ஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
திருமணமான ஆணும் பெண்ணும் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வதைக் கடவுள் அனுமதிக்கிறார், அப்படித்தான் அவர்களைப் படைத்தும் இருக்கிறார். (ஆதியாகமம் 1:27, 28; லேவியராகமம் 18:22; நீதிமொழிகள் 5:18, 19) திருமணமாகாதவர்கள் செக்ஸ் விஷயங்களில் ஈடுபடுவதை பைபிள் தடை செய்கிறது, ஓரினச்சேர்க்கையும் இதில் உட்படுகிறது. (1 கொரிந்தியர் 6:18) உடலுறவுகொள்வது, கிளர்ச்சி அடைவதற்காக மற்றவருடைய பிறப்புறுப்பைச் சீண்டுவது, வாய்வழி அல்லது ஆசனவழி செக்ஸில் ஈடுபடுவது ஆகியவையும் இதில் உட்படுகிறது.
ஓரினச்சேர்க்கையை பைபிள் கண்டனம் செய்தாலும், அதில் ஈடுபடுகிற ஆட்களை அருவருக்கவோ வெறுக்கவோ சொல்வதில்லை. “எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்றுதான் கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது.—1 பேதுரு 2:17.
ஒருவர் பிறக்கும்போதே ஓரினச்சேர்க்கையாளராக இருக்க முடியுமா?
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கான ஆசை ஒருவருக்குள் எப்படி உருவாகிறது என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், கடவுள் கொடுத்திருக்கும் சட்டங்களுக்கு எதிராகச் செயல்படும் இயல்புடன்தான் நாம் எல்லாரும் பிறந்திருக்கிறோம் என்று அது சொல்கிறது. (ரோமர் 7:21-25) ஓரினச்சேர்க்கைக்கான ஆசை ஏன் வருகிறதென்று விளக்குவதற்குப் பதிலாக, ஓரினச்சேர்க்கை சம்பந்தமான எல்லா செயல்களையும் பைபிள் கண்டனம் செய்கிறது.
ஓரினச்சேர்க்கைக்கான தூண்டுதல் இருந்தாலும் கடவுளை எப்படிப் பிரியப்படுத்தலாம்?
“உங்களுடைய உடல், உங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்காதீர்கள். தவறான விதங்களில் உடலுறவுகொள்வதற்கான ஆசைகளையெல்லாம் கொன்றுபோடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:5, கன்ட்டம்பரரி இங்கிலிஷ் வெர்ஷன்) கெட்ட செயல்களைச் செய்யத் தூண்டும் ஆசைகளை ‘கொன்றுபோட’ வேண்டுமானால், நீங்கள் உங்களுடைய யோசனைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் மனதை நல்ல நல்ல விஷயங்களால் தவறாமல் நிரப்பினீர்கள் என்றால், மனதிற்குள் முளைக்கிற கெட்ட ஆசைகளைக் கிள்ளி எறிந்துவிடலாம். (பிலிப்பியர் 4:8; யாக்கோபு 1:14, 15) அப்படிச் செய்வது ஆரம்பத்தில் உங்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கலாம், ஆனால் போகப்போக சுலபமாகிவிடும். “உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே” இருக்க உங்களுக்கு உதவி செய்வதாகக் கடவுளே வாக்குக் கொடுத்திருக்கிறார்.—எபேசியர் 4:22-24.
பைபிளின் நெறிமுறைப்படி வாழ விரும்புகிற லட்சக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும்கூட, தங்களுடைய இயல்பான செக்ஸ் ஆசைகளைக் கட்டுப்படுத்துவது போராட்டமாக இருக்கிறது. உதாரணமாக, திருமணம் ஆகாமலேயே இருப்பவர்களும், தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத மணத்துணையோடு வாழ்பவர்களும் எந்தச் சபலத்திற்கும் இடம் கொடுக்காமல் தங்கள் செக்ஸ் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திவருகிறார்கள், சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள். அதனால், ஓரினச்சேர்க்கைக்கான தூண்டுதல் இருப்பவர்கள் உண்மையிலேயே கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினால், தங்களுடைய ஆசைகளை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.—உபாகமம் 30:19, 20.