குடும்ப ஸ்பெஷல்
தோல்வியிலிருந்து மீண்டுவர பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?
வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் தோல்விகளையோ ஏமாற்றங்களையோ உங்கள் பிள்ளைகள் சந்திக்க வேண்டியிருக்கலாம். அவற்றிலிருந்து மீண்டுவருவதற்கு அவர்களுக்கு எப்படி உதவலாம்?
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தோல்விகள் ஏற்படுவது சகஜம்தான்! “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:2) அப்படியென்றால், பிள்ளைகளும் தவறு செய்வார்கள்! ஆனால், தோல்விகளால் சில நன்மைகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, தோல்வியிலிருந்து மீண்டுவருவதற்கான திறமையை வளர்த்துக்கொள்வதற்கு அவை வாய்ப்பளிக்கின்றன. பிறக்கும்போதே பிள்ளைகளுக்கு இந்தத் திறமை இல்லையென்றாலும், அதை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடியும். “‘நான் ஒண்ணும் தோத்துபோகலையே’னு சொல்லி பிள்ளைங்க தங்களையே ஏமாத்திக்குறதுக்கு பதிலா, தோல்வியிலிருந்து பாடங்கள கத்துக்குறதுதான் நல்லதுங்குறத நானும் என் கணவரும் புரிஞ்சிக்கிட்டோம். அப்படி அவங்க கத்துக்கிட்டாதான், எதிர்பார்த்தது நடக்காதப்போ சோர்ந்துபோயிட மாட்டாங்க” என்று லோரே சொல்கிறார்.
பிள்ளைகள் நிறைய பேர், தோல்விகள் ஏற்படும்போது துவண்டுவிடுகிறார்கள். தோல்வியைச் சமாளிக்க சில பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால், தோல்விகளுக்கு தங்கள் பிள்ளைகள் காரணம் கிடையாது என்று அப்பா - அம்மா சொல்லிவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, பிள்ளைகள் குறைவான மதிப்பெண் எடுத்தால், அவர்களுடைய ஆசிரியர்மேல் அப்பா அம்மா பழிபோடுகிறார்கள். பிள்ளைகளுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் இடையில் ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால், எடுத்த எடுப்பிலேயே தங்கள் பிள்ளைகளுடைய நண்பர்கள்மேல்தான் தவறு என்று சொல்லிவிடுகிறார்கள்.
பிள்ளைகள் செய்யும் தவறுகளிலிருந்து எல்லா சமயத்திலும் அப்பா - அம்மா அவர்களைப் பாதுகாத்தால், தாங்கள் செய்தது தவறு என்பதையும், அந்தத் தவறை ஈடுகட்ட ஏதாவது செய்ய வேண்டியது அவசியம் என்பதையும் பிள்ளைகள் எப்படிப் புரிந்துகொள்வார்கள்?
நீங்கள் செய்ய வேண்டியவை
பிள்ளைகள் என்ன செய்கிறார்களோ அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுங்கள்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.
நம்முடைய செயல்களுக்கான விளைவுகளை நாம் தவிர்க்க முடியாது. இழப்புகளுக்கு நாம் ஈடுகட்டிதான் ஆகவேண்டும்! தவறுகளுக்கான தண்டனையை அனுபவித்துதான் தீரவேண்டும்!! நாம் என்ன செய்தாலும் அதற்கென்று சில விளைவுகள் இருக்கும் என்பதைப் பிள்ளைகள் புரிந்துவைத்திருக்க வேண்டும். ஏதாவது தவறு நடந்துவிட்டால், அதில் தங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள பிள்ளைகள் பழகிக்கொள்ள வேண்டும். அதனால், உங்கள் பிள்ளைகள் தவறு செய்யும்போது, அந்தப் பழியைத் தூக்கி மற்றவர்கள்மேல் போடாதீர்கள். அதற்குப் பதிலாக, அவர்களுடைய வயதுக்குத் தகுந்தபடி, அவர்கள் செய்த தவறுகளுக்கான விளைவுகளை அனுபவிக்கும்படி விட்டுவிடுங்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் சில விளைவுகள் இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், இல்லையா?
தீர்வுகளைக் கண்டுபிடிக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்.”—நீதிமொழிகள் 24:16.
தோல்விகள் ஏற்படும்போது நம்முடைய மனது வலிக்கும். ஆனால், அதோடு நம்முடைய வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ‘எனக்கு இப்படி நடந்திருக்கவே கூடாது’ என்று உங்கள் பிள்ளை நினைக்கலாம். அந்தச் சமயத்தில், அதையே நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதையும், தீர்வுகளைக் கண்டுபிடிப்பதுதான் முக்கியம் என்பதையும் சொல்லிக்கொடுங்கள். உதாரணத்துக்கு, உங்களுடைய பையன் பரீட்சையில் ‘ஃபெயில்’ ஆகிவிட்டால் என்ன செய்யலாம்? நன்றாகப் படித்தால் அடுத்த தடவை இப்படி ஒரு நிலைமை வராது என்பதைப் புரியவையுங்கள். (நீதிமொழிகள் 20:4) உங்களுடைய மகளுக்கும் அவளுடைய தோழிக்கும் ஒரு பிரச்சினை இருப்பது உங்களுக்குத் தெரியவரும்போது என்ன செய்யலாம்? யார்மீது தவறு இருந்தாலும் சரி, உங்கள் மகளே போய் அவளுடைய தோழியிடம் மன்னிப்பு கேட்பதற்கும், பிரச்சினையைச் சரி செய்வதற்கும் கற்றுக்கொடுங்கள்.—ரோமர் 12:18; 2 தீமோத்தேயு 2:24.
தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காமல் இருப்பதற்கு பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல் . . . இருக்கும்படி . . . எல்லாருக்கும் சொல்கிறேன்.’—ரோமர் 12:3.
மற்ற பிள்ளைகளைவிட நீ தான் ‘பெஸ்ட்’ என்று உங்கள் பிள்ளைகளிடம் சொல்வது யதார்த்தமாகவும் இருக்காது, அவர்களுக்கு உதவியாகவும் இருக்காது. ஏனென்றால், நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் எல்லா சமயத்திலும் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. நன்றாக விளையாடும் பிள்ளைகள் எல்லா சமயத்திலும் ஜெயிப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. அதனால், பிள்ளைகள் தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காமல் இருந்தால், தோல்விகளையும் ஏமாற்றங்களையும் அவர்களால் நன்றாகச் சமாளிக்க முடியும்.
கஷ்டங்கள் நம்மைப் பலப்படுத்தும் என்றும் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள உதவும் என்றும் பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:2-4) அதனால், உங்கள் பிள்ளைகள் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும்போது, அவற்றைச் சரியான விதத்தில் பார்ப்பதற்கு அவர்களுக்கு உதவுங்கள்.
எந்த ஒரு திறமையையும் கற்றுக்கொடுப்பதற்கு நேரமும் முயற்சியும் அவசியம். அதேபோல், தோல்வியிலிருந்து மீண்டுவருவதற்கான திறமையை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் நேரமும் முயற்சியும் அவசியம். நீங்கள் இப்படிச் செய்தால், பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்போது, அவர்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். “பிரச்சினைகளைச் சமாளிக்கத் தெரிந்த டீனேஜ் பிள்ளைகள், அவ்வளவு சீக்கிரத்தில் ஆபத்தான காரியத்திலும் முட்டாள்தனமான காரியத்திலும் இறங்கிவிட மாட்டார்கள். எதிர்பார்க்காத விஷயங்கள் ஏதாவது நடந்தால் அதை நன்றாகச் சமாளிப்பார்கள்” என்று லெட்டிங் கோ வித் லவ் அண்டு கான்ஃபிடென்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. பிரச்சினைகளிலிருந்து மீண்டுவரும் கலையைப் பிள்ளைகள் இப்போதே கற்றுக்கொண்டால், வளர்ந்து ஆளானதற்குப் பிறகு அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.
டிப்ஸ்: முன்மாதிரி வையுங்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் ஏமாற்றங்களை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ, அதை வைத்து உங்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுங்கள்.