குடும்ப ஸ்பெஷல் | திருமணம்
வேலையை வேலை இடத்தோடு நிறுத்திக்கொள்வது எப்படி?
டெக்னாலஜி உச்சத்தில் இருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், முதலாளிகள், கூடவேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் என எல்லாருமே நாம் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும், வாரத்தின் ஏழு நாட்களுமே அப்படிச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படி ஒரு நிலைமை இருப்பதால், வேலையையும் மற்ற விஷயங்களையும் சமநிலையோடு வைப்பது கஷ்டமாகிவிடுகிறது. குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுக்க முடியாமல்கூட போய்விடுகிறது.
நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை
உங்கள் துணைக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தை, நீங்கள் வேலைக்கு கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. அதற்கு டெக்னாலஜி ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகும், உங்களுக்கு காலோ மெஸேஜோ ஈ-மெயிலோ வந்தால், ‘செய்ய வேண்டிய வேலையைச் நான் செய்யாமல் வந்து விட்டேனோ’ என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படலாம்.
“வேலையை முடித்துவிட்டு வந்து குடும்பத்தோடு நேரம் செலவு செய்கிற அந்த அழகான காலமெல்லாம் எப்போதோ போய்விட்டது. வேலை சம்பந்தப்பட்ட ஈ-மெயில் அல்லது ஃபோன் கால் திடீர் திடீர் என்று வருவதால் கல்யாண வாழ்க்கை அடி வாங்குகிறது.”—ஜானட்.
வேலையையும் குடும்பத்தையும் சமநிலையாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள்தான் முதல் படியை எடுக்க வேண்டும். உடனடியாக ஒரு திட்டம் போடவில்லை என்றால், உங்கள் கல்யாண வாழ்க்கைக்குள் வேலை மூக்கை நுழைத்துவிடும்.
“‘அவர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். அவர் என்னை மன்னித்துவிடுவார். பிற்பாடுகூட அவரோடு நேரம் செலவு செய்துகொள்ளலாம்’ என்று நீங்கள் நினைப்பதால் முதலில் பாதிக்கப்படுவது உங்கள் துணைதான்!”—ஹாலி
வேலை விஷயத்தில் சமநிலையாக இருக்க டிப்ஸ்
கல்யாண வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுங்கள். “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 19:6) கடவுள் இணைத்த இந்த பந்தத்தை மனிதனே ‘பிரிக்கக்கூடாது’ என்றால், நம்முடைய வேலை நம் பந்தத்தை கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?
”வாடிக்கையாளர்கள் நமக்கு காசு கொடுப்பதால், அவர்கள் எப்போது கூப்பிட்டாலும் நாம் ஃபோனை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கல்யாண வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் என்பதை நான் புரிந்துவைத்திருக்கிறேன். அதனால், ‘லீவ் நாட்களில் என்னால் ஃபோனை எடுக்க முடியாது, நான் பிறகு உங்களிடம் பேசுகிறேன்’ என்று முன்பே அவர்களிடம் சொல்லி வைத்துவிடுவேன்.”—மார்க்
உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் வேலையைவிட என்னுடைய கல்யாண வாழ்க்கைதான் முக்கியம் என்பதை நான் நடந்துக்கொள்ளும் விதம் காட்டுகிறதா?’
‘முடியாது’ என்று சொல்ல தயங்காதீர்கள். ‘அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:2) உங்களிடம் அடக்கம் என்ற பண்பு இருந்தால், சில விஷயங்களைச் செய்ய முடியாது என்று சொல்வதற்கும், உங்களுடைய வேலையை மற்றவர்களிடம் கொடுப்பதற்கும் தயங்க மாட்டீர்கள்.
“நான் ஒரு பிளம்பராக வேலை செய்கிறேன். யாராவது என்னை அவசரமாக கூப்பிடும்போது, என்னால் போக முடியவில்லை என்றால் அவர்கள் ரொம்ப டென்ஷன் ஆகிவிடுவார்கள். மற்றவர்கள் எதிர்பார்க்கிற நேரத்தில் என்னால் போக முடியாது என்று எனக்கு தோன்றினால், வேறு ஒரு பிளம்பரிடம் அவர்களைப் பேச சொல்வேன்.”—கிறிஸ்டோபர்
உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: “‘நீங்கள் என்னோடு அதிக நேரம் செலவு செய்வதில்லை’ என்று என்னுடைய துணை சொன்னால், எக்ஸ்ட்ராவாக வரும் வேலையை வேண்டாம் என்று சொல்ல நான் தயாராக இருக்கிறேனா? இதைப் பற்றி என் துணை என்ன நினைக்கிறார்?”
ஒன்றாக சேர்ந்து நேரத்தைச் செலவிட திட்டம் போடுங்கள். “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:1) உங்களுக்கு வேலை பயங்கர பிஸியாக போய்க்கொண்டிருக்கிறதா? அப்படியென்றால், உங்கள் துணையோடு சேர்ந்து நேரம் செலவிட கொஞ்சம் நேரத்தை கட்டாயம் ஒதுக்குங்கள்.
”தலைக்குமேல் வேலை இருக்கிற மாதிரி சூழ்நிலைகளில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிட திட்டம் போடுவோம். அது ஒருவேளை, ஒன்றாக சேர்ந்து சாப்பிடுகிற நேரமாக இருக்கலாம். அல்லது, பீச்சில் வாக்கிங் போகிற நேரமாக இருக்கலாம். அந்தச் சமயத்தில் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வோம்.”—டெபோரா
உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எந்த கவனச்சிதறலும் இல்லாமல் என்னுடைய துணையோடு சேர்ந்து நேரம் செலவிட நான் திட்டம் போட்டிருக்கிறேனா? இதைப் பற்றி என் துணை என்ன சொல்லுவார்?’
ஆஃப் பண்ணி வையுங்கள். “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 1:10) வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை தொந்தரவு செய்யாத மாதிரி உங்களுடைய ஃபோன் மற்றும் கம்ப்யூட்டரை அவ்வப்போது ஆஃப் பண்ணி வைக்க முடியுமா?
”ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் என்னுடைய வேலையை முழுவதுமாக முடிக்க நான் முயற்சி செய்தேன். அதற்கு பிறகு ஃபோனிலிருந்து எந்த மெஸேஜும் வராத மாதிரி அதன் செட்டிங்கை மாற்றி வைத்துவிடுவேன்.”—ஜெரமி
உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய முதலாளி அல்லது வாடிக்கையாளர் கால் செய்வார் என்று எதிர்பார்த்து, என் ஃபோனை அல்லது கம்ப்யூட்டரை ஆன் செய்தே வைத்திருக்க நினைக்கிறேனா? இதைப் பற்றி என் துணை என்ன சொல்கிறார்?’
நியாயமாக நடந்துகொள்ளுங்கள். “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 4:5) சிலசமயத்தில், கல்யாண வாழ்க்கைக்குள் வேலை குறுக்கிட வாய்ப்பிருக்கிறது. அதுதான் யதார்த்தம்! உதாரணத்துக்கு, உங்களுடைய துணை வேலை முடித்து வீட்டிற்கு வந்த பிறகும், வேலை சம்பந்தப்பட்ட ஃபோன் கால்களை எப்போது வேண்டுமானாலும் எடுக்க வேண்டிய நிலைமையில் இருக்கலாம். அவருடைய வேலையே அந்த மாதிரி இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் நீங்கள் நியாயமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் துணையிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்.
”என் கணவர் சொந்தமாக ஒரு தொழில் செய்துகொண்டிருக்கிறார். வேலை முடித்த பிறகும் அவர் அடிக்கடி எங்கேயாவது போக வேண்டிய அவசியம் இருக்கும். சிலசமயம், அது எனக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். இருந்தாலும், நாங்கள் இரண்டு பேரும் பொதுவாக நிறைய நேரம் செலவிடுவதால் அது ஒரு பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை.”—பிவர்லி
உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: “என்னுடைய துணைக்கு எவ்வளவு வேலை இருக்கிறது என்று நான் புரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்காமல் இருக்கிறேனா? இதைப் பற்றி என் துணை என்ன சொல்வார்?“
யோசித்துப்பார்க்க சில கேள்விகள்
முதலில், இதில் இருக்கும் ஒவ்வொரு கேள்வியையும் நீங்கள் தனியாக யோசித்துப்பாருங்கள். பிறகு, கணவன் மனைவியாக சேர்ந்து கலந்துபேசுங்கள்.
”வேலையை, வேலை செய்கிற இடத்திலே விட்டுட்டு வராமல் வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறீர்கள்“ என்று எப்போதாவது உங்கள் துணை சொல்லியிருக்கிறாரா? ”ஆமாம்!“ என்றால் நீங்கள் அதை ஒத்துக்கொள்கிறீர்களா?
வேலையையும், கல்யாணம் வாழ்க்கையையும் சமநிலையாக வைத்துக்கொள்ளும் விஷயத்தில் இன்னும் எப்படியெல்லாம் முன்னேறலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
உங்களுடைய துணை, வேலையை வீட்டுக்கு கொண்டுவந்துவிடுகிறார் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், எப்போதெல்லாம் அப்படிச் செய்கிறார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?
உங்கள் துணை என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?