குடும்ப ஸ்பெஷல் | திருமணம்
காலங்கள் உருண்டோடும்போது கல்யாண வாழ்க்கை கசந்தால்...
வயதானவர்களுக்கு நடுவே விவாகரத்து ரொம்ப அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால்தான் ஆராய்ச்சியாளர்கள் புதிதாக ‘கிரே டிவோர்ஸ்’ என்ற வார்த்தையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் 1990-க்கும் 2015-க்கும் இடையில் 50 வயதை தாண்டியவர்களுடைய விவாகரத்து எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. 65 வயதை தாண்டியவர்களுடைய விவாகரத்து எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. வயதானவர்களுக்கு இடையே விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்? உங்கள் கல்யாண வாழ்க்கையில் இந்த மாதிரி நடக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
இந்தக் கட்டுரையில்
வயதானவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம்?
சில வயதான தம்பதிகள் விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குக் காரணம் அவர்களுக்கு நடுவில் இருக்கிற நெருக்கம் குறைவதுதான். காலங்கள் உருண்டோடும்போது, கணவனுக்கும் மனைவிக்கும் விருப்பு வெறுப்புகள் மாறிக்கொண்டே இருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவில் எதுவுமே ஒத்துப்போகிற மாதிரி இல்லை என்று தோன்றலாம். பிள்ளைகள் பெரியவர்களாகி வீட்டை விட்டுப் போன பிறகு இதுவரைக்கும் அவர்கள் அப்பா-அம்மாவாகத்தான் தங்களுடைய கடமையை செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள், கணவன்-மனைவியாக எப்படி இருப்பது என்பதையே மறந்துவிட்டார்கள் என்று அவர்களுக்குத் தோன்றலாம்.
கல்யாணமானவர்கள் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திருமண ஆலோசகர்கள் சில வருஷங்களாக சொல்லிக்கொடுக்கிறார்கள். ‘கல்யாண வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருக்கிறேனா? நான் ஒரு நல்ல நபர் ஆவதற்கு இந்தக் கல்யாண வாழ்க்கை எனக்கு உதவி செய்திருக்கிறதா? என்னுடைய துணை என் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா?’ இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘இல்லை’ என்பது உங்களுடைய பதில் என்றால், ‘உங்களுக்கு எது பெஸ்ட் என்று தோன்றுகிறதோ அதையே செய்யுங்கள், அதாவது, விவாகரத்து செய்துவிட்டு புது வாழ்க்கையை ஆரம்பியுங்கள்!’ என்று சொல்கிறார்கள்.
இப்போதெல்லாம் விவாகரத்தை யாரும் ஒரு பெரிய தப்பாக நினைப்பது இல்லை. இதை பற்றி சமூகவியலாளர் எரிக் க்ளினென்பர்க் இப்படி எழுதுகிறார்: “முன்பெல்லாம் கல்யாண வாழ்க்கையில் உங்களுக்கு சந்தோஷம் இல்லை என்றால் நீங்கள் ஏன் விவாகரத்து செய்கிறீர்கள் என்பதற்கு நியாயமான காரணங்களை சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அப்படி கிடையாது. உங்களுடைய கல்யாண வாழ்க்கையில் திருப்தியில்லை என்றால், நீங்கள் இன்னும் அந்த நபரோடு வாழ்வதற்கான காரணங்களை சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், உங்களுக்கு எது பெஸ்ட்டோ அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். a
விவாகரத்து செய்த பிறகு அவர்களுக்கு இருந்த சில பிரச்சினைகள் சரியாகிவிட்டது போலத் தெரியலாம். ஆனால் அதற்கு பதிலாக புதிது புதிதாக வேறு பிரச்சினைகள் வரும். உதாரணத்துக்கு, விவாகரத்து செய்யும் வயதானவர்களுக்கு பயங்கரமான பணக் கஷ்டம் வருகிறது, குறிப்பாக பெண்களுக்கு என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது.
இதில் யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. டோன்ட் டிவோர்ஸ் என்ற புத்தகம் இப்படி சொல்கிறது: “நீங்கள் என்னதான் புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பித்தாலும் நீங்கள் அதே பழைய ஆள்தான்.“ ‘நீங்கள் பேசுகிற விதத்தால்தான் பிரச்சினைகள் வந்திருந்தது என்றால் அதை மாற்றிக்கொள்ள ஏதாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? கருத்து வேறுபாடுகள் வரும்போது நீங்கள் நடந்துகொள்கிற விதத்தை மாற்றியிருக்கிறீர்களா?’ b
நீங்கள் என்ன செய்யலாம்
மாற்றங்கள் வரும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். எந்த உறவுமே ஆரம்பத்தில் இருக்கிற மாதிரியே கடைசி வரைக்கும் இருக்காது. பிள்ளைகள் வளர்ந்து வீட்டைவிட்டு வெளியே போனதாலோ, உங்களுக்குள் விருப்புவெறுப்புகள் மாறிவிட்டதாலோ, உங்களுக்கு நடுவில் இருக்கிற பந்தத்தில் விரிசல் வந்திருக்கலாம். ஆரம்பத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் இப்போது உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அதை இன்னும் அழகாக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள்.
பைபிள் நியமம்: ““இந்தக் காலத்தைவிட அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது!” என்று சொல்லாதே. அப்படிச் சொல்வது ஞானம் அல்ல.”—பிரசங்கி 7:10.
உங்கள் துணையின் நெருங்கிய நண்பராக இருங்கள். உங்கள் துணைக்குப் பிடித்த ஒரு விஷயத்தில் உங்களால் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள முடியுமா? அல்லது உங்களுக்கு பிடித்த விஷயத்தை உங்கள் துணையோடு சேர்ந்து செய்ய முடியுமா? நீங்கள் இரண்டு பேருமே என்ஜாய் பண்ணுகிற மாதிரி புதிதாக ஒரு விஷயத்தை சேர்ந்து செய்ய முடியுமா? உங்களுடைய முக்கிய நோக்கமே நீங்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக நேரம் செலவு செய்வதுதான். அப்படிச் செய்யும்போது ஒரே வீட்டில் இரு துருவங்களாக இருப்பதற்கு பதிலாக இணைபிரியா நண்பர்களாக இருக்க முடியும்.
பைபிள் நியமம்: “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:24.
ஒருவரை ஒருவர் நன்றாக நடத்துங்கள். கல்யாணமாகி ரொம்ப வருஷங்கள் ஆனதால் மரியாதை மனதில் இருந்தால் போதும் என்று நினைக்காதீர்கள். உங்கள் துணையிடம் மரியாதையாகப் பேசுங்கள். காதலித்த சமயத்தில் ஒருவரை ஒருவர் எப்படி நடத்தினீர்களோ அதே மாதிரி நடத்துங்கள். அவரிடம் “ப்ளீஸ்“, “தேங்க்-யூ“ சொல்லுங்கள். நீங்கள் அவர்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள், பாசமாக இருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி வெளிக்காட்டுங்கள். அவர் செய்கிற எல்லா விஷயங்களையும் நீங்கள் ரொம்ப பெரிதாக நினைக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்.
பைபிள் நியமம்: “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.”—எபேசியர் 4:32.
சந்தோஷமான நினைவுகளை மனதில் மலர விடுங்கள். உங்களுடைய கல்யாண ஆல்பத்தை ஒன்றாக சேர்ந்து பாருங்கள் அல்லது வெவ்வேறு சமயங்களில் நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த ஃபோட்டோக்களைப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது உங்களுடைய கல்யாண வாழ்க்கையிலும் காதல் பூக்கும்... மரியாதை மலரும்.
பைபிள் நியமம்: “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது அன்பு காட்டுவதுபோல், உங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.”—எபேசியர் 5:33.
a கோயிங் ஸோலோ-த எக்ஸ்டிராடினரி ரைஸ் அண்ட் சர்ப்ரைஸிங் அப்பீல் ஆஃப் லிவ்விங் அலோன் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
b பாலியல் முறைகேடு மட்டும்தான் விவாகரத்து செய்வதற்கான ஒரே காரணம் என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 19:5, 6, 9) “விவாகரத்து செய்வதை பைபிள் அனுமதிக்கிறதா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.