டைனோசர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
டைனோசர்களைப் பற்றி பைபிள் நேரடியாக எதையும் சொல்வதில்லை. ஆனால், ‘கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார்’ என்று அது சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) அப்படியென்றால், கடவுள் படைத்தவற்றில் டைனோசர்களும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. a பைபிளில் சொல்லப்பட்டுள்ள இதுபோன்ற உயிரின வகைகளில் டைனோசர்களும் இருந்திருக்கலாம்:
‘கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினங்கள்.’—ஆதியாகமம் 1:21.
‘ஊரும் பிராணிகள்.’—ஆதியாகமம் 1:25.
‘காட்டு மிருகங்கள்.’—ஆதியாகமம் 1:25.
டைனோசர்கள் மற்ற மிருகங்களிலிருந்து உருவானவையா?
புதைபடிவ ஆய்வுகளின்படி, டைனோசர்கள் மற்ற மிருகங்களிலிருந்து படிப்படியாகப் பரிணமிக்கவில்லை, அவை திடீரென்று தோன்றின. கடவுள்தான் எல்லா மிருகங்களையும் படைத்தார் என்று பைபிள் சொல்கிற உண்மையோடு இது ஒத்துப்போகிறது. உதாரணத்துக்கு, சங்கீதம் 146:6-ல், கடவுள்தான் “வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார்” என்று பைபிள் சொல்கிறது.
டைனோசர்கள் எப்போது வாழ்ந்தன?
கடலிலும் நிலத்திலும் வாழும் மிருகங்கள், படைப்பின் ஐந்தாம் நாளிலும் ஆறாம் நாளிலும் உண்டாக்கப்பட்டன என்று பைபிள் சொல்கிறது. b (ஆதியாகமம் 1:20-25, 31) அப்படியென்றால், டைனோசர்கள் ரொம்ப காலத்துக்கு முன்பே உருவாக்கப்பட்டிருக்கின்றன, நீண்ட காலம் வாழ்ந்திருக்கின்றன என்று தெரிகிறது.
பிகெமோத் மற்றும் லிவியாதான்—டைனோசர்களா?
இல்லை. யோபு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிகெமோத்தும் லிவியாதானும் உண்மையில் எந்த மிருகங்கள் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. இருந்தாலும், பிகெமோத் என்பது நீர்யானை என்றும், லிவியாதான் என்பது முதலை என்றும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்த விளக்கம், அவற்றைப் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வர்ணனையோடு ஒத்துப்போகிறது. (யோபு 40:15-23; 41:1, 14-17, 31) எப்படியிருந்தாலும் சரி, “பிகெமோத்” மற்றும் “லிவியாதான்” நிச்சயம் டைனோசர்களைக் குறிக்காது. ஏனென்றால், இந்த மிருகங்களைக் கவனித்துப் பார்க்கும்படி கடவுள் யோபுவிடம் சொன்னபோது, டைனோசர்களுடைய இனம் அழிந்து ஏற்கெனவே ரொம்ப காலம் ஆகியிருந்தது.—யோபு 40:16; 41:8.
டைனோசர்களுக்கு என்ன ஆனது?
டைனோசர்களின் மறைவைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், எல்லாம் “[கடவுளுடைய] விருப்பத்தின்படியே” படைக்கப்பட்டன என்று சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) அப்படியென்றால், டைனோசர்களையும் கடவுள் ஒரு நோக்கத்தோடுதான் படைத்திருப்பார். அந்த நோக்கம் நிறைவேறியதும் டைனோசர்கள் அழிந்துபோவதற்கு அவர் அனுமதித்திருப்பார்.
a டைனோசர்கள் உண்மையிலேயே வாழ்ந்ததாகப் புதைபடிவ ஆய்வுகள் காட்டுகின்றன. சொல்லப்போனால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வித்தியாசமான உருவங்களிலும் அளவுகளிலும் ஏராளமான டைனோசர்கள் வாழ்ந்ததாக அவை காட்டுகின்றன.
b பைபிளில், “நாள்” என்ற வார்த்தை பல ஆயிர வருஷங்கள் அடங்கிய காலப்பகுதியைக் குறிக்கலாம்.—ஆதியாகமம் 1:31; 2:1-4; எபிரெயர் 4:4, 11.