இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
என் ஃப்ரெண்டு என்னை நோகடித்தால் என்ன செய்வது?
தெரிந்திருக்க வேண்டியவை
பிரச்சினைகள் இல்லாத உறவுகளே இல்லை. பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், உங்கள் ஃப்ரெண்டு, ஏன் உங்கள் பெஸ்ட் ஃப்ரெண்டுகூட சிலசமயம் உங்களை நோகடிப்பது போல் ஏதாவது சொல்லிவிடலாம் அல்லது செய்துவிடலாம். நீங்களும் பாவ இயல்புள்ள ஒரு நபர்தான். நேர்மையாக யோசித்துப் பார்த்தால், நீங்களும் மற்றவர்களுடைய மனதை காயப்படுத்தியிருப்பீர்கள் தானே?—யாக்கோபு 3:2.
சட்டென்று புண்பட இன்டர்நெட் வாய்ப்பு கொடுத்துவிடலாம். டேவிட் என்ற இளைஞர் இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது உங்கள் ஃப்ரெண்ட்ஸ் பார்டிக்கு போன பிக்சரை நீங்கள் பார்த்த உடனே, என்னை ஏன் கூப்பிடவில்லை என்று யோசிக்க ஆரம்பித்துவிடலாம். அப்புறம் என் ஃப்ரெண்ட்ஸ் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று நினைத்து சோகமாகிவிடலாம்.”
பிரச்சினையைச் சரிசெய்ய உங்களால் கற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்களையே எடைபோட்டுப் பாருங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “சட்டென்று கோபப்படாதே; இது முட்டாளின் அடையாளம்.”—பிரசங்கி 7:9, அடிக்குறிப்பு.
“சிலசமயம் நாம் உம் என்று முகத்தை தூக்கி வைத்திருக்கிற அளவுக்கு அது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை என்று பிறகுதான் புரியும்.”—அலைஷா.
யோசித்துப் பாருங்கள்: நீங்கள் ஒரு தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறீர்களா? மற்றவர்களிடம் இருக்கிற குறைகளை உங்களால் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள முடியுமா?—பிரசங்கி 7:21, 22.
மன்னிப்பதால் வருகிற நன்மைகளை யோசித்துப் பாருங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “தன் மனதைப் புண்படுத்துகிறவர்களை மன்னிப்பது அவனுக்கு அழகு.”—நீதிமொழிகள் 19:11.
“கோபப்படுவதற்கு நியாயமான காரணம் இருந்தாலும் தாராளமாக மன்னிப்பது நல்லது. மன்னிப்பது என்றால் ஒவ்வொரு தடவையும் அந்த நபரிடம் போய் நீங்கள் செய்தது தப்பு என்று சொல்லி அவரை மன்னிப்பு கேட்க வைப்பது கிடையாது. ஒரு தடவை மன்னித்துவிட்டால், அதைப் பற்றி மறுபடியும் வாயே திறக்க கூடாது.”—மல்லோரி.
யோசித்துப் பாருங்கள்: இது அவ்வளவு பெரிய பிரச்சினையா? சமாதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னால் அவரை மன்னிக்க முடியுமா?—கொலோசெயர் 3:13.
மற்றவர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:4.
“அன்பும் மரியாதையும் நட்பில் கலந்திருக்கும்போது பிரச்சினைகள் வந்தால், அதைச் சீக்கிரமாக சரிசெய்ய முயற்சி செய்வீர்கள். ஏனென்றால், அந்த நட்பில் உங்களுடைய நேரம் சக்தி என்று நிறைய விஷயங்களை நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்கள். அது அவ்வளவு சீக்கிரமாக நஷ்டமாகிவிட வேண்டும் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.”—நிக்கோல்.
யோசித்துப் பாருங்கள்: மற்றவர்கள் அவர்களின் கருத்தைச் சொல்லும்போது அதில் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை என்னால் கண்டுபிடிக்க முடிகிறதா?—பிலிப்பியர் 2:3.
நெஞ்சில் நிறுத்த: மற்றவர்கள் உங்களை நோகடிக்கும்போது, அதை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துவைத்திருப்பது ஒரு கலைதான். அதை நீங்கள் இப்போதே கற்றுக்கொண்டால், நீங்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் அது கைகொடுக்கும். கற்றுக்கொள்வீர்களா?