, பணத்த எப்படி செலவு செய்யணுங்குறதுல எங்க ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு வந்துச்சு. கல்யாணமான புதுசுல பணத்த பத்தி எங்களுக்குள்ள வாக்குவாதம் வந்துச்சு. நிறைய தடவ பேசினதுக்கு அப்புறம்தான் எங்களால இந்த பிரச்சினைய சரி செய்ய முடிஞ்சிது.”—டைலர்.

இரண்டு பேரும் ஒரே காட்சியைப் பார்த்தாலும், அதைப் பற்றிய வித்தியாசமான கருத்துகள் அவர்களுக்கு இருக்கலாம். அதேபோல், ஒரே பிரச்சினையை கணவர் ஒரு விதமாகவும் மனைவி வேறு விதமாகவும் பார்க்கலாம்

 வெறுமனே இணங்கிப்போவது சில பிரச்சினைகளைத் தீர்த்துவிடாது. உதாரணத்துக்கு, உங்கள் மாமனாருக்கோ மாமியாருக்கோ உடல்நிலை மோசமாகிவிட்டால் என்ன செய்வது? அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது? குழந்தை வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இல்லையென்றாலும், உங்கள் துணைக்கு அந்த ஆசை இருந்தால் என்ன செய்வீர்கள்? a

 “குழந்த பெத்துக்குறத பத்தி நானும் என் மனைவியும் மணிக்கணக்கா பேசுனோம். அவ அத பத்தி ரொம்ப யோசிச்சுகிட்டே இருந்தா. அவ அப்படி யோசிக்க யோசிக்க, எங்க ரெண்டு பேரோட கருத்துகளும் முட்டிகிச்சு. என்னால இந்த விஷயத்துல ஒத்தே போக முடியல.”—அலெக்ஸ்.

 கருத்து வேறுபாடுகளால் உங்கள் கல்யாண வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும் என்று நினைத்து விடாதீர்கள். ‘முக்கியமான ஒரு விஷயத்தில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் / மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தால், நீங்கள் நினைத்ததைச் சாதிப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். ஒருவேளை, பிரிந்து போக வேண்டிய சூழ்நிலை வந்தாலும் அதைச் செய்வதற்குத் தயங்காதீர்கள்’ என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வதுபோல் செய்தால், உங்களுடைய விருப்பத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருவதுபோல் இருக்கும். அதுமட்டுமல்ல, கடவுளுக்கு முன் நீங்கள் கொடுத்த வாக்குக்கு மரியாதை காட்டாததுபோல் ஆகிவிடும்.

 நீங்கள் செய்ய வேண்டியவை

 கல்யாண உறுதிமொழியை எப்போதும் உயர்வாக மதியுங்கள். அந்த உறுதிமொழியை நீங்கள் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தால், பிரச்சினைகளை நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து சமாளிப்பீர்கள். ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்க மாட்டீர்கள்.

 பைபிள் நியமம்: “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்.”—மத்தேயு 19:6.

 நன்றாக யோசித்து முடிவு எடுங்கள். உதாரணத்துக்கு, குழந்தை வேண்டும் என்ற ஆசை உங்கள் கணவருக்கு / மனைவிக்கு இருக்கிறது. ஆனால், உங்களுக்கு அந்த ஆசை இல்லை. அப்படியென்றால், நல்ல முடிவுக்கு வருவதற்கு கீழே இருக்கும் விஷயங்களை யோசித்துப்பாருங்கள்.

  •    உங்கள் திருமண பந்தத்தின் பலம்.

     பிள்ளை வளர்ப்பில் வரும் பிரச்சினைகளை உங்கள் இரண்டு பேராலும் சமாளிக்க முடியுமா?

  •    பெற்றோராக உங்களுக்கு வரப்போகிற பொறுப்புகள்.

     வெறும் சாப்பாடு, துணிமணி, இருப்பதற்கு ஓர் இடம் ஆகியவற்றைக் கொடுத்தால் மட்டும் போதாது. இன்னும் நிறைய பொறுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

  •    உங்கள் பொருளாதார நிலை.

     வேலை... குடும்பம்... மற்ற பொறுப்புகள்... இதையெல்லாம் செய்வதற்கு போதுமான நேரத்தை உங்களால் ஒதுக்க முடியுமா?

 பைபிள் நியமம்: “உங்களில் யாராவது ஒரு கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கு பார்க்காமல் இருப்பானா?”—லூக்கா 14:28, அடிக்குறிப்பு.

 ஒரு விஷயத்தை எல்லா கோணத்திலிருந்தும் பாருங்கள். அப்படிச் செய்தால், உங்களுக்குள் ஒத்துப்போகாத சில விஷயங்களையாவது உங்களால் சரி செய்ய முடியும். உதாரணத்துக்கு, குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்வதைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது, குழந்தை வேண்டாம் என்று சொல்கிற துணை கீழே இருக்கும் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது:

  •   இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு நினைக்கிறேனா இல்லனா எப்பவுமே வேண்டாம்னு நினைக்கிறேனா?’

  •    ‘நான் ஒரு நல்லா அப்பாவா / அம்மாவா இருக்க முடியாதுனு நினைச்சு பயப்படுறேனா?’

  •    ‘குழந்தைனு ஒண்ணு வந்துட்டா, என்னோட கணவர் / மனைவி என்மேல பாசம் காட்ட மாட்டாங்கனு நினைச்சு பயப்படுறேனா?’

 குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிற துணை கீழே இருக்கும் கேள்விகளை யோசித்துப்பார்க்கலாம்:

  •    ‘பெற்றோரா நமக்கு வரப்போற பொறுப்புகள செய்றதுக்கு தயாரா இருக்குறோமா?’

  •    ‘பிள்ளைகள வளர்க்குறதுக்கு போதுமான பொருளாதார வசதி நம்மகிட்ட இருக்கா?’

 பைபிள் நியமம்: ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ . . . நியாயமானது.’—யாக்கோபு 3:17.

 உங்கள் துணையின் கருத்துகளில் புதைந்திருக்கும் நன்மைகளைப் பாருங்கள். ஒரே காட்சியை இரண்டு பேர் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இரண்டு பேரும் ஒரே காட்சியைப் பார்த்தாலும் அதைப் பற்றிய வித்தியாசமான கருத்துகள் அவர்களுக்கு இருக்கலாம். அதேபோல், ஒரு பிரச்சினையை கணவன் ஒரு விதமாகப் பார்க்கலாம்; மனைவி இன்னொரு விதமாகப் பார்க்கலாம். உங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தால், எந்த விஷயத்தில் உங்களால் ஒத்துப்போக முடியும் என்று பாருங்கள். பிறகு, அதைப் பற்றி முதலில் பேச ஆரம்பியுங்கள். கீழே இருக்கும் கேள்விகளை யோசித்துப்பாருங்கள்.

  •    நீங்கள் இரண்டு பேரும் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?

  •    உங்கள் ஒவ்வொருவருடைய கருத்துகளிலும் ஏதாவது நன்மை இருக்கிறதா?

  •    உங்கள் கல்யாண வாழ்க்கை முறிந்துபோகாமல் இருக்க, உங்கள் இரண்டு பேராலும் விட்டுக்கொடுத்துப்போக முடியுமா? இல்லையென்றால், ஒருவராவது விட்டுக்கொடுத்துப்போக முடியுமா?

 பைபிள் நியமம்: “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:24.

a இதுபோன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி கல்யாணத்துக்கு முன்பே தம்பதிகள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆனாலும், எதிர்பாராத சில சூழ்நிலைகள் வரலாம். அல்லது, போகப் போக கணவன் அல்லது மனைவியின் விருப்பங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.—பிரசங்கி 9:11.