இயேசு பூமியில் வாழ்ந்தார் என அறிஞர்கள் நம்புகிறார்களா?
இயேசு பூமியில் வாழ்ந்தார் என்பதற்கு அறிஞர்களிடம் பலமான ஆதாரம் இருக்கிறது. இயேசுவையும் ஆரம்பகால கிறிஸ்தவர்களையும் குறித்து முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சரித்திராசிரியர்கள் சொன்ன குறிப்புகளைப் பற்றி என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா, 2002 பதிப்பு இப்படிச் சொல்கிறது: “பூர்வகாலங்களில் கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களும்கூட இயேசு பூமியில் வாழ்ந்ததை சந்தேகிக்கவில்லை என்பதையே இந்தத் தனித்தனி விவரப்பதிவுகள் நிரூபிக்கின்றன; முதன்முறையாக, அதுவும் போதுமான ஆதாரமில்லாமல், 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்தான் அதைப் பற்றிய சர்ச்சை கிளம்பியது.”
2006-ல், இயேசுவும் புதைபொருள் ஆராய்ச்சியும் என்ற புத்தகம் இப்படிச் சொன்னது: “யோசேப்பின் மகனான இயேசு என்ற யூதர் உயிர் வாழ்ந்ததைப் பற்றி இன்று எந்தவொரு பிரபல அறிஞரும் கேள்வி எழுப்புவதில்லை; இயேசு செய்த காரியங்களைப் பற்றியும், அவருடைய முக்கிய போதனைகளைப் பற்றியும் இப்போது நிறையவே தெரிந்திருக்கிறோம் என்பதை அவர்களில் பெரும்பாலோர் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒத்துக்கொள்கிறார்கள்.”
இயேசுவை ஒரு நிஜ நபராக பைபிள் சித்தரிக்கிறது. அவருடைய முன்னோர்களுடைய பெயர்களையும், அவருடைய சொந்தக் குடும்பத்தாரின் பெயர்களையும் அது குறிப்பிடுகிறது. (மத்தேயு 1:1; 13:55) இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பிரபல ஆட்சியாளர்களின் பெயர்களையும் அது குறிப்பிடுகிறது. (லூக்கா 3:1, 2) பைபிள் பதிவுகள் எந்தளவு துல்லியமானவை என்று உறுதிப்படுத்த அந்த விவரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றன.