ஜெபம் செய்தால் கடவுள் எனக்கு உதவி செய்வாரா?
பைபிள் தரும் பதில்
ஆம், தன்னுடைய விருப்பத்திற்கு இசைவாக, உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்கிறவர்களுக்குக் கடவுள் உதவி செய்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் ஜெபம் செய்திருக்காவிட்டால்கூட, பைபிளில் உள்ள சிலருடைய முன்மாதிரி உங்களுக்கு ஊக்கமளிக்கலாம்; “கடவுளே, எனக்கு உதவி செய்யுங்கள்” என்று அவர்கள் ஜெபம் செய்தார்கள். உதாரணத்திற்கு:
“என் கடவுளாகிய யெகோவாவே, எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள்.”—சங்கீதம் 109:26.
“யெகோவாவே, நீங்கள்தான் என் மீட்பர். சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்யுங்கள்.”—சங்கீதம் 38:22.
உண்மைதான், இந்த வார்த்தைகளை எழுதியவருக்கு கடவுள்மேல் பலமான விசுவாசம் இருந்தது. ஆனாலும், சரியான மனப்பான்மையுள்ள எல்லாருடைய ஜெபங்களையும் கடவுள் கேட்கிறார்; உதாரணத்திற்கு, “உள்ளம் உடைந்துபோன,” “மனம் நொந்துபோன” ஆட்களுடைய ஜெபங்களையும் அவர் கேட்கிறார்.—சங்கீதம் 34:18.
“எங்கேயோ ரொம்பத் தூரத்தில் இருக்கிற கடவுள் என்னுடைய பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பாரா?” என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். “யெகோவா மிகவும் உயர்ந்தவராக இருந்தாலும், தாழ்மையானவர்களைக் கண்ணோக்கிப் பார்க்கிறார். ஆனால், தலைக்கனம் உள்ளவர்களைவிட்டுத் தூரமாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 138:6) சொல்லப்போனால், ஒருமுறை இயேசு தன் சீஷர்களிடம், “உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார். (மத்தேயு 10:30) ஆம், உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்களைக்கூட கடவுள் உன்னிப்பாகக் கவனிக்கிறார். அப்படியானால், உங்கள் கவலைகளைத் தீர்க்கும்படி அவரிடம் உதவி கேட்டு நீங்கள் செய்கிற ஜெபத்தை இன்னும் எந்தளவு உன்னிப்பாகக் கவனிப்பார்!—1 பேதுரு 5:7.