இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
என் அப்பா-அம்மா ஏன் என்னை ஜாலியாக இருக்க விடுவதில்லை?
உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் ஒரு பார்ட்டிக்கு உங்களை கூப்பிடுகிறார்கள். ‘போகட்டுமா’ என்று நீங்கள் உங்களுடைய அப்பா-அம்மாவிடம் கேட்கும்போது அவர்கள், ‘போகக் கூடாது’ என்று உறுதியாக சொல்கிறார்கள். ‘இது தெரிஞ்சதுதானே! போன தடவைகூட இப்படித்தானே சொன்னார்கள்’ என்று நீங்கள் யோசிக்கிறீர்கள்.
இந்தக் கட்டுரையில்
என்னுடைய அப்பா-அம்மா ஏன் எப்போதுமே ‘நோ’ சொல்கிறார்கள்?
‘நான் என்ன கேட்டாலும் என்னுடைய அப்பா-அம்மா ‘நோ’ சொல்கிறார்கள்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ‘நான் ஜாலியாக இருப்பதே அவர்களுக்குப் பிடிக்கவில்லை போல!’ என்று நீங்கள் யோசிக்க ஆரம்பிக்கலாம்.
டீனேஜரான மேரிக்கு அவளுடைய அப்பா-அம்மா முதல் தடவையாக ஒரு போன் வாங்கிக் கொடுத்தபோது, அவளும் இப்படித்தான் நினைத்தாள். அவள் இப்படிச் சொல்கிறாள்: “நான் எந்த ‘ஆப்’-ஐ டவுன்லோட் செய்யலாம், யாரிடமெல்லாம் பேசலாம், எந்த டைமுக்கு அப்புறம் பேசக் கூடாது என்றெல்லாம் என்னுடைய அப்பா நிறைய ரூல்ஸ் போட்டார். ஆனால் என்னுடைய நண்பர்களுக்கு அப்படியெல்லாம் எந்த ரூல்சும் கிடையாது, அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பண்ணலாம்.”
யோசித்துப் பார்க்க: மேரி ஜாலியாக இருக்கவே கூடாது என்றுதான் அவளுடைய அப்பா நினைத்தாரா? இல்லையென்றால், வேறு எதையாவது நினைத்து கவலைப்பட்டாரா?
இப்படிச் செய்துபாருங்கள்: உங்களை ஒரு அப்பாவாகவோ அம்மாவாகவோ நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். உங்கள் டீனேஜ் பிள்ளைக்கு ஒரு போன் வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள். எதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படுவீர்கள்? உங்கள் பிள்ளை எந்த ஆபத்திலும் சிக்காமல் இருப்பதற்கு நீங்கள் என்னென்ன ரூல்ஸ் போடுவீர்கள்? ‘நான் ஜாலியாக இருப்பதே உங்களுக்கு பிடிக்கவில்லை’ என்று உங்கள் பிள்ளை உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
“ ‘அப்பா-அம்மாவுடைய இடத்தில் உன்னை வெச்சுப் பாரு’ என்று என்னுடைய அப்பா அடிக்கடி சொல்வார். அப்படி யோசித்துப் பார்த்ததால் அந்த ரூல்ஸ் எனக்கு ஏன் நல்லது என்று மட்டுமல்ல, அதை ஏன் அவர்கள் போடுகிறார்கள் என்றும்கூட என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனக்கு பிள்ளைகள் இருந்தால், என்னுடைய அப்பா என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாரோ அதையேதான் நானும் அவங்ககிட்ட எதிர்பார்ப்பேன்.”—டேன்யா.
என்னுடைய அப்பா-அம்மாவை ‘ஓகே’ சொல்ல வைக்க நான் என்ன செய்யலாம்?
“கத்திக் கூச்சல் போடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. அதற்கு அப்புறம் நீங்களும் உங்களுடைய அப்பா-அம்மாவும் மனசு நொந்துதான்போவீர்கள். நீங்கள் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருந்தால், உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்றும் சுதந்திரம் கொடுக்கிற அளவுக்கு நீங்கள் இன்னும் வளரவில்லை என்றும் உங்கள் அப்பா-அம்மா நினைப்பார்கள்.”—ரிச்சர்ட்.
“என்னுடைய அப்பா-அம்மா ஏதாவது ரூல்ஸ் போட்டால், அதற்கு பின்னாடி ஒரு நல்ல காரணம் இருக்கும். நான் ஜாலியாகவே இருக்கக் கூடாது என்று அவர்கள் நினைக்கவில்லை, நான் எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்க்கையை என்ஜாய் பண்ண வேண்டும் என்றுதான் அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.”—ஐவி.
பைபிள் ஆலோசனை: “முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான். ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 29:11.
“போன் பயன்படுத்துகிற விஷயத்தில் என்னுடைய அப்பா போட்ட ரூல்ஸை திருட்டுத்தனமாக மீறலாமா என்று யோசித்தேன். ராத்திரி ரொம்ப லேட்டா என்னுடைய ப்ரெண்ட்ஸுக்கு மெசேஜ் பண்ணலாமா... டவுன்லோட் பண்ணக் கூடாது என்று என்னுடைய அப்பா சொன்ன ‘ஆப்ஸ்’-ஐ டவுன்லோட் பண்ணலாமா என்றெல்லாம் யோசித்தேன். நான் ஒருவேளை அப்படி செய்தால் அப்பா எப்படியும் அதை கண்டுபிடித்துவிடுவார், என்மேல் இருந்த நம்பிக்கை போனதால் எனக்கு போட்ட ரூல்ஸை இன்னும் ஸ்ட்ரிக்ட் ஆக்கிவிடுவார். அதனால் அப்பா-அம்மாவுக்கு தெரியாமல் செய்யலாம் என்று நினைப்பது நல்ல ஐடியா கிடையாது.” —மேரி.
“பொறுமையாக இருங்கள். உங்களுடைய அப்பா-அம்மா உங்களுக்கு போட்ட ரூல்ஸை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். அவர்கள் போட்ட ரூல்ஸ்படி நீங்கள் ஒழுங்காக நடந்தால், உங்களுக்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கலாம் என்று அவர்கள் யோசிப்பார்கள்.”—மெலிண்டா.
பைபிள் ஆலோசனை: “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள்.”—கொலோசெயர் 3:20.
“நீங்கள் திரும்பத் திரும்ப நச்சரித்துக்கொண்டே இருந்தால், நீங்கள் நினைப்பது நடக்கவே நடக்காது.”—நட்டாலி.
“பிள்ளைகள் தெளிவாக யோசித்து நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும் என்றுதான் அப்பா-அம்மா ஆசைப்படுவார்கள். அதனால் , நான் ஒரு விஷயத்தை செய்வதற்கு என் அப்பா-அம்மாவிடம் அனுமதி கேட்கும்போது உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசாமல், அதற்கான நியாயமான காரணங்களை மட்டும் பேசுவேன். இதனால் நான் கேட்ட விஷயத்துக்கு அவர்கள் அனுமதி கொடுப்பார்கள்.”—ஜோசப்.
பைபிள் ஆலோசனை: “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.”—எபேசியர் 6:2.