ஈஸ்டர் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
ஈஸ்டர் பண்டிகை என்பது பைபிள் அடிப்படையிலான பண்டிகை அல்ல. ஈஸ்டரின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வீர்கள்—பூர்வகால கருவள சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரம்பரியப் பழக்கமே அது. கீழே உள்ள குறிப்புகளைக் கவனியுங்கள்:
பெயர்: “ஈஸ்டர் என்ற ஆங்கிலப் பெயரின் ஆரம்பம் சரியாகத் தெரியவில்லை; 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலோ-ஸாக்ஸன் குருவான வெனரபிள் பெடெ என்பவர், ஈஸ்ட்ரா என்ற ஆங்லோ-ஸாக்ஸன்களின் வசந்தகால பெண் தெய்வத்தின் பெயரிலிருந்து இந்தப் பெயரை எடுத்தார்” என தி என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது. வேறுசில ஆராய்ச்சிப் புத்தகங்கள், இந்தப் பெண் தெய்வத்தின் பெயரை அஸ்டார்டே என்ற பெனிக்கேயர்களின் கருவள பெண் தெய்வத்தின் பெயருடன் சம்பந்தப்படுத்திப் பேசுகின்றன; இந்தப் பெண் தெய்வம் பாபிலோனிய தெய்வமான இஷ்டாரின் மறுவடிவமாக இருந்தது.
முயல்கள்: இவை கருவளத்திற்கான அடையாளச் சின்னங்களாக இருக்கின்றன; “ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு தேசங்களில் வசந்தகாலத்தின்போது கொண்டாடப்பட்ட புறமத பண்டிகைகளின் பூர்வகால சடங்காச்சார, அடையாளப்பூர்வ சின்னங்களிலிருந்து இவை வந்திருக்கின்றன.”—என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா.
முட்டைகள்: ஈஸ்டர் முயல்களால் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிற ஈஸ்டர் முட்டைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிற வழக்கம், “வெறும் சின்னப் பிள்ளைகளுக்கான விளையாட்டு அல்ல, ஆனால் ஒரு கருவள சடங்கச்சாரத்தின் சுவடு அது” என்கிறது ஃபங்க் & வேக்நல்ஸ் ஸ்டான்டர்டு டிக்ஷனரி ஆஃப் ஃபோக்லோர், மித்தாலஜி அண்டு லெஜென்டு. அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் “அவற்றின் மாயசக்தியால் சந்தோஷத்தையும், செழிப்பையும், ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் கொண்டுவருவதாக” சில கலாச்சரங்களில் நம்பப்பட்டது.—ட்ரெடிஷனல் ஃபெஸ்டிவல்ஸ்.
புதிய ஈஸ்டர் உடை: “வசந்த காலத்திற்கான ஸ்கேண்டினேவிய பெண் தெய்வத்தை, அதாவது ஈஸ்ட்ராவை, புதிய உடையோடு வரவேற்காவிட்டால், அது அவமரியாதையாகக் கருதப்பட்டது, துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருகிற செயலாக எண்ணப்பட்டது.”—தி ஜயன்ட் புக் ஆஃப் சூப்பர்ஸ்டிஷன்ஸ்.
ஈஸ்டரின் ஆரம்பத்தைப் பற்றி தி அமெரிக்கன் புக் ஆஃப் டேஸ் என்ற புத்தகம் இப்படி விவரிக்கிறது: “ஆரம்ப நாட்களில், சர்ச் பழமையான புறமத பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்குக் கிறிஸ்தவ சாயத்தைப் பூசின என்பதில் சந்தேகமே இல்லை.”
கடவுளுக்குப் பிடிக்காத பாரம்பரியங்களையோ பழக்கவழக்கங்களையோ பின்பற்றக் கூடாதென்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (மாற்கு 7:6-8) “பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’; ‘அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்’ என்று யெகோவா சொல்கிறார்” என்கிறது 2 கொரிந்தியர் 6:17. அதனால், கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள் ஈஸ்டர் என்ற புறமத பண்டிகையைக் கொண்டாட மாட்டார்கள்.