‘ஜீவ புஸ்தகத்தில்’ யாருடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன?
பைபிள் தரும் பதில்
“வாழ்வின் சுருள்,” “நினைவுப் புத்தகம்” என்றெல்லாம் அழைக்கப்படுகிற ‘ஜீவ புஸ்தகத்தில்,’ அதாவது ‘வாழ்வின் புத்தகத்தில்,’ முடிவில்லாத வாழ்வைப் பரிசாகப் பெறப்போகிறவர்களின் பெயர்கள் இருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 3:5; 20:12; மல்கியா 3:16) ஒரு நபர் தனக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிகிறாரா இல்லையா என்பதை வைத்து கடவுள் அந்தப் பெயர்களைத் தீர்மானிக்கிறார்.—யோவான் 3:16; 1 யோவான் 5:3.
“உலகம் உண்டானதுமுதல்,” அதாவது மனிதகுலம் தோன்றிய சமயத்திலிருந்தே, கடவுள் தனக்கு உண்மையாகச் சேவை செய்கிற ஒவ்வொருவரையும் தன்னுடைய நினைவில் வைத்திருக்கிறார்; ஆம், ஒரு புத்தகத்தில் பெயர்களை எழுதி வைப்பதுபோல வைத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 17:8) விசுவாசமிக்க மனிதரான ஆபேலின் பெயர்தான் முதன்முதலாக வாழ்வின் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டது. (எபிரெயர் 11:4) அந்தப் புத்தகம் வெறுமனே பெயர்ப் பட்டியல் அடங்கிய புத்தகம் கிடையாது; யெகோவா ‘தனக்குச் சொந்தமானவர்களை அறிந்திருக்கிற’ அன்பான கடவுள் என்பதைக் காட்டுகிற புத்தகமாகவும் அது இருக்கிறது.—2 தீமோத்தேயு 2:19; 1 யோவான் 4:8.
“வாழ்வின் புத்தகத்திலிருந்து” பெயர்களை அழித்துப்போட முடியுமா?
முடியும். பூர்வ இஸ்ரவேலில் இருந்த கீழ்ப்படியாத ஜனங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது கடவுள் இப்படிச் சொன்னார்: “யாரெல்லாம் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்களோ, அவர்களுடைய பெயரைத்தான் என் புத்தகத்திலிருந்து துடைத்தழிப்பேன்.” (யாத்திராகமம் 32:33) ஆனால், நாம் விசுவாசமாக இருந்தால், நம்முடைய பெயர் ‘வாழ்வின் சுருளில்’ எப்போதுமே இருக்கும்.—வெளிப்படுத்துதல் 20:12.