இனக் கலப்புத் திருமணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
எல்லா இனத்தினரும் கடவுளுடைய கண்களில் சமமானவர்கள் என்பதால், ஒரு ஆணும் பெண்ணும் இனக் கலப்புத் திருமணம் செய்துகொள்வது கடவுளுக்குப் பிரியமானதே. “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . , சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 10:34, 35.
இன சமத்துவம், திருமணம் ஆகியவை சம்பந்தமான வேறுசில பைபிள் நியமங்களைக் கவனியுங்கள்.
எல்லா இனத்தாரும் ஒரே ஜோடியிலிருந்து வந்தவர்களே
முதல் மனிதன் ஆதாமிடமிருந்தும், “உயிருள்ள எல்லாருக்கும் தாய்” என்று பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள அவனுடைய மனைவி ஏவாளிடமிருந்தும்தான் எல்லா மனிதர்களுமே வந்திருக்கிறார்கள். (ஆதியாகமம் 3:20) அதனால்தான், கடவுள் ‘ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணியிருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:26) எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லா மனிதர்களுமே ஒரே குடும்பத்தின் பாகமானவர்கள்தான். ஆனால், நீங்கள் வசிக்கும் பகுதியில் இன வெறுப்புணர்ச்சி அல்லது இன வேற்றுமை ஒருவேளை அதிகளவு இருந்தால் என்ன செய்வது?
ஞானமுள்ளவர்கள் ‘ஒன்றுகூடி ஆலோசனை செய்வார்கள்’
இனக் கலப்புத் திருமணத்தைக் கடவுள் முழுமையாக ஏற்றுக்கொண்டாலும், எல்லா ஜனங்களுமே அதை ஏற்றுக்கொள்வதில்லை. (ஏசாயா 55:8, 9) வேறொரு இனத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய நீங்கள் யோசித்திருந்தால், நீங்களும் உங்கள் வருங்காலத் துணையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களைக் கலந்துபேச வேண்டும்:
ஒருவேளை உங்கள் சமுதாயத்திலிருந்து அல்லது குடும்பத்திலிருந்து பிரச்சினைகள் வந்தால், அவற்றை எப்படிச் சமாளிப்பீர்கள்?
இன வெறுப்புணர்ச்சியைச் சமாளிக்க உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவுவீர்கள்?
இப்படி, ‘ஒன்றுகூடி ஆலோசனை செய்வது’ உங்கள் மணவாழ்க்கையை மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கையாக ஆக்கும்.—நீதிமொழிகள் 13:10, அடிக்குறிப்பு; 21:5.