இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
கவலைகளை எப்படிச் சமாளிப்பது?
எதெல்லாம் உங்களைக் கவலைப்பட வைக்கிறது?
இவர்களைப் போலத்தான் சிலசமயம் நீங்களும் உணருகிறீர்களா?
“‘நான் போற கார் ஒருவேள ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சுனா என்ன பண்ணறது?’ ‘நான் போற ஏரோப்ளேன் வெடிச்சு சிதறிடுச்சுனா என்ன செய்யறது?னு கண்டதையெல்லாம் நான் யோசிச்சுகிட்டே இருப்பேன். பொதுவா ஜனங்க நெனச்சு கவலைப்படாத விஷயங்களையெல்லாம் நெனச்சு நான் ரொம்பவே கவலப்படுவேன்.”—சார்லஸ்.
“எப்பவும் மனசில ஒருவிதமான கவலை இருக்கு. எங்கயும் போக முடியாம சுழல் சக்கரத்துக்குள்ளயே ஓடிக்கிட்டு இருக்கற சுண்டெலி மாதிரி தோணுது. என்னதான் உயிர கொடுத்து வேலை செஞ்சாலும் பெரிசா எதையும் சாதிக்கிற மாதிரி தெரியல.”—ஆன்னா.
“உனக்கென்னப்பா ஜாலி... நீ இன்னும் ஸ்கூல்லதானே இருக்கேன்னு மத்தவங்க சொல்லும்போது, “ஸ்கூலுன்னாலே தலைவலி பிடிச்ச விஷயம்னு இவங்களுக்கு எங்க தெரியப்போகுதுன்னு மனசுக்குள்ள நெனச்சுக்குவேன்.”—டேனியெல்.
“ஒரு பிரஷர் குக்கர் மாதிரி மனசுக்குள்ள எப்பவும் பிரஷர் இருந்துட்டே இருக்கு. அடுத்தது என்ன நடக்கப் போகுதோ... அடுத்தது நான் என்ன செய்ய வேண்டியிருக்குமோ...ன்னு நெனச்சு கவலப்பட்டுகிட்டுட்டே இருக்கேன்.”—லோரா.
உண்மை: பைபிளில் சொல்லப்பட்டுள்ளபடி, “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக” இருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1) அதனால், பெரியவர்கள் எந்தளவுக்குக் கவலைப்படுகிறார்களோ அதே அளவுக்கு இளைஞர்களும் கவலைப்படுகிறார்கள்.
கவலைப்படுவது எப்போதுமே தவறா?
இல்லை. உங்கள் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களின் மனதை நோகடித்துவிடக் கூடாது என்று கவலைப்படுவதில் எந்தத் தப்பும் இல்லை என்று பைபிளே சொல்கிறது.—1 கொரிந்தியர் 7:32-34; 2 கொரிந்தியர் 11:28.
அதனால், கவலையை நினைத்து கவலைப்படாதீர்கள்! நம்மைச் செயல்பட வைக்கும் சக்தி கவலைக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு, அடுத்த வாரம் நீங்கள் ஒரு பரீட்சையை எழுத வேண்டியிருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதை நினைத்துக் கவலைப்பட்டால் என்ன செய்வீர்கள்? இந்த வாரமே அதற்காக விழுந்துவிழுந்து படிப்பீர்கள்—அதனால், நல்ல மார்க் எடுப்பீர்கள்!
ஓரளவுக்குக் கவலைப்படுவது ஆபத்துகளைக் குறித்து உங்கள் மனதில் எச்சரிக்கை மணியை ஒலிக்க வைக்கும். “தப்பான வழியில போய்கிட்டு இருக்கிறீங்கன்னு தெரிஞ்சுதுன்னா அடிமனசுல ஒருவிதமான கவலை வந்திடும். அந்தத் தப்பான வழிய மாத்திக்கற வரைக்கும் அந்தக் கவலை மனசில இருந்துகிட்டே இருக்கும்” என்கிறாள் செரீனா என்ற டீனேஜ் பெண்.—யாக்கோபு 5:14-ஐ ஒப்பிடுங்கள்.
உண்மை: சரியானதைச் செய்ய கவலை உங்களைத் தூண்டும்போதுதான் அது உங்களுக்கு நன்மை தரும்.
ஒருவேளை, வேண்டாத விஷங்களைப் பற்றி யோசித்து யோசித்து நீங்கள் கவலையில் மூழ்கிப்போய்விட்டால் என்ன செய்வது?
உதாரணத்திற்கு: “சிக்கலான ஒரு சூழ்நிலையில இருக்குறப்போ, ‘ஐயோ... இப்படி நடந்திடுமோ, அப்படி நடந்திடுமோ’ன்னு மனசு கிடந்து அடிச்சுகிட்டே இருக்கும். மறுபடியும் மறுபடியும் அத பத்தியே யோசிச்சுகிட்டு இருப்பேன், அப்படியே கவலையில மூழ்கிப்போயிடுவேன்” என்று சொல்கிறான் 19 வயது ரிச்சர்டு.
“அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:30) அதற்கு நேர்மாறாக, கவலைப்படுகிற உள்ளம் உடலுக்குக் கேடு உண்டாக்கும்; உதாரணமாக, தலைவலி, தலைச்சுற்றல், வயிற்றுக்கோளாறு, நெஞ்சில் படபடப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
கவலைப்படுவது உங்களுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக, தீமை செய்கிறது என்றால், என்ன செய்யலாம்?
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்களுடைய கவலை நியாயமானதுதானா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். “பொறுப்புகள நெனச்சு கவலைப்படறது சரிதான்; ஆனா அளவுக்கதிகமா கவலைப்படறது சரியில்ல. இந்தப் பழமொழி என் ஞாபகத்துக்கு வருது: கவலைப்படறது, சாய்ந்தாடற நாற்காலியில உட்கார்ந்து இப்படியும் அப்படியும் ஆடிக்கிட்டு இருக்கற மாதிரி... ஏதோவொண்ணு செஞ்சிட்டு இருப்பீங்க, ஆனா எதையும் சாதிக்க மாட்டீங்க.”—கேத்தரின்.
பைபிள் என்ன சொல்கிறது: “கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை கூட்ட முடியுமா?”—மத்தேயு 6:27.
இதன் அர்த்தம்: கவலைப்படுவது உங்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொடுத்தால் நல்லது, இல்லையென்றால் அது உங்கள் பிரச்சினையைக் கூட்டத்தான் செய்யும்—அல்லது அதுவே உங்கள் பிரச்சினையாக ஆகிவிடும்.
அந்தந்த நாளைப் பற்றி மட்டுமே யோசியுங்கள். “கொஞ்சம் யோசிச்சு பாருங்க: நீங்க எத நெனச்சு கவலைப்படறீங்களோ அது நாளைக்கு ஒரு பெரிய விஷயமா இருக்குமா? ஒருவேளை அடுத்த மாசம்? அடுத்த வருஷம்? ஐந்து வருஷம் கழிச்சு?”—ஆன்தொனி.
பைபிள் என்ன சொல்கிறது: “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்.”—மத்தேயு 6:34.
இதன் அர்த்தம்: நாளைக்கு வரப்போகிற பிரச்சினைகளை நினைத்து இன்று கவலைப்படுவது முட்டாள்தனம். அவற்றில் சில பிரச்சினைகள் ஒருவேளை வராமலேயே போய்விடலாம்.
மாற்ற முடியாத சூழ்நிலைகளில் வாழப் பழகிக்கொள்ளுங்கள். “எந்த மாதிரியான சூழ்நிலைமைய எதிர்ப்பட வேண்டியிருந்தாலும் முடிஞ்சளவு அதுக்கு நீங்க தயாரா இருக்க முயற்சி செய்யணும், ஆனா சில சூழ்நிலைமைகள் உங்க கட்டுப்பாட்டில இல்லங்கற உண்மைய நீங்க ஒத்துக்கணும்.”—ரோபர்ட்.
பைபிள் என்ன சொல்கிறது: “வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, . . . அறிவாளிகளுக்கு எல்லா சமயத்திலும் வெற்றி கிடைப்பதில்லை. ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.”—பிரசங்கி 9:11.
இதன் அர்த்தம்: சில சமயங்களில் உங்களுடைய சூழ்நிலைமைகளை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் அவற்றைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.
உங்கள் சூழ்நிலையை சரியான கண்ணோடத்தில் பாருங்கள். “நிலைமைய முழுசா புரிஞ்சுக்க முயற்சி எடுக்கணுமே தவிர சின்னச்சின்ன விஷயங்கள நெனச்சு கவலப்பட்டுகிட்டு இருக்கக் கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். எது ரொம்ப முக்கியமானதுன்னு முடிவுசெஞ்சிட்டு, அதுக்கு முழு கவனம் செலுத்தணும்.”—அலெக்ஸிஸ்.
பைபிள் என்ன சொல்கிறது: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”—பிலிப்பியர் 1:10.
இதன் அர்த்தம்: கவலைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறவர்கள் அந்தக் கவலைகளிலேயே மூழ்கிப்போய்விட மாட்டார்கள்.
யாரிடமாவது பேசுங்கள்: “நான் ஆறாவது படிக்கும்போது, ஒவ்வொரு நாளும் ஸ்கூலவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு ரொம்பக் கவலையோடதான் வருவேன், அடுத்த நாளைப் பத்தி நெனச்சுகிட்டு! என் அம்மா அப்பாவ நான் முழுசா நம்பறதனால, அவங்ககிட்ட மனசுவிட்டுப் பேசுவேன், அவங்களும் காதுகொடுத்துக் கேப்பாங்க. அப்படி அவங்க கேட்டது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்ககிட்ட எந்தத் தயக்கமும் இல்லாம பேச முடிஞ்சுது. அப்படிப் பேசினது, அடுத்த நாளை தைரியமா சந்திக்கறதுக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு.—மாரிலின்.
பைபிள் என்ன சொல்கிறது: “கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும். ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்.”—நீதிமொழிகள் 12:25.
இதன் அர்த்தம்: உங்கள் கவலையைக் குறைக்க என்னென்ன செய்யலாமென்ற நடைமுறையான ஆலோசனைகளை உங்கள் அப்பா அம்மாவோ அல்லது ப்ரெண்டோ கொடுக்கலாம்.
ஜெபம் செய்யுங்கள். “ஜெபம் செய்யறது—அதுவும் சத்தமா... என் குரல் எனக்கே கேக்கற மாதிரி ஜெபம் செய்யறது—எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. என் கவலைய மனசிலயே வெச்சுக்காம, அத வெளியில கொட்டிடறதுக்கு உதவி செய்யுது. அதோட... யெகோவாவால தீர்க்க முடியாதளவு என் பிரச்சினை ஒண்ணும் அவ்வளவு பெரிசில்லன்னு புரிஞ்சுக்க உதவி செய்யுது.”—லோரா.
பைபிள் என்ன சொல்கிறது: “[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.
இதன் அர்த்தம்: ஜெபம் செய்யும்போது நீங்களே உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யாமல் யெகோவா தேவனிடம் அதைச் சொல்லிவிடுகிறீர்கள். அவர் இப்படி வாக்குறுதி கொடுக்கிறார்: “கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.”—ஏசாயா 41:10.