Skip to content

மிகுந்த உபத்திரவம் என்றால் என்ன?

மிகுந்த உபத்திரவம் என்றால் என்ன?

பைபிள் தரும் பதில்

 மனிதகுலம் இதுவரைக்கும் சந்திக்காத படுமோசமான வேதனைகளை மிகுந்த உபத்திரவம் கொண்டுவரும். பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, மிகுந்த உபத்திரவம் ”கடைசி நாட்களில்“ அல்லது ‘முடிவு காலத்தில்’ நடக்கும். (2 தீமோத்தேயு 3:1; தானியேல் 12:4) அது “உபத்திரவ நாட்களாக இருக்கும். கடவுள் உலகத்தைப் படைத்ததுமுதல் அதுவரை அப்படிப்பட்ட உபத்திரவம் வந்திருக்காது, அதற்குப் பிறகும் வராது.”—மாற்கு 13:19; தானியேல் 12:1; மத்தேயு 24:21, 22.

மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கும் சம்பவங்கள்

  •   பொய் மதத்தின் அழிவு. கண்ணை மூடி திறப்பதற்குள், பொய் மதம் அழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 17:1, 5; 18:9, 10, 21) ஐநா சபையை ஆதரிக்கிற அரசாங்கங்கள்தான் இதை செய்யும். கடவுள் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அந்த எண்ணத்தை அவர்களுடைய மனதில் வைப்பார்.—வெளிப்படுத்துதல் 17:3, 15-18. a

  •   உண்மை வணக்கத்தின் மீது தாக்குதல். எசேக்கியேல் தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘மாகோகு தேசத்தின் கோகு’ என்பது தேசங்களின் கூட்டணி. அது உண்மை வணக்கத்தாரை துடைத்தழிக்க முயற்சி செய்யும். ஆனால், தன்னுடைய வணக்கத்தார் அழிக்கப்படாமல் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார்.—எசேக்கியேல் 38:1, 2, 9-12, 18-23.

  •   மக்கள் மீது வரும் நியாயத்தீர்ப்பு. இயேசு எல்லா மனிதர்களையும் நியாயந்தீர்ப்பார். “செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் ஒரு மேய்ப்பன் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர்களை அவர் பிரிப்பார்.” (மத்தேயு 25:31-33) இயேசுவுடைய சகோதரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவி செய்கிறோமா இல்லையா என்பதை வைத்துத்தான் இந்த நியாயத்தீர்ப்பு நடக்கும். பரலோகத்தில் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யப் போகிறவர்கள்தான் இயேசுவுடைய சகோதரர்கள்.—மத்தேயு 25:34-46.

  •   கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாக்களை கூட்டிச்சேர்ப்பது. கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையுள்ள நபர்கள் இந்த பூமியில் இறந்தவுடனே பரலோகத்தில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.—மத்தேயு 24:31; 1 கொரிந்தியர் 15:50-53; 1 தெசலோனிக்கேயர் 4:15-17.

  •   அர்மகெதோன். இது, ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’ என்றும் ‘யெகோவாவின் நாள்’ என்றும் அழைக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16; ஏசாயா 13:9; 2 பேதுரு 3:12) கிறிஸ்து யாரையெல்லாம் பொல்லாதவர்கள் என்று நியாயந்தீர்க்கிறாரோ அவர்களெல்லாம் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். (செப்பனியா 1:18; 2 தெசலோனிக்கேயர் 1:6-10) பைபிளில், உலகம் முழுவதும் இருக்கிற அரசியல் அமைப்புக்கு படமாக இருக்கிற ஏழு தலை கொண்ட மூர்க்க மிருகமும் அழிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 19:19-21.

மிகுந்த உபத்திரவத்துக்குப் பின்பு நடக்கும் சம்பவங்கள்

  •   சாத்தானும் அவனுடைய பேய்களும் அதலபாதாளத்துக்குள் தள்ளப்படுவது. ஒரு பலம் படைத்த தேவதூதர், சாத்தானையும் அவனுடைய பேய்களையும் “அதலபாதாளத்துக்குள்” அதாவது, செயல்பட முடியாத நிலைமைக்கு தள்ளிவிடுவார். (வெளிப்படுத்துதல் 20:1-3) அங்கே சாத்தானுடைய நிலைமை சிறையில் இருக்கிற மாதிரி இருக்கும். அவனால் யாரையும் ஏமாற்ற முடியாது.—வெளிப்படுத்துதல் 20:7.

  •   ஆயிர வருட அரசாட்சி ஆரம்பம். கடவுளுடைய அரசாங்கம் தன்னுடைய 1000 வருட அரசாட்சியை ஆரம்பிக்கும். அது மனிதர்களுக்கு ஆசீர்வாதங்களை அள்ளி அள்ளித் தரும். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:4, 6) எண்ண முடியாதளவுக்குத் “திரள் கூட்டமான மக்கள்” ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பார்கள்.’ பூமியில் ஆரம்பிக்கப் போகிற அந்த ஆயிர வருட அரசாட்சியில் வாழ்வார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; சங்கீதம் 37:9-11.

a வெளிப்படுத்துதல் புத்தகம், பொய் மதங்களை மகா பாபிலோன் என்று அழைக்கிறது. அதை ‘பேர்போன விபச்சாரி’ என்றும் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 17:1, 5) மகா பாபிலோனை அழிக்கப்போகிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம் ஒரு உலகளாவிய அமைப்பைக் குறிக்கிறது. அது எல்லா தேசங்களையும் ஒன்றிணைப்பதற்கும், அவற்றை பிரதிநிதித்துவம் செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்டது. அது முதலில் சர்வதேச சங்கம் என்று அழைக்கப்பட்டது. இப்போது ஐநா சபை என்று அழைக்கப்படுகிறது.