Skip to content

ஒப்பந்தப் பெட்டி என்பது என்ன?

ஒப்பந்தப் பெட்டி என்பது என்ன?

பைபிள் தரும் பதில்

 பூர்வ இஸ்ரவேலர்கள் கடவுளுடைய கட்டளையின்படியும் அவர் கொடுத்த வடிவமைப்பின்படியும் செய்த புனிதமான ஒரு பெட்டிதான் ஒப்பந்தப் பெட்டி. அந்தப் பெட்டியில் “சாட்சிப் பலகைகள்,” அதாவது பத்துக் கட்டளைகள், எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன.—யாத்திராகமம் 25:8-10, 16; 31:18.

  •   வடிவமைப்பு. அந்த ஒப்பந்தப் பெட்டியின் நீளம் 2.5 முழம், அகலம் 1.5 முழம், உயரம் 1.5 முழம் (111 x 67 x 67 செ.மீ; 44 x 26 x 26 அங்.). அது வேல மரத்தினால் செய்யப்பட்டிருந்தது; அதன் உள்ளேயும் வெளியேயும் தங்கத்தால் தகடு அடிக்கப்பட்டிருந்தது; அதன் விளிம்பைச் சுற்றிலும் அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சுத்தமான தங்கத்தாலான அதன் மூடியின் இரண்டு முனைகளிலும் தங்கத்தாலான இரண்டு கேருபீன்கள் இருந்தன. எதிரெதிரே இருந்த அந்தக் கேருபீன்களின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருந்தன. அந்தக் கேருபீன்களின் இரண்டு சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருந்தன. தங்கத்தால் வார்க்கப்பட்ட நான்கு வளையங்கள், பெட்டியின் நான்கு கால்களுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்தன. வேல மரத்தில் செய்யப்பட்ட கம்புகள் தங்கத் தகடு அடிக்கப்பட்டு, பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அந்த வளையங்களில் செருகி வைக்கப்பட்டிருந்தன.—யாத்திராகமம் 25:10-21; 37:6-9.

  •   வைக்கப்பட்டிருந்த இடம். ஒப்பந்தப் பெட்டி செய்யப்பட்ட அதே சமயத்தில்தான் வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்பட்டது; தூக்கிக்கொண்டு போக முடிந்த அந்தக் கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில்தான் ஒப்பந்தப் பெட்டி ஆரம்பத்தில் வைக்கப்பட்டிருந்தது. குருமார்களும் மக்களும் மகா பரிசுத்த அறையைப் பார்க்காதபடி அது திரைச்சீலையால் மறைக்கப்பட்டிருந்தது. (யாத்திராகமம் 40:3, 21) அந்த அறைக்குள் போய் ஒப்பந்தப் பெட்டியைப் பார்க்க தலைமைக் குருவுக்கு மட்டும்தான் அனுமதி இருந்தது; அதுவும் வருஷத்திற்கு ஒரு முறை, பாவப் பரிகார நாளன்று மட்டுமே அவர் போக முடிந்தது. (லேவியராகமம் 16:2; எபிரெயர் 9:7) பிற்பாடு, அந்த ஒப்பந்தப் பெட்டி சாலொமோன் கட்டிய ஆலயத்திற்கு இடம் மாற்றப்பட்டது.—1 ராஜாக்கள் 6:14, 19.

  •   நோக்கம். இஸ்ரவேலர்களுடன் கடவுள் சீனாய் மலையருகே செய்த ஒப்பந்தத்தை நினைப்பூட்டுகிற பரிசுத்த பொருள்கள் பத்திரமாக வைக்கப்பட்ட பெட்டிதான் ஒப்பந்தப் பெட்டி. பாவப் பரிகார நாளன்று செய்யப்பட்ட சடங்கில், அது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.—லேவியராகமம் 16:3, 13-17.

  •   உள்ளே வைக்கப்பட்ட பொருள்கள். பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட இரண்டு கற்பலகைகள்தான் ஒப்பந்தப் பெட்டிக்குள் முதலாவதாக வைக்கப்பட்டன. (யாத்திராகமம் 40:20) ஒரு தங்க ஜாடி நிறைய மன்னாவும், “ஆரோனின் துளிர்விட்ட கோலும்” பிற்பாடு அதில் வைக்கப்பட்டன. (எபிரெயர் 9:4; யாத்திராகமம் 16:33, 34; எண்ணாகமம் 17:10) பின்பு ஏதோவொரு சமயத்தில், அந்த ஜாடியும் கோலும் அதிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன; ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், ஒப்பந்தப் பெட்டி ஆலயத்துக்குள் கொண்டுவந்து வைக்கப்பட்ட சமயத்தில் அவை இரண்டும் அந்தப் பெட்டிக்குள் இருக்கவில்லை.—1 ராஜாக்கள் 8:9.

  •   எடுத்துச் செல்லப்பட்ட விதம். லேவியர்கள் ஒப்பந்தப் பெட்டியில் வேல மரத்தாலான கம்புகளைச் செருகி அதைத் தங்களுடைய தோள்களில் வைத்துச் சுமந்து செல்ல வேண்டியிருந்தது. (எண்ணாகமம் 7:9; 1 நாளாகமம் 15:15) அந்தக் கம்புகள் ஒப்பந்தப் பெட்டியின் வளையங்களில் எப்போதுமே செருகி வைக்கப்பட்டிருந்தன; இதனால், லேவியர்கள் ஒப்பந்தப் பெட்டியைத் தொட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. (யாத்திராகமம் 25:12-16) ஒப்பந்தப் பெட்டி சுமந்துசெல்லப்பட்ட சமயங்களில், பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையே தொங்கவிடப்பட்ட “திரைச்சீலையை” அதன்மேல் மூடி எடுத்துச் சென்றார்கள்.—எண்ணாகமம் 4:5, 6. a

  •   அடையாள அர்த்தம். ஒப்பந்தப் பெட்டி கடவுளுடைய பிரசன்னத்தோடு சம்பந்தப்படுத்தப்பட்டது. உதாரணத்துக்கு, மகா பரிசுத்த அறையிலிருந்த ஒப்பந்தப் பெட்டிமீதும், இஸ்ரவேலர்களின் முகாம்கள்மீதும் தோன்றிய மேகம் யெகோவாவின் பிரசன்னத்துக்கும் ஆசீர்வாதத்துக்கும் அடையாளமாக இருந்தது. (லேவியராகமம் 16:2; எண்ணாகமம் 10:33-36) அதோடு, “கேருபீன்களுக்கு மேலாக சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்” யெகோவா என்று பைபிள் சொல்கிறபோது, ஒப்பந்தப் பெட்டியின் மூடிமேல் இருந்த இரண்டு கேருபீன்களையே அது குறிப்பிடுகிறது. (1 சாமுவேல் 4:4; சங்கீதம் 80:1) ஆகவே, அந்தக் கேருபீன்கள் யெகோவாவுடைய ‘ரதத்துக்கு அடையாளமாக இருந்தன.’ (1 நாளாகமம் 28:18) ஒப்பந்தப் பெட்டி எதற்கு அடையாளமாக இருந்தது என்பதைப் புரிந்துகொண்டதால்தான் தாவீது ராஜா, அது சீயோனுக்கு இடம் மாற்றப்பட்ட பிறகு, “சீயோனில் குடியிருக்கிற” யெகோவா என்று எழுதினார்.—சங்கீதம் 9:11.

  •   சிறப்புப் பெயர்கள். இந்தப் பரிசுத்த பெட்டிக்கு பைபிள் பலவிதமான பெயர்களைப் பயன்படுத்துகிறது; உதாரணத்துக்கு, “சாட்சிப் பெட்டி,” “ஒப்பந்தப் பெட்டி,” “யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி,” “[யெகோவாவின்] பலத்துக்கு அடையாளமாக இருக்கிற ஒப்பந்தப் பெட்டி” என்றெல்லாம் பயன்படுத்துகிறது.—எண்ணாகமம் 7:89; யோசுவா 3:6, 13; 2 நாளாகமம் 6:41.

     ஒப்பந்தப் பெட்டியின் மூடி “பிராயச்சித்த மூடி,” அல்லது ‘கிருபாசனம்’ என்று அழைக்கப்பட்டது. (1 நாளாகமம் 28:11; தமிழ் O.V.) பாவப் பரிகார நாளில், அந்த மூடிக்கு இருக்கிற விசேஷ பங்கை அந்தப் பெயர் குறிக்கிறது; அந்த நாளில்தான், இஸ்ரவேலின் தலைமைக் குரு பலிசெலுத்தப்பட்ட மிருகங்களின் இரத்தத்தை எடுத்து ஒப்பந்தப் பெட்டியின் மூடியை நோக்கித் தெளிப்பார். “தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் இஸ்ரவேல் சபையார் எல்லாருக்காகவும்” அவர் இப்படிச் செய்தது, அவர்களுடைய பாவங்களை மூடுவதற்கு, அதாவது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்வதற்கு, உதவியது.—லேவியராகமம் 16:14-17.

ஒப்பந்தப் பெட்டி இன்று இருக்கிறதா?

 அது இன்று இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அந்தப் பெட்டியோடு சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை இயேசுவுடைய உயிர்பலியின் அடிப்படையில் அமைந்துள்ள “புதிய ஒப்பந்தம்” மாற்றீடு செய்ததால், அந்தப் பெட்டி இனியும் தேவையில்லை என்பதை பைபிள் காட்டுகிறது. (எரேமியா 31:31-33; எபிரெயர் 8:13; 12:24) ஒப்பந்தப் பெட்டியே இனி இல்லாத ஒரு காலம் வரப்போகிறது என்றும், கடவுளுடைய மக்கள் அதை நினைத்து வருத்தப்பட மாட்டார்கள் என்றும் பைபிள் முன்னறிவித்தது.—எரேமியா 3:16.

 புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு யோவானுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தரிசனத்தில், ஒப்பந்தப் பெட்டி பரலோகத்தில் இருப்பதுபோல் காட்டப்பட்டது. (வெளிப்படுத்துதல் 11:15, 19) அடையாளப்பூர்வ அந்தப் பெட்டி கடவுளுடைய பிரசன்னத்தையும் புதிய ஒப்பந்தத்தின்மேல் இருந்த அவருடைய ஆசீர்வாதத்தையும் குறிக்கிறது.

ஒப்பந்தப் பெட்டிக்கு ஏதாவது மாயசக்தி இருந்ததா?

 இல்லை. ஒப்பந்தப் பெட்டிக்கு எந்த மாயசக்தியும் இல்லை, வெற்றி தேடித்தருகிற மந்திரசக்தியும் இல்லை. உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் ஆயி நகரத்தில் போர் செய்த சமயத்தில் அவர்களுடைய முகாமில் ஒப்பந்தப் பெட்டியை வைத்திருந்தார்கள், ஆனாலும் ஒரு இஸ்ரவேலனின் துரோகச் செயலின் காரணமாக அந்தப் போரில் அவர்கள் தோற்றுப்போனார்கள். (யோசுவா 7:1-6) மற்றொரு சமயத்தில், ஒப்பந்தப் பெட்டியைப் போர்க்களத்துக்கே எடுத்துச் சென்றிருந்தாலும், பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போனார்கள். அதற்குக் காரணம், இஸ்ரவேல் குருமார்களான ஓப்னியும் பினெகாசும் செய்த கெட்ட செயல்கள்தான். (1 சாமுவேல் 2:12; 4:1-11) அந்தப் போரில் பெலிஸ்தியர்கள் ஒப்பந்தப் பெட்டியைக் கைப்பற்றினார்கள், ஆனால் அதை இஸ்ரவேலர்களிடம் திருப்பி அனுப்பும்வரை அவர்களை அவர் கடுமையாகத் தண்டித்தார்.—1 சாமுவேல் 5:11–6:5.

ஒப்பந்தப் பெட்டியின் சரித்திரம்

வருஷம் (கி.மு.)

சம்பவம்

1513

பெசலெயேலும் அவருடைய உதவியாளர்களும் இஸ்ரவேலர்கள் கொடுத்த நன்கொடை பொருள்களை வைத்து அதைச் செய்தார்கள்.​—யாத்திராகமம் 25:​1, 2; 37:1.

1512

மோசே வழிபாட்டுக் கூடாரத்தைத் திறந்துவைத்து குருத்துவ ஏற்பாட்டைத் தொடங்கிய சமயத்தில் அதை அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார்.​—யாத்திராகமம் 40:​1-3, 9, 20, 21.

1512​—1070 வரை

வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது.​—யோசுவா 18:1; நியாயாதிபதிகள் 20:26, 27; 1 சாமுவேல் 1:​24; 3:3; 6:​11-​14; 7:​1, 2.

1070-க்குப் பின்பு

தாவீது ராஜா அதை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்.​—2 சாமுவேல் 6:​12.

1026

சாலொமோன் கட்டிய எருசலேம் ஆலயத்துக்குள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.​—1 சாமுவேல் 8:​1, 6.

642

யோசியா ராஜா அதைத் திரும்ப ஆலயத்துக்குள் கொண்டுவந்து வைத்தார்.​—2 நாளாகமம் 35:3. b

607-க்கு முன்பு

ஆலயத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்ட சமயத்தில் எடுத்துக்கொண்டுபோகப்பட்ட பொருள்களின் பட்டியலிலும் சரி, பிற்பாடு எருசலேமுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பொருள்களின் பட்டியலிலும் சரி, அது குறிப்பிடப்படவில்லை.​—2 ராஜாக்கள் 25:13-​17; எஸ்றா 1:​7-​11.

63

ரோமப் படை அதிகாரி எருசலேமைக் கைப்பற்றி, அங்கிருந்த ஆலயத்தின் மகா பரிசுத்த அறையில் சோதனை நடத்தியபோது, ஒப்பந்தப் பெட்டி அங்கு இல்லை என்று அறிவித்தார். c

a ஒப்பந்தப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்ட விதத்தையும், அதை மூட வேண்டிய விதத்தையும் பற்றி கடவுள் கொடுத்த கட்டளையை இஸ்ரவேலர்கள் மீறியபோதெல்லாம் விபரீத விளைவுகளைச் சந்தித்தார்கள்.—1 சாமுவேல் 6:19; 2 சாமுவேல் 6:2-7.

b அது ஆலயத்திலிருந்து எப்போது, ஏன், யாரால் நீக்கப்பட்டது என்பதை பைபிள் சொல்வதில்லை.

c டாசிட்டஸ் எழுதிய சரித்திரங்கள் என்ற புத்தகத்தின் பாகம் ஐந்திலுள்ள பாரா 9-ஐப் பாருங்கள்.