Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

என் கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?

என் கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?

 என்ன சொல்வீர்கள்?

  •  நீங்கள் எப்போதெல்லாம் கோபப்படுவீர்கள்?

    •  கோபமே வராது

    •  அவ்வப்போது

    •  தினமும்

  •  எந்தளவுக்கு கோபப்படுவீர்கள்?

    •  கொஞ்சம்

    •  ரொம்பவே

    •  பயங்கரமாக

  •  பொதுவாக நீங்கள் யாரிடம் கோபப்படுவீர்கள்?

    •  அப்பாவிடம் அல்லது அம்மாவிடம்

    •  கூட பிறந்தவரிடம்

    •  நண்பரிடம்

 கோபத்தை நீங்கள் கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும். யாராவது உங்களை கோபப்படுத்தினால் அமைதியாக இருப்பது ஏன் முக்கியம் என்பதற்கு சில காரணங்களை முதலில் பார்க்கலாம்.

 ஏன் முக்கியம்?

 உங்கள் உடல்நலம். “அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்” என்று நீதிமொழிகள் 14:30 சொல்கிறது. ஆனால் “இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் கோபம்தான்” என்று ஜர்னல் ஆஃப் மெடிசின் அண்ட் லைஃப் என்ற புத்தகம் சொல்கிறது.

 உங்கள் நண்பர்கள். பைபிள் இப்படி சொல்கிறது: “கோபக்காரனோடு சகவாசம் வைக்காதே. எரிந்து விழுகிற சுபாவம் உள்ளவனோடு சேராதே.” (நீதிமொழிகள் 22:24) அதனால், நீங்கள் தொட்டதுக்கெல்லாம் கோபப்பட்டால் யாருமே உங்களிடம் சரியாக பழக மாட்டார்கள். “கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளவில்லை என்றால் நல்ல நண்பர்கள் கூட உங்களை விட்டு போய்விடுவார்கள்” என்று ஜாஸ்மின் என்ற இளம்பெண் சொல்கிறாள்.

 உங்கள் நல்ல பெயர். “நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் அது மற்றவர்களுக்கு பளிச்சென்று தெரிந்துவிடும். அதனால் நீங்கள் பயங்கர கோபக்காரன் என்று அவர்கள் முடிவுகட்டிவிடுவார்கள்” என்று ஈத்தன் என்ற 17 வயது பையன் சொல்கிறான். உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்ன நடந்தாலும் கோபப்படாமல் கூலாக இருக்கிறவன்/ள் என்று நான் பெயர் எடுக்க வேண்டுமா அல்லது மூக்குக்குமேல் கோபப்படுகிறவன்/ள் என்ற பெயர் எடுக்க வேண்டுமா?’ பைபிள் இப்படி சொல்கிறது: “பகுத்தறிவு நிறைந்தவன் சட்டெனக் கோபப்பட மாட்டான். ஆனால், பொறுமை இல்லாதவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வான்.”—நீதிமொழிகள் 14:29.

கோபத்தில் கொந்தளிக்கிற ஒரு ஆள் பக்கத்தில் போக கூட யாருமே விரும்ப மாட்டார்கள்

 நீங்கள் என்ன செய்யலாம்?

 கீழே இருக்கிற வசனங்களையும் குறிப்புகளையும் படித்துப் பாருங்கள். பின்பு, அங்கே கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள்.

  •   நீதிமொழிகள் 29:22: “கோபக்காரன் சண்டையைக் கிளப்புகிறான். ஆவேசப்படுகிறவன் நிறைய குற்றங்களைச் செய்துவிடுகிறான்.”

     “எனக்கு 13, 14 வயசு இருக்கும்போது கோபத்தை கட்டுப்படுத்தறதுதான் பெரிய பிரச்சினையே. எங்கள் அப்பாவுடைய சொந்தக்காரர்களுக்கும் இதே பிரச்சினை இருக்குது. இது எங்களுடைய பரம்பரை குணம். எங்களை மாதிரி ஆளுகளுக்கெல்லாம் கோபத்தை கட்டுப்படுத்துறது ரொம்பவே கஷ்டம்!”—கெரி.

     நான் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறேனா? என்னிடம் இருக்கிற நல்ல குணங்களை யாராவது பாராட்டும்போது அதை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த கெட்ட குணத்துக்கு மட்டும் பரம்பரைமேல் பழிபோடுவது நியாயமாக இருக்குமா?

  •   நீதிமொழிகள் 15:1: “சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும். ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.”

     “இதற்கு ஒரே தீர்வு உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வதுதான். நீங்கள் என்ன நடந்தாலும் பொறுமையா இருக்க பழகிக்கொண்டால், எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே பார்க்க முயற்சி செய்தால் உங்களுக்கு கோபமே வராது.”—டேரல்.

     யாராவது என்னை கோபப்படுத்தினால் உடனே நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது ஏன் முக்கியம்?

  •   நீதிமொழிகள் 26:20: “விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்.”

     “நான் அன்பாக பதில் சொல்லும்போது என்னிடம் கோபப்படுகிறவர்களும் அமைதியாகிவிடுகிறார்கள். அதற்கு அப்புறம் எங்களால் கோபப்படாமல் நிதானமாக பேச முடிகிறது.”—ஜாஸ்மின்.

     என்னுடைய பேச்சோ செயல்களோ எப்படி எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இருக்கலாம்?

  •   நீதிமொழிகள் 22:3: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”

     “சிலசமயம் அந்த இடத்தை விட்டே நான் போய்விடுவேன். அதற்கு பின்பு கொஞ்சம் நேரமெடுத்து என்ன நடந்தது என்று யோசித்து பார்ப்பேன். நான் அமைதியான பின்பு அந்த பிரச்சினையை என்னால் சரி செய்ய முடியும்.”—கேரி.

     நீங்கள் இரண்டு பேருமே கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் அந்த இடத்தை விட்டு போவதுதான் நல்லது, அதே சமயத்தில் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காத மாதிரியும் காட்டிவிட கூடாது. அப்படியென்றால் எப்போது அந்த இடத்தை விட்டு போவது சரியாக இருக்கும்?

  •   யாக்கோபு 3:2: “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.”

     “ஏதாவது தப்பு செய்துவிட்டால் வருத்தப்பட்டால் மட்டும் போதாது, அதிலிருந்து பாடங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் கீழே விழுந்துவிட்டால் உடனே எழுந்துவிடுவோம். அதே மாதிரி, ஏதாவது தப்பு செய்துவிட்டால் உடனே அதைத் திருத்திக்கொண்டு அடுத்த தடவை சரியாக செய்ய உறுதியாக இருக்க வேண்டும்.”—கெரி.

 டிப்ஸ்: ஒரு குறிக்கோள் வையுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, ஒருவேளை ஒரு மாதத்துக்கு, ‘என்ன நடந்தாலும் நான் கோபமே பட மாட்டேன்’ என்று முடிவெடுங்கள். அதை எழுதி வைத்து நீங்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள் என்று பார்த்துக்கொண்டே வாருங்கள்.