Skip to content

குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியே வர பைபிள் உதவி செய்யுமா?

குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியே வர பைபிள் உதவி செய்யுமா?

பைபிள் தரும் பதில்

 ஆமாம் கண்டிப்பாக! குற்ற உணர்ச்சியை சமாளித்து அதிலிருந்து வெளியில் வருவதற்குப் பைபிளால் நமக்கு உதவ முடியும். (சங்கீதம் 32:1-5) நாம் ஏதாவது தப்பு செய்திருந்தால், அதை நினைத்து உண்மையிலேயே வருத்தப்படும்போது கடவுள் கண்டிப்பாக நம்மை மன்னிப்பார். அதிலிருந்து வெளியே வர உதவுவார். (சங்கீதம் 86:5) செய்த தப்பை நினைத்து வருத்தப்படுவது சில நேரத்தில் நல்லதுதான் என்று பைபிள் சொல்கிறது. அப்போதுதான் தப்பான வழியைவிட்டு நாம் வெளியே வருவோம். மறுபடியும் அந்தத் தப்பில் மாட்டிக்கொள்ளாமல் இருப்போம். (சங்கீதம் 51:17; நீதிமொழிகள் 14:9) அதேசமயத்தில் செய்த தப்பை நினைத்து நாம் அளவுக்கு அதிகமாகக் குற்ற உணர்ச்சியில் இருக்கக் கூடாது. ‘கடவுளுக்கு முன்னாடி நான் எல்லாம் ஒன்றுமே இல்லை, நான் எல்லாம் எதற்குமே லாயக்கில்லை’ என்று யோசிக்கக் கூடாது. அப்படி நினைத்தோம் என்றால் நாம் ‘ஒரேயடியாகச் சோகத்தில் மூழ்கிவிடுவதற்கு’ வாய்ப்பு இருக்கிறது.—2 கொரிந்தியர் 2:7.

 நாம் எதனால் குற்ற உணர்ச்சியில் தவிக்கலாம்?

 நாம் குற்ற உணர்ச்சியில் தவிப்பதற்கு நிறையக் காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை நமக்குப் பிடித்த யாரோ ஒருவரை நாம் காயப்படுத்தியதை நினைத்து குற்ற உணர்ச்சியில் தவிக்கலாம். அல்லது, இப்படித்தான் வாழ வேண்டும் என்று நாம் ஒரு நெறிமுறை வைத்திருக்கலாம். அப்படி செய்ய முடியாமல் போகும்போது நமக்கு குற்ற உணர்ச்சி வரலாம். சிலசமயங்களில் குற்ற உணர்ச்சியில் தவிக்கிற அளவுக்கு நாம் ஒன்றுமே செய்திருக்க மாட்டோம். இருந்தாலும் அப்படி உணரலாம். உதாரணத்துக்கு, நம்மிடமே நாம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம் என்றால் அப்படிச் செய்ய முடியாமல் போகும்போது நமக்குத் தேவையில்லாமல் குற்ற உணர்ச்சி வரலாம். அதனால்தான், நம்மால் என்ன செய்ய முடியுமோ அதற்கு ஏற்ற மாதிரி நியாயமான எதிர்பார்ப்புகளை வைக்க சொல்லி பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 7:16.

 குற்ற உணர்ச்சியிலிருந்து எப்படி வெளியே வரலாம்?

 குற்ற உணர்ச்சியில் அப்படியே முடங்கிப் போய்விடாமல் அதைச் சரி பண்ணுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். எப்படி அதைச் செய்யலாம்?

  •   உங்களுடைய தவறை ஒத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்த பாவத்துக்காக யெகோவாவிடம் a ஜெபத்தில் மன்னிப்பு கேளுங்கள். (சங்கீதம் 38:18; லூக்கா 11:4) செய்த தப்பை நினைத்து நீங்கள் உண்மையிலேயே வருத்தப்பட்டால்... அதை செய்யாமல் இருப்பதற்கு கடினமாக முயற்சி செய்தால்... யெகோவா கண்டிப்பாக உங்களுடைய ஜெபத்தைக் கேட்பார். (2 நாளாகமம் 33:13; சங்கீதம் 34:18) நாம் உள்ளுக்குள்ளே எப்படி இருக்கிறோம் என்பதைத்தான் யெகோவா பார்க்கிறார். அதை வேறு யாராலும் பார்க்க முடியாது. தப்பான ஒரு வழியை விட்டு வெளியே வருவதற்கு நாம் முயற்சி எடுப்பதைப் பார்க்கும்போது, ‘கடவுள் அந்தப் பாவங்களை மன்னிப்பார்.’ “ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.”—1 யோவான் 1:9; நீதிமொழிகள் 28:13.

     ஒருவேளை நீங்கள் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அவரிடம் போய் உங்களுடைய தப்பை ஒத்துக்கொண்டு மனசார மன்னிப்பு கேளுங்கள். அப்படி செய்வது சுலபம் இல்லைதான்! அதற்கு நிறைய தைரியமும் மனத்தாழ்மையும் தேவை. ஆனால் நாம் அப்படி மனசார மன்னிப்பு கேட்டால் இரண்டு முக்கியமான நன்மைகள் கிடைக்கும். ஒன்று, உங்களுடைய மனதில் இருக்கிற ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்த மாதிரி இருக்கும். பிறகு, மறுபடியும் அவரோடு ஒரு நல்ல நண்பராக, சமாதானமாக இருக்க முடியும்.—மத்தேயு 3:8; 5:23, 24.

  •   கடவுளுடைய இரக்கத்தைப் பற்றிச் சொல்கிற பைபிள் வசனங்களை யோசித்துப் பாருங்கள். 1 யோவான் 3:19, 20-ஐ நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். அதில் ‘நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யலாம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ‘கடவுளுடைய அன்பைப் பெறுவதற்கு எனக்கெல்லாம் எந்தத் தகுதியும் இல்லை’ என்று ஒருவேளை நாம் நினைக்கலாம். ஆனால் அதே வசனம், ‘கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவர்’ என்று சொல்கிறது. அப்படியென்றால், கடவுள் ஒரு நபரை முழுமையாகப் பார்க்கிறார். நம்முடைய உணர்ச்சிகளையும் பலவீனங்களையும் அவர் நன்றாகப் புரிந்துகொள்கிறார். நாம் குறையுள்ளவர்கள்தான், நமக்குள் பாவம் செய்கிற இயல்பு இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். b (சங்கீதம் 51:5) அதனால், செய்த தவறை நினைத்து உண்மையிலேயே வருத்தப்படுகிறவர்களை அவர் கண்டிப்பாக ஒதுக்க மாட்டார்.—சங்கீதம் 32:5.

  •   செய்த தப்பைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்காதீர்கள். தப்பான வழியை விட்டு வெளியே வந்த நிறைய பேருடைய உதாரணம் பைபிளில் இருக்கிறது. அதில் ஒருத்தர்தான் தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல். இவர் பின்பு அப்போஸ்தலன் பவுல் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு பரிசேயராக இருந்தபோது இயேசுவின் சீஷர்களை ரொம்பக் கொடூரமாகத் துன்புறுத்தினார். (அப்போஸ்தலர் 8:3; 9:1, 2, 11) ஆனால் உண்மையில் கடவுளையும் மேசியாவையும் (அதாவது கிறிஸ்து) எதிர்க்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டபோது அவர் அதை நினைத்து வருத்தப்பட்டார், அவரையே மாற்றிக்கொண்டார். சொல்லப்போனால், கிறிஸ்தவர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாகவும் ஆனார். பவுல் செய்த தப்பை நினைத்து வருத்தப்பட்டார்தான். ஆனால் அந்தத் தப்பையே நினைத்துக்கொண்டு இல்லை. கடவுள் அவருக்குக் காட்டிய இரக்கத்தைப் பற்றி யோசித்துப் பார்த்ததால் சுறுசுறுப்பாக ஊழியம் செய்தார். அவருடைய எதிர்கால நம்பிக்கையை எப்போதும் கண்முன் வைத்திருந்தார்.—பிலிப்பியர் 3:13, 14.

 குற்ற உணர்ச்சியைப் பற்றியும் மன்னிப்பைப் பற்றியும் சொல்கிற பைபிள் வசனங்கள்

 சங்கீதம் 51:17: “கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும் நீங்கள் ஒதுக்கித்தள்ள மாட்டீர்கள்.”

 அர்த்தம்: நீங்கள் தப்பு செய்துவிட்டீர்கள் என்பதற்காக கடவுள் உங்களை ஒதுக்கித்தள்ள மாட்டார். செய்த தப்பை நினைத்து உண்மையிலேயே வருத்தப்படும்போது அவர் உங்களுக்கு இரக்கம் காட்டுவார்.

 நீதிமொழிகள் 28:13: “ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது. ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.”

 அர்த்தம்: நம்முடைய தப்பை கடவுளிடம் ஒத்துக்கொண்டு நம்மையே மாற்றிக்கொண்டால் அவர் கண்டிப்பாக நம்மை மன்னிப்பார்.

 எரேமியா 31:34 “நான் அவர்களுடைய குற்றத்தை மன்னிப்பேன். அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”

 அர்த்தம்: கடவுள் ஒரு தடவை நம்முடைய குற்றங்களை மன்னித்துவிட்டார் என்றால், அதற்குப் பிறகு அதை நினைத்துப் பார்க்க மாட்டார். அவர் நம்மை பெயருக்கென்று மன்னிப்பதில்லை, உண்மையிலேயே இரக்கம் காட்டுகிறார்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—யாத்திராகமம் 6:3.

b பாவம் செய்கிற இயல்போடுதான் நாம் எல்லோருமே பிறக்கிறோம். முதல் மனிதன் ஆதாமின் வம்சத்தில் வந்திருக்கிற எல்லாருமே அப்படித்தான் பிறக்கிறார்கள். அவனும் அவனுடைய மனைவி ஏவாளும் கடவுளுக்கு எதிராக பாவம் செய்தபோது, பரிபூரணமான வாழ்க்கையை இழந்துவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் வம்சத்தில் வந்த எல்லாருமே அந்த வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.—ஆதியாகமம் 3:17-19; ரோமர் 5:12.