இயற்கைப் பேரழிவுகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
இன்று நடக்கும் இயற்கைப் பேரழிவுகளுக்குக் கடவுள் காரணம் கிடையாது. ஆனால், இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்மேல் அவர் அக்கறை காட்டுகிறார். நம் வேதனைகளுக்குக் காரணமான எல்லாவற்றையுமே அவருடைய அரசாங்கம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரும். அப்படியென்றால், இயற்கைப் பேரழிவுகள்கூட சீக்கிரத்தில் இல்லாமல் போய்விடும். அதுவரை, அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடவுள் ஆறுதல் தருகிறார்.—2 கொரிந்தியர் 1:3.
இயற்கைப் பேரழிவுகள் கடவுள் தரும் தண்டனை கிடையாது என்று நாம் ஏன் உறுதியாகச் சொல்லலாம்?
இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடவுள் எப்படி உதவுகிறார்?
இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதற்கு பைபிள் நமக்கு உதவுமா?
இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் வசனங்கள்
இயற்கைப் பேரழிவுகள் கடவுள் தரும் தண்டனை கிடையாது என்று நாம் ஏன் உறுதியாகச் சொல்லலாம்?
மனிதர்களைத் தண்டிக்க கடவுள் சிலசமயம் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தியிருப்பதாக பைபிள் சொல்கிறது. ஆனால், இயற்கை சக்திகளை அவர் பயன்படுத்திய விதத்துக்கும், பொதுவாக இயற்கைப் பேரழிவுகள் நடக்கும் விதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.
இயற்கைப் பேரழிவுகள் அப்பாவிகளைக்கூடக் கண்மூடித்தனமாகத் தாக்குகின்றன. ஆனால், கடவுள் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி கெட்டவர்களை மட்டும்தான் அழித்தார். உதாரணத்துக்கு, சோதோம் கொமோரா நகரங்களை அவர் அழித்தபோது, நல்லவராக இருந்த லோத்துவையும் அவருடைய இரண்டு மகள்களையும் அவர் காப்பாற்றினார். (ஆதியாகமம் 19:29, 30) அந்தச் சமயத்தில் இருந்த ஒவ்வொருவருடைய இதயத்தையும் கடவுள் பார்த்தார். உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தவர்களை மட்டும்தான் அழித்தார்.—ஆதியாகமம் 18:23-32; 1 சாமுவேல் 16:7.
இயற்கைப் பேரழிவுகள் பொதுவாக எந்த எச்சரிப்பும் இல்லாமல் திடீரென்று தாக்குகின்றன. ஆனால், இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி கெட்டவர்களை அழிப்பதற்கு முன்பு கடவுள் அவர்களுக்கு எச்சரிப்புகளைக் கொடுத்தார். அந்த எச்சரிப்புகளைக் கேட்டு நடந்தவர்கள் அழிவிலிருந்து தப்பித்தார்கள்.—ஆதியாகமம் 7:1-5; மத்தேயு 24:38, 39.
சிலசமயம் இயற்கைப் பேரழிவுகளுக்கு மனிதர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள். எப்படிச் சொல்லலாம்? மனிதர்கள் சுற்றுச்சூழலைக் கெடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பூகம்பம், வெள்ளம் போன்ற பேரழிவுகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிற இடங்களில் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 11:18) அவர்கள் எடுக்கும் இப்படிப்பட்ட தவறான முடிவுகளுக்குக் கடவுளை நாம் குற்றம்சொல்ல முடியாது.—நீதிமொழிகள் 19:3.
இயற்கைப் பேரழிவுகள் கடைசி காலத்துக்கு ஒரு அடையாளமா?
ஆம், இந்த உலகத்தின் ‘கடைசிக் கட்டத்தில்’ அல்லது “கடைசி நாட்களில்” பேரழிவுகள் நடக்கும் என்று பைபிள் அன்றே சொல்லிவிட்டது. (மத்தேயு 24:3; 2 தீமோத்தேயு 3:1) நம்முடைய காலத்தில் “அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் ஏற்படும்” என்று இயேசுவும் சொன்னார். (மத்தேயு 24:7) சீக்கிரத்தில், இயற்கைப் பேரழிவுகளுக்கும் சரி, நம் வேதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் காரணமான மற்ற எல்லாவற்றுக்கும் சரி, கடவுள் ஒரு முடிவுகட்டுவார்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடவுள் எப்படி உதவுகிறார்?
தன் வார்த்தையாகிய பைபிள் மூலம் கடவுள் ஆறுதல் தருகிறார். கடவுள் நம்மேல் அக்கறையாக இருக்கிறார் என்றும், நாம் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது அவர் வேதனைப்படுகிறார் என்றும் பைபிள் சொல்கிறது. (ஏசாயா 63:9; 1 பேதுரு 5:6, 7) அதுமட்டுமல்ல, இயற்கைப் பேரழிவுகளே இல்லாத ஒரு காலம் வரப்போவதாகவும் அது சொல்கிறது.—“ இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் வசனங்கள்” என்ற பகுதியைப் பாருங்கள்.
தன்னை வணங்குபவர்கள் மூலம் கடவுள் உதவி செய்கிறார். ‘உள்ளம் உடைந்தவர்களுக்கும்’ “துக்கப்படுகிற எல்லாருக்கும்” இயேசு ஆறுதல் தருவார் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது. (ஏசாயா 61:1, 2) கடவுளை வணங்குபவர்கள் இயேசுவைப் போலவே மற்றவர்களுக்கு ஆறுதல் தர முயற்சி செய்கிறார்கள். (யோவான் 13:15) இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல்படுத்த அவர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார்.
இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்யவும் தன்னை வணங்குபவர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார்.—அப்போஸ்தலர் 11:28-30; கலாத்தியர் 6:10.
இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதற்கு பைபிள் நமக்கு உதவுமா?
கண்டிப்பாக உதவும். பைபிள், இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்க நம்மைத் தயார்படுத்துவதற்காகவே எழுதப்பட்ட ஒரு புத்தகம் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், அதில் இருக்கும் ஆலோசனைகள் பேரழிவுகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதற்கு உதவி செய்யும். அதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்:
முன்கூட்டியே திட்டம் போடுங்கள். “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3) அப்படியென்றால், ஏதாவது அவசரமோ ஆபத்தோ வருவதற்கு முன்பே அதற்காகத் தயாராவதுதான் புத்திசாலித்தனம். உதாரணமாக, அவசரத்துக்குத் தேவையான பொருள்களையெல்லாம் முன்கூட்டியே ஒரு பையில் நாம் எடுத்து வைக்கலாம். ஏதாவது பேரழிவு வந்தால் நம் குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் எங்கே ஒன்றுகூடி வர வேண்டுமென்று பேசி வைத்துக்கொள்ளலாம், அதை ஒத்திகையும் பார்க்கலாம்.
பணம் பொருளைவிட உயிருக்கு மதிப்புக் கொடுங்கள். “இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டுபோகவும் முடியாது” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:7, 8) அதனால், பேரழிவிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் நம்முடைய வீடுவாசல், சொத்துப்பத்துகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகத் தயாராக இருக்க வேண்டும். பணம் பொருளைவிட நம் உயிர்தான் ரொம்ப முக்கியம் என்பதை நாம் ஞாபகம் வைப்பது நல்லது.—மத்தேயு 6:25.