Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

யோசிக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டின் நன்மை

யோசிக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டின் நன்மை

 யோசிக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள் பிள்ளைகளுடைய ஆர்வத்தையும் கற்பனை திறனையும் தூண்டும். இதனால் பிள்ளைகள் பொறுப்பாக யோசிப்பார்கள், நடந்துகொள்வார்கள். தானாகவே வேலைகள் செய்யவும் கற்றுக்கொள்வார்கள்.

 அதற்கு சில உதாரணங்கள்:

  •   படம் வரைவது

  •   சமைப்பது

  •   விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடுவது

  •   பாட்டுப் பாடுவது

  •   வீடு கட்டி விளையாடுவது (பில்டிங் ப்ளாக்ஸ்)

  •   வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து விளையாடுவது (ஒரு அட்டைப் பெட்டியை வைத்து விளையாடுவதும் கற்பனை திறனை வளர்க்கும்)

 இப்போதெல்லாம் நிறைய நாடுகளில் யோசிக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகளை பிள்ளைகள் விளையாடுவதில்லை. அதற்கு பதிலாக சும்மா உட்கார்ந்து எதையாவது பார்க்கிறார்கள் அல்லது ஏதாவது ‘கிளாஸ்’கு போகிறார்கள்.

 இதில் என்ன பிரச்சினை என்று நினைக்கிறீர்களா?

 நீங்கள் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

  •   மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு பிள்ளைகளின் திறமையை வளர்க்கும். அப்படிப்பட்ட விளையாட்டுகள் பிள்ளைகளின் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. பிள்ளைகளுடைய யோசிக்கும் திறனையும் வளர்க்கும். மற்றவர்களோடும் அவர்கள் நன்றாகப் பழகுவார்கள். அதோடு, பொறுமையாக இருக்க, தீர்மானங்கள் எடுக்க, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த, மற்ற பிள்ளைகளோடு விளையாடும்போது ஒத்துப்போக பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். சுருக்கமாக சொன்னால், யோசிக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள், வளர வளர பிள்ளைகளை பக்குவப்படுத்தும்.

  •   அளவுக்கு அதிகமான எலக்ட்ரானிக் பொழுதுபோக்கு ஆபத்தானது. அளவுக்கு அதிகமான எலக்ட்ரானிக் பொழுதுபோக்கு பிள்ளைகளை அடிமையாக்கிவிடும். அப்படி அடிமையாகும் பிள்ளைகளின் உடல் எடை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அவர்கள் முரட்டுத்தனமாகவும் நடந்துக்கொள்கிறார்கள். ஸ்கூல் போக ஆரம்பிக்காத பிள்ளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக பிள்ளையின் கையில் ஃபோனை கொடுத்து உட்கார வைக்கும் பெற்றோர்களே, உஷார்!

  •   இடைவிடாமல் கற்றுக்கொண்டே இருப்பதும் பிள்ளைகளுக்கு ஆபத்துதான். பிள்ளைகள் சும்மா இருக்க கூடாது என்பதற்காக பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ”இந்த கிளாஸ் போ, அந்த கிளாஸ் போ,“ ”இத படி, அத படி“ என்று ஏதாவது கற்றுக்கொள்ள சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் கற்றுக்கொண்டதை பற்றி பிள்ளைகள் யோசிப்பதற்கும் கற்பனை செய்து பார்ப்பதற்கும் நேரம் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால், அதற்கு நேரம் கொடுப்பதுதான் ரொம்ப முக்கியம்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •   மூளையை வேலை செய்ய விடுங்கள். வாய்ப்பு கிடைத்தால் பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே இயற்கையோடு ஓடியாடி விளையாட விடுங்கள். கற்பனை திறன் வளரும் விதத்தில் ஏதாவது செய்வதற்கோ விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடுவதற்கோ பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். a

     இப்படி யோசித்துப் பாருங்கள்: மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள் என்ன மாதிரியான திறமைகளையும் குணங்களையும் வளர்த்துக்கொள்ள என் பிள்ளைக்கு உதவும்? வளர்ந்த பிறகு இது அவனுக்கு/அவளுக்கு எப்படி உதவி செய்யும்?

     பைபிள் நியமம்: “உடற்பயிற்சி . . . நன்மை தரும்.”—1 தீமோத்தேயு 4:8.

  •   அதிக நேரம் பார்க்க விடாதீர்கள். பிள்ளைகள் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை கவனிக்கும் பொறுப்பை ஃபோன், டேப்லட் அல்லது டிவி போன்ற கேட்ஜெட்டுகளிடம் கொடுப்பதற்கு முன்னால் யோசியுங்கள். 2 வயதுக்கு கீழ் இருக்கும் பிள்ளைகள் கேட்ஜெட்டுகளை பார்க்க அனுமதிக்காதீர்கள் என்றும், 2 முதல் 5 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்துக்கு மேல் கேட்ஜெட்டுகளை பார்க்க விடாதீர்கள் என்றும் குழந்தை நல மருத்துவர்கள் சொல்கிறார்கள். b

     இப்படி யோசித்துப் பாருங்கள்: என்னுடைய பிள்ளை அளவாக கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவதற்கு நான் எப்படி உதவி செய்யலாம்? என் பிள்ளை அதை பயன்படுத்தும்போது நானும் அவனோடு/அவளோடு இருக்க வேண்டுமா? எலக்ட்ரானிக் பொழுதுபோக்குக்கு பதிலாக வேறு ஏதாவது பயனுள்ள பொழுதுபோக்கு இருக்கிறதா?

     பைபிள் நியமம்: “நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:15, 16.

  •   திறமைகளை வளர்க்கும் ‘கிளாஸ்’—கவனம். உண்மைதான் இந்த ‘கிளாஸ்’ உங்கள் பிள்ளையின் விளையாட்டு திறமையையோ வேறு ஏதாவது திறமையையோ வளர்க்கும். ஆனால் ஒரே நாளில் அடுத்தடுத்து நிறைய பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதால் பிள்ளைகளுக்கும் சரி அவர்களை கூட்டிக்கொண்டு போகும் உங்களுக்கும் சரி, டென்ஷன் தான் மிஞ்சும். நேரத்தை ஞானமாக பயன்படுத்துவதை பற்றி எபேசியர் 5:15, 16-ல் சொல்லியிருக்கும் ஆலோசனை இந்த சூழ்நிலைக்கும் பொருந்தும்.

     இப்படி யோசித்துப் பாருங்கள்: இந்த ‘கிளாஸ்’ எல்லாம் என் பிள்ளையை திணறடிக்கிறதா? அப்படியிருந்தால், நாங்கள் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்?

     பைபிள் நியமம்: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”—பிலிப்பியர் 1:10.

a இன்று தயாரிக்கப்படுகிற நிறைய விளையாட்டு பொருள்கள் பிள்ளைகளுடைய மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து விளையாடுவது, உதாரணத்துக்கு கட்டிடம் கட்டி விளையாடுவது, அட்டைப்பெட்டிகளை வைத்து விளையாடுவது போன்றவை பிள்ளைகளுடைய கற்பனை திறனையும் யோசிக்கும் திறனையும் அதிகமாக்கும்.

b அளவாக கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவது என்று இங்கு சொல்லியிருப்பது பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவதை மட்டும் அர்த்தப்படுத்துகிறது. சொந்தக்காரர்களுடன் வீடியோ காலில் பேசுவதையோ, படிப்புக்காகவோ ஆன்மீக காரியங்களுக்காகவோ பயன்படுத்துவதை அர்த்தப்படுத்தவில்லை.