தேவதூதர்கள் யார்?
பைபிள் தரும் பதில்
தேவதூதர்கள் மனிதர்களைவிட மகா பலசாலிகள், திறமைசாலிகள். (2 பேதுரு 2:11) அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்; பரலோகம் என்பது விண்வெளிக்கும் அப்பாற்பட்ட ஓர் இடம், ஆவி நபர்கள் வசிக்கிற மேலான இடம். (1 ராஜாக்கள் 8:27; யோவான் 6:38) ஆவி சிருஷ்டிகள் பல வசனங்களில் ‘தேவதூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.—1 ராஜாக்கள் 22:21; சங்கீதம் 18:10.
தேவதூதர்கள் எப்படி வந்தார்கள்?
“படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிற இயேசுவின் மூலமாகக் கடவுள் தேவதூதர்களைப் படைத்தார். படைப்பு வேலையில் கடவுள் எப்படி இயேசுவைப் பயன்படுத்தினார் என்பதை பைபிள் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.” (கொலோசெயர் 1:13-17) தேவதூதர்கள் திருமணம் செய்துகொள்வதோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோ இல்லை. (மாற்கு 12:25) ‘உண்மைக் கடவுளின் மகன்களாக’ இருக்கிற இந்தத் தேவதூதர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் தனித்தனியாகப் படைத்தார்.—யோபு 1:6, அடிக்குறிப்பு.
இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் “சந்தோஷ ஆரவாரம்” செய்தார்கள்.—யோபு 38:4-7.
எவ்வளவு தேவதூதர்கள் இருக்கிறார்கள்?
அவர்களுடைய எண்ணிக்கையை பைபிள் சொல்வதில்லை; ஆனால், மிக அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தேவதூதர்கள் இருக்கிற ஒரு காட்சியை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார்.—வெளிப்படுத்துதல் 5:11.
ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒரு பெயர் இருக்கிறதா? ஒவ்வொரு சுபாவம் இருக்கிறதா?
ஆம். இரண்டு தேவதூதர்களுடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன. ஒன்று மிகாவேல் மற்றொன்று காபிரியேல். (தானியேல் 12:1; லூக்கா 1:26) a வேறுசில தேவதூதர்கள் தங்களுக்குப் பெயர் இருப்பதாக ஒத்துக்கொண்டபோதிலும், அவற்றைத் தெரிவிக்கவில்லை.—ஆதியாகமம் 32:29; நியாயாதிபதிகள் 13:17, 18.
ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒவ்வொரு விதமான சுபாவம் இருக்கிறது. அவர்களால் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியும். (1 கொரிந்தியர் 13:1) அவர்களுக்குச் சிந்திக்கும் திறன் இருக்கிறது, அதனால் வார்த்தைகளைக் கோர்த்து அவர்களால் கடவுளுக்குப் புகழ்மாலை சூட்ட முடியும். (லூக்கா 2:13, 14) நல்லது கெட்டதைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது; அதனால்தான், தேவதூதர்களில் சிலர் பிசாசாகிய சாத்தானோடு சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்.—மத்தேயு 25:41; 2 பேதுரு 2:4.
தேவதூதர்கள் மத்தியில் வெவ்வேறு ஸ்தானங்கள் இருக்கின்றனவா?
ஆம், இருக்கின்றன. பலத்திலும் அதிகாரத்திலும் மிக உன்னதமான ஸ்தானத்தில் இருப்பவர் தலைமைத் தூதரான மிகாவேல். (யூதா 9; வெளிப்படுத்துதல் 12:7) சேராபீன்கள், உயர்ந்த ஸ்தானத்திலுள்ள தேவதூதர்கள்; இவர்கள் யெகோவாவின் சிம்மாசனத்துக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். (ஏசாயா 6:2, 6) கேருபீன்கள், உயர்ந்த ஸ்தானத்திலுள்ள மற்றொரு வகையான தேவதூதர்கள்; இவர்களுக்கு விசேஷ நியமிப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாம் ஏவாள் வெளியே துரத்தப்பட்ட பின்னர், அதன் நுழைவாசலை கேருபீன்கள் காவல்காத்தார்கள்.—ஆதியாகமம் 3:23, 24.
தேவதூதர்கள் மக்களுக்கு உதவுகிறார்களா?
ஆம். இன்று தன் மக்களுக்கு உதவி செய்வதற்காக, கடவுள் தன்னுடைய உண்மையுள்ள தூதர்களைப் பயன்படுத்துகிறார்.
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிற தன் ஊழியர்களை வழிநடத்த தேவதூதர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7) இதனால், அந்தச் செய்தியை அறிவிக்கிறவர்களும் சரி, கேட்கிறவர்களும் சரி, நன்மையடைகிறார்கள்.—அப்போஸ்தலர் 8:26, 27.
கிறிஸ்தவ சபை பொல்லாத ஆட்களால் கறைபட்டுவிடாதபடி தேவதூதர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.—மத்தேயு 13:49.
கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத் தேவதூதர்கள் வழிநடத்துகிறார்கள், பாதுகாக்கிறார்கள்.—சங்கீதம் 34:7; 91:10, 11; எபிரெயர் 1:7, 14.
தேவதூதர்கள் சீக்கிரத்தில் இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து போர் செய்து, இந்தப் பூமியிலிருந்து தீமையை ஒழித்துக்கட்டி, மனிதர்களுக்கு நிம்மதியைக் கொண்டுவரப்போகிறார்கள்.—2 தெசலோனிக்கேயர் 1:6-8.
நம் ஒவ்வொருவரோடுகூட ஒரு காவல் தூதர் இருக்கிறாரா?
கடவுளுடைய ஊழியர்கள் ஆன்மீக ரீதியில் பாதிக்கப்படாதபடி தேவதூதர்கள் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு காவல் தூதரை b நியமிக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. (மத்தேயு 18:10) தேவதூதர்கள் கடவுளுடைய ஊழியர்களை ஒவ்வொரு கஷ்டத்திலிருந்தும் சோதனையிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றுவதில்லை. மாறாக, சோதனையைச் சகித்துக்கொள்ள கடவுள் தன் ஊழியர்களுக்கு ஞானத்தைத் தந்து, பலத்தைக் கொடுத்து, ‘அதிலிருந்து விடுபடுவதற்கு வழிசெய்வார்’ என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 10:12, 13; யாக்கோபு 1:2-5.
தேவதூதர்களைப் பற்றிய தவறான கருத்துகள்
தவறான கருத்து: எல்லா தேவதூதர்களுமே நல்லவர்கள்.
உண்மை: ‘பொல்லாத தூதர் கூட்டம்’ என்றும், ‘பாவம் செய்த தேவதூதர்கள்’ என்றும் பைபிள் சில தேவதூதர்களைக் குறிப்பிடுகிறது. (எபேசியர் 6:12; 2 பேதுரு 2:4) இந்தப் பொல்லாத தேவதூதர்கள்தான் பேய்கள்; சாத்தானோடு சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள்.
தவறான கருத்து: தேவதூதர்கள் சாவாமை உள்ளவர்கள்.
உண்மை: பிசாசாகிய சாத்தான் உட்பட பொல்லாத தேவதூதர்கள் அனைவருமே அழிக்கப்படுவார்கள்.—யூதா 6.
தவறான கருத்து: மனிதர்கள் செத்த பிறகு தேவதூதர்களாக ஆகிவிடுகிறார்கள்.
உண்மை: தேவதூதர்கள் கடவுளுடைய பிரத்தியேகமான படைப்புகள், உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதர்கள் கிடையாது. (கொலோசெயர் 1:16) பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிற நபர்கள்தான் சாவாமை வரத்தைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். (1 கொரிந்தியர் 15:53, 54) அப்போது அவர்கள், தேவதூதர்களைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்கள்.—1 கொரிந்தியர் 6:3.
தவறான கருத்து: மனிதர்களுக்குச் சேவை செய்யத்தான் தேவதூதர்கள் இருக்கிறார்கள்.
உண்மை: தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள், நாம் சொல்கிறபடி அல்ல. (சங்கீதம் 103:20, 21) உதவிக்கு தேவதூதர்களை நேரடியாய் கூப்பிடப்போவதாக இயேசுவும்கூட சொல்லவில்லை, உதவி கேட்டு கடவுளிடம் வேண்டிக்கொள்ளப்போவதாகத்தான் சொன்னார்.—மத்தேயு 26:53.
தவறான கருத்து: உதவி கேட்டு தேவதூதர்களிடம் நாம் ஜெபம் செய்யலாம்.
உண்மை: ஜெபம் என்பது நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகம்; அந்த வணக்கம் யெகோவா தேவனுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (வெளிப்படுத்துதல் 19:10) இயேசு மூலமாகக் கடவுளிடம் மட்டுமே நாம் ஜெபம் செய்ய வேண்டும்.—யோவான் 14:6.
a சில மொழிபெயர்ப்புகள், ஏசாயா 14:12-ல் “லூஸிஃபர்” என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன; இந்தப் பெயர் பிசாசாகிய சாத்தானாக மாறிய ஒரு தேவதூதனுடைய பெயர் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், இதற்கான மூல எபிரெய வார்த்தை “நட்சத்திரமாக மினுமினுத்தவன்” என்ற அர்த்தத்தைத் தருகிறது. இந்த வார்த்தை சாத்தானை அல்ல, ஆனால் பாபிலோனின் ராஜ வம்சத்தைக் குறிக்கிறது என்பதை அந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது; அந்த ராஜ வம்சம் அகங்காரத்தோடு நடந்ததற்காகக் கடவுள் அதை அடிமட்டத்துக்குத் தள்ளி அவமானப்படுத்துவார் என்று காட்டுகிறது. (ஏசாயா 14:4, 13-20) “நட்சத்திரமாக மினுமினுத்தவன்” என்ற வார்த்தை, பாபிலோனின் ராஜ வம்சம் அழிக்கப்பட்ட பிறகு அதைக் கேலி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
b சிறையிலிருந்து பேதுரு அற்புதமாக விடுவிக்கப்பட்டதைப் பற்றிய பதிவு, அவருக்கென்று ஒரு காவல் தூதர் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறதென சிலர் சொல்கிறார்கள். (அப்போஸ்தலர் 12:6-16) ஆனால், சீஷர்கள் ‘[பேதுருவுடைய] தூதர்’ என்று குறிப்பிட்டபோது, பேதுருவுக்குப் பதிலாக பேதுருவின் பிரதிநிதியாக ஒரு தேவதூதர் வந்திருக்கிறாரென தவறாக நினைத்துக்கொண்டு அப்படிச் சொல்லியிருக்கலாம்.