இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
என் அப்பா அம்மா கெடுபிடியாக இருப்பதைப் பற்றி அவர்களிடம் எப்படிப் பேசுவது?
“எனக்கு 15 வயசு இருந்தப்போ, அப்பா அம்மா போட்ட கட்டுப்பாடெல்லாம் எனக்கு சரியா பட்டுச்சு. ஆனா, இப்போ எனக்கு 19 வயசு. இன்னும் நிறைய சுதந்திரம் வேணும்னு இப்போ தோணுது.”—சில்வியா.
சில்வியாவைப் போலவே நீங்களும் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசுவது என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
அப்பா அம்மா போட்டிருக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றி அவர்களிடம் பேசுவதற்கு முன்பு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை யோசித்துப்பாருங்கள்:
சட்டங்கள் இல்லையென்றால் வாழ்க்கை தாறுமாறாக ஆகிவிடும். போக்குவரத்து அதிகமாக இருக்கும் ஒரு நெடுஞ்சாலையைக் கற்பனை செய்யுங்கள். அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து குறியீடுகளோ, சிக்னல்களோ, வேகக் கட்டுப்பாடுகளோ இல்லை என்றால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக தாறுமாறாகத்தான் இருக்கும்! அதேபோல், சட்டங்கள் இல்லையென்றால், வீடும் தாறுமாறாகத்தான் இருக்கும்!
உங்கள் அப்பா அம்மாவுக்கு உங்கள்மேல் அக்கறை இருப்பதால்தான் சட்டங்களைப் போடுகிறார்கள். அவர்கள் சட்டங்களே போடவில்லை என்றால், உங்களுக்கு என்ன நடந்தாலும் அவர்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்களை ஒரு நல்ல பெற்றோர் என்று சொல்ல முடியுமா?
உங்களுக்குத் தெரியுமா? உங்கள் அப்பா அம்மாவுக்கும் சட்டங்கள் இருக்கின்றன! உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால், இந்த வசனங்களை எடுத்துப் பாருங்கள்: ஆதியாகமம் 2:24; உபாகமம் 6:6, 7; எபேசியர் 6:4; 1 தீமோத்தேயு 5:8.
இதையெல்லாம் படித்த பிறகு, சட்டங்கள் தேவை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இருந்தாலும், உங்கள் அப்பா அம்மா கெடுபிடியான சட்டங்களைப் போடுவதாக நினைத்தால் என்ன செய்வது?
நீங்கள் என்ன செய்யலாம்?
அப்பா அம்மாவிடம் பேசுவதற்கு முன்பு, நன்றாக யோசியுங்கள். உங்கள் அப்பா அம்மா போட்டிருக்கும் சட்டங்களுக்கு இதுவரை நீங்கள் எந்தளவு கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்? அவ்வளவாகக் கீழ்ப்படியவில்லை என்று நீங்கள் நினைத்தால், இன்னும் அதிகமான சுதந்திரம் வேண்டுமென்று கேட்பதற்கு இது சரியான சமயம் கிடையாது. அதனால், “அப்பா-அம்மாவின் நம்பிக்கையை நான் எப்படிச் சம்பாதிக்கலாம்?” என்ற கட்டுரையை முதலில் படித்துப் பாருங்கள்.
இதுவரை நீங்கள் நன்றாகக் கீழ்ப்படிந்திருக்கிறீர்கள் என்றால், அப்பா அம்மாவிடம் என்ன பேசுவது என்பதைப் பற்றி முன்கூட்டியே நன்றாக யோசியுங்கள். ஒருவேளை, நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களை ஒரு நோட்டில் எழுதலாம். அப்படிச் செய்யும்போது, நீங்கள் நியாயமானதைத்தான் கேட்கிறீர்களா என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம். அடுத்து, நீங்கள் எல்லாரும் சாவகாசமாக உட்கார்ந்து எந்த நேரத்தில், எந்த இடத்தில் பேசலாம் என்பதை அப்பா அம்மாவிடம் கேளுங்கள். அப்படிப் பேசும்போது, கீழே இருக்கும் விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:
மரியாதை காட்டுங்கள். “கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:1) உங்கள் அப்பா அம்மாவிடம் வாக்குவாதம் செய்தாலோ, அவர்கள் அநியாயம் செய்வதாகக் குற்றம் சுமத்தினாலோ, உங்கள் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்காது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
“நான் எந்தளவு என்னோட அப்பா அம்மாவுக்கு மரியாதை காட்டுறேனோ, அவங்களும் அந்தளவு எனக்கு மரியாதை காட்டுறாங்க. இந்த மாதிரி ஒருத்தர் மேல் ஒருத்தர் மரியாதை காட்டுறப்போ, சுமுகமான முடிவுக்கு வர முடியுது.”—பியாங்க்கா, 19.
கவனமாகக் கேளுங்கள். “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:19) நீங்கள் உங்கள் அப்பா அம்மாவோடு கலந்துபேசுவதற்காகத்தான் போகிறீர்களே தவிர, ‘சொற்பொழிவு’ கொடுப்பதற்காக அல்ல என்பதை மனதில் வையுங்கள்.
“வளர வளர, அப்பா அம்மாவ விட நமக்கு நிறைய விஷயங்கள் தெரியும்னு நாம நினைக்கலாம். ஆனா அது உண்மை கிடையாது. எப்பவுமே அவங்களோட அறிவுரைகளை கேட்டு நடக்குறதுதான் நல்லது.”—டேவன், 20.
அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். உங்கள் அப்பா அம்மா ஏதாவது சொன்னால், அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 2:4) அப்படியென்றால், அந்த மற்றவர்களில் உங்கள் அப்பா அம்மாவும் இருக்கிறார்கள், இல்லையா?
“நானும் என்னோட அப்பா அம்மாவும் ‘ஒரே டீம்ல’ இருக்குறோம்னு நினைக்காம, அவங்க ஏதோ ‘எதிர் டீம்ல’ இருக்கிற மாதிரி நினைச்சேன். நான் எப்படி ஒரு பொறுப்பான ஆளா ஆகுறதுக்கு முயற்சி செஞ்சிட்டு இருந்தேனோ, அதேமாதிரி அவங்களும் நல்ல பெற்றோரா ஆகுறதுக்கு முயற்சி செஞ்சிட்டு இருந்தாங்கனு இப்பதான் எனக்கு புரியுது. என்மேல அன்பு இருந்ததுனாலதான் அவங்க எல்லாத்தையுமே செஞ்சாங்க.”—ஜோஷுவா, 21.
நீங்களே ஒரு தீர்வைச் சொல்லுங்கள். உதாரணத்துக்கு, ராத்திரி நேரத்தில் ஒரு பார்ட்டிக்கு போக வேண்டும் என்று உங்கள் அப்பா அம்மாவிடம் அனுமதி கேட்கிறீர்கள். ஆனால், போகக் கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள். இப்போது, அவர்கள் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணம் என்று யோசியுங்கள். நீங்கள் ராத்திரி நேரத்தில் போவதை நினைத்து அவர்கள் கவலைப்படுகிறார்களா? அல்லது, பார்ட்டிக்கு போவதை நினைத்து கவலைப்படுகிறார்களா?
நீங்கள் ராத்திரி நேரத்தில் போவது அவர்களுக்குக் கவலையாக இருக்கும்பட்சத்தில், துணைக்கு இன்னொருவரை கூட்டிக்கொண்டு போவதாகச் சொன்னால், உங்களுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் அந்த பார்ட்டிக்கு போவது அவர்களுக்குக் கவலையாக இருக்கும்பட்சத்தில், அந்த பார்ட்டிக்கு யாரெல்லாம் வருவார்கள்... மேற்பார்வை செய்ய யாராவது அங்கே இருப்பார்களா... போன்ற விவரங்களைச் சொன்னால், உங்களுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்பா அம்மாவிடம் பேசும்போது மதிப்பு மரியாதை காட்டுங்கள். அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள். ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்கிறீர்கள்’ என்பதை உங்கள் சொல்லாலும் செயலாலும் காட்டுங்கள். (எபேசியர் 6:2, 3) இப்படிச் செய்யும்போது, கட்டுப்பாடுகளை அவர்கள் தளர்த்தலாம், தளர்த்தாமலும் போகலாம். எப்படி இருந்தாலும்...
அப்பா அம்மா எடுக்கும் முடிவுகளை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வது முக்கியமாக இருந்தாலும், இதன் அவசியத்தை நிறைய பிள்ளைகள் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக அப்பா அம்மாவிடம் வாக்குவாதம் செய்தால், அடுத்த தடவை உங்களுக்குச் சுதந்திரம் கிடைப்பது கஷ்டம்! ஆனால், அப்பா அம்மா சொல்வதை மனதார ஏற்றுக்கொண்டால், இப்போதே உங்களுக்கு அதிக சுதந்திரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.