Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

உங்கள் பிள்ளைக்கு விடாமுயற்சியை கற்றுக்கொடுங்கள்

உங்கள் பிள்ளைக்கு விடாமுயற்சியை கற்றுக்கொடுங்கள்

 உங்கள் பிள்ளையிடம் ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய சொல்கிறீர்கள். ஒன்று அல்லது இரண்டு தடவை முயற்சி செய்துவிட்டு, ‘என்னால இதை செய்யவே முடியாது,’ ‘ரொம்ப கஷ்டமா இருக்கு,’ ‘நான் பண்ணவே மாட்டேன்’ என்று சொல்லி அழுகிறது. உங்கள் பிள்ளையைப் பார்க்கும்போது உங்களுக்கும் ரொம்ப பாவமாக இருக்கிறது. அப்படியென்றால், அந்த வேலையை நீங்களே செய்துவிட வேண்டுமா? ‘பரவால, விட்டு விடு!’ என்று சொல்ல வேண்டுமா? அல்லது உங்கள் பிள்ளைக்கு விடாமுயற்சியை கற்றுக்கொடுக்க வேண்டுமா?

நீங்கள் எதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

 விடாமுயற்சி ரொம்ப முக்கியம். கஷ்டப்பட்டு வேலைகளை செய்தால்தான் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்று பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஸ்கூலில் நன்றாக படிப்பார்கள், சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள், மற்றவர்களிடம் நெருங்கி பழகுவார்கள், அவர்களுக்கு நல்ல நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதற்கு பதிலாக, எதிலும் தோற்று விடக் கூடாது... எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாது என்று பெற்றோர்கள் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்தால், பிள்ளைகள் மனசோர்வு அடைவார்கள் ‘எனக்கு எந்த திறமையும் இல்லை’ என்று நினைத்துக்கொள்வார்கள். பெரியவர்களான பிறகும் அவர்களுடைய வாழ்க்கை அந்தளவு திருப்தியாக இருக்காது.

 விடாமுயற்சியை வளர்க்க முடியும். எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ‘என்னால் முயற்சி செய்ய முடியும்,’ பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று சின்ன பிள்ளைகளாலும் உறுதியாக இருக்க முடியும். 15 மாதக் குழந்தைகளை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பெரியவர்கள் ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்வதை ஒரு குரூப் குழந்தைகள் பார்த்தார்கள், அதே வேலையை ஈசியாக செய்வதை மற்றொரு குரூப் குழந்தைகள் பார்த்தார்கள். பெரியவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்வதை பார்த்த குழந்தைகள்தான் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்வதற்கு விடாமல் முயற்சி எடுத்தார்கள்.

 “என் பெண் பிள்ளைகள் சின்ன பிள்ளைகளாக இருந்தபோது அவர்களுக்கு ஷூ லேஸை கட்ட கற்றுக்கொடுத்தது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. அதை ஒரே நாளில் கற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால், ஒவ்வொரு தடவையும் அதை எப்படி கட்ட வேண்டும் என்று 10-லிருந்து 15 நிமிஷங்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதுக்கு அப்புறம் நானே போய் உதவி செய்வேன். பல மாதங்களாக இப்படியே தான் நடந்துச்சு. சிலசமயம் ‘என்னால் முடியாது’ என்று அழ ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், போகப் போக கற்றுக்கொண்டார்கள். லேஸ் இல்லாத ஷூ வாங்கி கொடுத்து என் வாழ்க்கையை நான் ஈஸி ஆக்கியிருக்கலாம். ஆனால் பிள்ளைகளுக்கு விடாமுயற்சியை கற்றுக் கொடுப்பதற்கு சில சமயம் பெற்றோராக நாமும் விடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.“—கொலீன்.

 விடாமுயற்சியை உடைத்துப்போட முடியும். ‘என்னால முடியும்’ என்று ஒரு பிள்ளைக்கு இருக்கிற உறுதியை பெற்றோர்கள் தங்களுக்கே தெரியாமல் உடைத்துப்போட முடியும். ‘என் பிள்ளை எதிலும் தோற்றுப் போய் விடக் கூடாது,’ ‘எதையும் என்னால் செய்ய முடியவில்லை’ என்று மனமுடைந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே சில பெற்றோர்கள் ஓடோடி போய் உதவி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். பிள்ளை தன்னைப் பற்றி தாழ்வாக நினைப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் இது அந்த பிள்ளைக்கு நல்லதே கிடையாது. இந்த விஷயத்தை பற்றி ஜெசிக்கா லேஹே என்ற ஒரு எழுத்தாளர் சொல்கிறார்: “ஒவ்வொரு தடவையும் நீங்கள் பிள்ளையை காப்பாற்ற . . . முயற்சி செய்துகொண்டே இருந்தால், ‘உன்னால எதையும் உருப்படியாக செய்ய முடியாது... நீ எதுக்குமே லாயக்கில்லை... உன்னை நம்பி எங்களால எதையும் கொடுக்க முடியாது’ என்ற விஷயத்தை நீங்களே உங்கள் பிள்ளைக்கு சொல்கிற மாதிரி இருக்கும்.” a இதன் விளைவு என்ன? உங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் வருகிற எந்த சவாலையும் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள், யாராவது பெரியவர்கள் வந்து தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

உங்கள் பிள்ளை ஒரு விஷயத்தை செய்ய திணறும்போது உடனே ஓடிப்போய் உதவி செய்வதற்கு பதிலாக, விடாமுயற்சியை கற்றுக்கொடுங்கள்

நீங்கள் என்ன செய்யலாம்?

 கஷ்டப்பட்டு உழைக்க பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். வயதுக்கு ஏற்ற மாதிரி வேலைகளை கொடுப்பதன் மூலமாக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு விடாமுயற்சியை கற்றுக்கொடுக்கலாம். உதாரணத்துக்கு, மூன்றிலிருந்து ஐந்து வயதில் இருக்கிற பிள்ளைகளிடம், துவைத்த துணிகளை தனித்தனியாக பிரித்துவைக்க சொல்லலாம், விளையாட்டுப் பொருள்களை எடுத்த இடத்தில் வைக்க சொல்லலாம். இன்னும் கொஞ்சம் பெரிய பிள்ளைகளிடம், மளிகை சாமான்களை அடுக்குவதற்கு உதவி செய்ய சொல்லலாம்... டேபிளில் சாப்பாட்டை கொண்டு போய் வைக்க சொல்லலாம், சாப்பிட்டு முடித்த பிறகு திரும்ப எடுத்து வைக்க சொல்லலாம்... குப்பைகளை கொட்ட சொல்லலாம்... சிந்திக் கிடப்பதை சுத்தப்படுத்த சொல்லலாம். டீனேஜ் பிள்ளைகளுக்கு சுத்தப்படுத்துவது, பராமரிப்பது, ரிப்பேர் வேலைகளை பார்ப்பது போன்ற கஷ்டமான வேலைகளை கொடுக்கலாம். வீட்டு வேலைகள் செய்வது பிள்ளைகளுக்கு பிடிக்காதுதான். இருந்தாலும், வீட்டில் சின்னச் சின்ன வேலைகளை கொடுத்து சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை பெற்றோர்கள் பொறுப்பாக நடத்தும்போது அது பிள்ளைகளுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். கஷ்டப்பட்டு உழைப்பது எப்படி என்று அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பெரியவர்களான பிறகு, கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலைகள் கஷ்டமாக இருந்தாலும் பாதியிலேயே விட்டு விடாமல் அதை செய்து முடிப்பார்கள்.

 பைபிள் ஆலோசனை: “எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.”—நீதிமொழிகள் 14:23.

 “பிள்ளைகளை பிசியாக வைப்பதற்காக ஏதோ ஒரு வேலையை கொடுக்க வேண்டுமே என்று கொடுக்காதீர்கள். அப்படிச் செய்தால்,நேரம்தான் வீணாகும். யாருமே, ஏன் குழந்தைகளும் கூட, அப்படி செய்வதை விரும்ப மாட்டார்கள். உண்மையாகவே பிரயோஜனமாக இருக்கிற வேலைகளைக் கொடுங்கள். உங்களுக்கு சின்ன பிள்ளைகள் இருந்தால் டேபிள்-சேரை சுத்தப்படுத்த சொல்லுங்கள். நீங்கள் காரை கழுவிக்கொண்டிருந்தால் உங்களால் குனிந்து துடைக்க முடியாத இடத்தையெல்லாம் அவர்களை துடைக்க சொல்லுங்கள். இப்படி அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும்போது உடனடியாக பாராட்டுங்கள்.“—கிறிஸ்.

 கஷ்டமான வேலையை செய்ய பிள்ளைக்கு கற்றுக்கொடுங்கள். ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததால்தான் சிலசமயம் பிள்ளைகள் அந்த வேலையை பாதியிலேயே விட்டு விடுகிறார்கள். புதிதாக ஒரு வேலையை சொல்லிக் கொடுப்பதற்கு கீழே சொல்லியிருப்பது போல் செய்துபாருங்கள். முதலில், நீங்கள் அந்த வேலையை செய்யுங்கள், உங்கள் பிள்ளை அதை கவனிக்கட்டும். பின்பு, இரண்டு பேரும் சேர்ந்து அந்த வேலையை செய்யுங்கள். அடுத்து, உங்கள் பிள்ளையிடம் அந்த வேலையை செய்ய சொல்லிவிட்டு அதை நீங்கள் கவனமாக பாருங்கள், எதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள். கடைசியாக உங்கள் பிள்ளை தானாகவே அந்த வேலையை செய்துமுடிக்க விட்டுவிடுங்கள்.

 பைபிள் ஆலோசனை: “நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்.”—யோவான் 13:15.

 “பிள்ளைகள் விடாமுயற்சியை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அப்பா அம்மாவாக நாம்தான் நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். அவர்கள் எந்த குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோமோ அந்த குணத்தை முதலில் நாம் காட்ட வேண்டும். இதை என் அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.”—டோக்.

 தடுமாற்றமும் தோல்வியும் சகஜம்தான் என்பதை ஏற்றுக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு சொல்லிக்கொடுங்கள். ஒரு விஷயத்தை செய்தபோது நீங்கள் எவ்வளவு தடுமாறினீர்கள், அதை விடாமல் செய்ததால் எப்படிப் பயனடைந்தீர்கள் என்பதையெல்லாம் உங்கள் பிள்ளைக்கு சொல்லுங்கள். ஒரு புது விஷயத்தை செய்யும்போது சில தடுமாற்றங்கள் வருவது சகஜம்தான். ஆனால், அந்த தவறிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் சொல்லிக்கொடுங்கள். ‘நீ இதை செய்து முடித்தாலும்சரி, முடிக்கவில்லை என்றாலும்சரி உன்மேல் எனக்கு இருக்கிற அன்பு குறையாது’ என்பதை பிள்ளையிடம் சொல்லுங்கள். தசைகளை பயன்படுத்த பயன்படுத்தத்தான் அது பலமாகும். அதே மாதிரி சவால்களை சந்திக்க உங்கள் பிள்ளைகளை அனுமதித்தால்தான் அவர்களுடைய விடாமுயற்சி இன்னும் பலமாகும். உங்கள் பிள்ளை ஒரு விஷயத்தை செய்ய திணறும்போது உடனே ஓடிப்போய் உதவி செய்யாதீர்கள். அதை செய்ய முடியவில்லையே என்று நொந்துபோனாலும் கூட அவர்களே செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். “ஒரு விஷயம் தோல்வியில் போய் முடிவதற்கு வாய்ப்பு இருந்தாலும் அதை செய்ய முயற்சி எடுக்கும்போதுதான் ஒரு இளைஞர் ரொம்ப உறுதியாகவும் பக்குவமாகவும் ஆகிறார்” என்று ஹவ் சில்ட்ரன் ஸக்ஸீட் என்ற புத்தகம் சொல்கிறது.

 பைபிள் ஆலோசனை: “சிறு வயதிலேயே கஷ்டப்பட்டு உழைப்பது ஒருவனுக்கு நல்லது.”—புலம்பல் 3:27, கண்டம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.

 “ஒரு கஷ்டமான வேலையை உங்கள் பிள்ளைகள் செய்ய தடுமாறினாலும் அதை அவர்களையே செய்ய விட்டுவிடுங்கள். அதேசமயத்தில் அப்பா-அம்மா உதவி செய்ய இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் உங்கள் பிள்ளைக்கு நல்லது. ஏனென்றால், ஒரு விஷயத்தை விடாமுயற்சியோடு செய்யும்போது அவர்கள் ஒரு புது திறமையையும் கற்றுக்கொள்வார்கள், அவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகமாகும். போகப் போக அவர்களுடைய தடுமாற்றம் எல்லாம் போய்விடும்.”—ஜோர்டன்.

 முயற்சியைப் பாராட்டுங்கள், புத்திசாலித்தனத்தை அல்ல. உதாரணத்துக்கு உங்கள் பிள்ளை ஒரு விஷயத்தை நன்றாக செய்தால், ‘நீ சூப்பரா செஞ்ச, நீ ஒரு புத்திசாலி!’ என்று சொல்வதற்கு பதிலாக ‘நீ சூப்பரா செஞ்ச, நீ எடுத்த முயற்சியை நான் ரொம்ப பாராட்டுகிறேன்!’ என்று சொல்லுங்கள். புத்திசாலித்தனத்தை விட முயற்சியை பாராட்டுவது ஏன் முக்கியம்? டாக்டர் கேரல் வெக் இப்படிச் சொல்கிறார்: “குழந்தைகளுடைய புத்திசாலித்தனத்தை பாராட்டினால், ஏதாவது ஒரு விஷயம் கஷ்டமாக இருந்தாலோ, எதையாவது தப்பாக செய்துவிட்டாலோ தங்கள் மேலேயே அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும். சவால்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள... தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள... கஷ்டமான வேலையை கூட என்ஜாய் பண்ணி செய்ய... ஒரு வேலையை செய்ய புதுப் புது வழிகளைக் கண்டுபிடிக்க... தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க சொல்லிக்கொடுப்பதுதான் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கிற பெரிய பரிசு. இப்படி செய்யும்போது உங்கள் பிள்ளைகள் புகழ்ச்சிக்கு மயங்க மாட்டார்கள்.” b

 பைபிள் ஆலோசனை: “ஒருவனைச் சோதிப்பது புகழ்ச்சி.”—நீதிமொழிகள் 27:21.

a தி கிஃப்ட் ஆப் ­­­­­ஃபெயிலியர் என்ற புத்தகத்திலிருந்து

b மைன்ட்செட் என்ற புத்தகத்திலிருந்து