இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
டெக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
:-) ஞானமாகப் பயன்படுத்தினால், மற்றவர்களோடு தொடர்புகொள்வதற்கு டெக்ஸ்டிங், அதாவது மெசேஜ் செய்வது, மிகச் சிறந்த வழியாக இருக்கும்.
:-( அலட்சியமாகப் பயன்படுத்தினால், நட்பு முறிந்துவிடும், உங்கள் பெயரும் கெட்டுவிடும்.
பின்வரும் குறிப்புகளைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்:
கூடுதலாக இந்தக் கட்டுரையில்...
யாருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்வது?
ஒருவரோடு ஒருவர் விஷயங்களைப் பரிமாறிக்கொள்வதற்கு டெக்ஸ்டிங் ஒரு நல்ல வழி என்று நிறைய டீனேஜர்கள் நினைக்கிறார்கள். உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கிற யாரோடு வேண்டுமானாலும் தொடர்கொள்வதற்கு இது ஒரு எளிய வழி—உங்கள் பெற்றோர் அனுமதித்தால்!
“நானும் என் தங்கச்சியும் பசங்களோட பேசறத பார்த்தாலே எங்க அப்பாவுக்குப் பிடிக்காது. அப்படிப் பேசறதா இருந்தா, எல்லாரும் இருக்கும்போது ஹால்ல இருக்கிற லாண்ட்லைன் ஃபோன்லதான் பேசணும்.”—லெனோர்.
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: யார் யாருக்கோ உங்கள் ஃபோன் நம்பரைக் கொடுத்தால், பிரச்சினையில்தான் மாட்டிக்கொள்வீர்கள்.
“யாருக்கு வேணும்னாலும் உங்க நம்பரைத் தந்தீங்கன்னா, தேவையில்லாத மெசேஜுகளும் படங்களும் உங்களுக்கு வந்துட்டே இருக்கும்.”—ஸ்காட்.
“எதிர்பாலார் ஒருத்தருக்கு நீங்க அடிக்கடி மெசேஜ் அனுப்பிகிட்டே இருந்தீங்கன்னா, கொஞ்ச நாள்லயே நீங்க அந்த நபரோட ரொம்ப நெருக்கமாயிடுவீங்க.”—ஸ்டீவென்.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.” (நீதிமொழிகள் 22:3) முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டீர்கள் என்றால் நிறைய வேதனைகளைத் தவிர்க்க முடியும்.
உண்மைக் கதை: “நானும் ஒரு பையனும் ஃப்ரெண்ட்ஸா பழகினோம். நிறைய மெசேஜ் செஞ்சோம். நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்தான்னு நான் நெனச்சிட்டிருந்தேன். ஆனா, அவன் என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டதா சொன்னான். அப்பதான் நான் பண்ணுன தப்பு எனக்குப் புரிஞ்சுது. நான் அவனோட அடிக்கடி ஊர் சுத்தியிருக்கக் கூடாது, அடிக்கடி மெசேஜ் அனுப்பியிருக்கக் கூடாது.”—மெலின்டா.
யோசித்துப் பாருங்கள்: மெலின்டாவைக் காதலிப்பதாக அந்தப் பையன் சொன்ன பிறகு, அவர்களுக்குள் இருந்த நட்பு எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
கதையை மாற்றி எழுதுங்கள்! மெலின்டாவும் அந்தப் பையனும் நண்பர்களாக மட்டுமே இருந்திருக்க வேண்டுமானால் மெலின்டா என்ன செய்திருக்க வேண்டும்?
என்ன விஷயங்களை டெக்ஸ்ட் மெசேஜ் செய்வது?
மெசேஜ் அனுப்புவதும் சரி, பெறுவதும் சரி, ரொம்ப ஈஸி... ரொம்ப ஜாலி... அதேசமயம், நீங்கள் அனுப்புகிற மெசேஜை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளவார்கள் என்பதை மறந்துவிடுவதும் ஈஸி.
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: மெசேஜ் செய்யப்படுகிற விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்.
“மெசேஜ் அனுப்பும்போதோ அதை வாசிக்கும்போதோ அதிலுள்ள உணர்ச்சிகளையும், குரல் தொனியையும் கண்டுபிடிக்க முடியாது—பொம்மைப் படங்களை அல்லது அடையாளக்குறிகளைப் போட்டால்கூட முடியாது. மெசேஜ் செய்வது சிலசமயம் மனஸ்தாபங்களை ஏற்படுத்திவிடலாம்.”—ப்ரியானா.
“பசங்களுக்கு அனுப்புற மெசேஜ்னால சில பொண்ணுங்க அவங்களோட பேரை கெடுத்துக்கிட்டாங்க, சரியான ஜொல்லு பார்ட்டின்னு பேர் வாங்கிட்டாங்க.”—லாரா.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “நீதிமானின் இதயம் பதில் சொல்வதற்கு முன்னால் யோசிக்கும்.” (நீதிமொழிகள் 15:28) பாடம்? மெசேஜை அனுப்புவதற்குமுன் அதை மறுபடியும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்!
எப்போது மெசேஜ் செய்வது?
மெசேஜ் அனுப்புவது சம்பந்தமாக, நன்றாக யோசித்துப் பார்த்து உங்களுக்கு நீங்களே சில விதிமுறைகளைப் போட்டுக்கொள்ளுங்கள்.
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: மெசேஜ் அனுப்புவதில் ஜாக்கிரதையாக இல்லையென்றால், உங்களை இங்கிதம் தெரியாதவர் என்று மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்; அதோடு, நண்பர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பதற்குப் பதிலாக, உங்களிடமிருந்து விலகியோடச் செய்துவிடுவீர்கள்.
“மெசேஜ் அனுப்பும்போது அது சம்பந்தப்பட்ட விதிமுறைகள் மறந்து மறந்து போயிடும். யார் கூடாவாவது பேசிட்டு இருக்கும்போது, இல்ல... டின்னர் சாப்பிட்டுகிட்டு இருக்கும்போது என்னை அறியாமலேயே நான் மெசேஜ் செஞ்சுட்டே இருப்பேன்.”—அலிஸென்.
“வண்டி ஓட்டிகிட்டே மெசேஜ் செய்யறது ரொம்ப ஆபத்தானது. ரோட்டவிட்டு ஒரு நிமிஷம் கண்ண எடுத்தீங்கன்னாகூட, விபத்து நடந்திடலாம்.”—ஆனி.
பைபிள் இப்படிச் சொல்கிறது: “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது, . . . பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.” (பிரசங்கி 3:1, 7) இந்த வசனம் பேசுவதற்கு எந்தளவு பொருந்துகிறதோ அந்தளவு மெசெஜ் செய்வதற்கும் பொருந்துகிறது.
டெக்ஸ்டிங் டிப்ஸ்
யாருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்வது?
;-)உங்கள் அப்பா அம்மா கொடுக்கிற அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.—கொலோசெயர் 3:20.
;-)யார் யாருக்கோ உங்கள் நம்பரைக் கொடுக்காதீர்கள். உங்கள் செல்ஃபோன் நம்பர் உட்பட உங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்ல நாசூக்காக மறுக்கக் கற்றுக்கொண்டீர்கள் என்றால், பெரியவர்களான பிறகு அந்தத் திறமை உங்களுக்குக் கைகொடுக்கும்.
;-)உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிற மெசேஜுகளை அனுப்பாதீர்கள். அப்படி செய்தால், நெருக்கமாகப் பழக ஆரம்பித்துவிடுவீர்கள். காதல் தீ பற்றிக்கொள்ளும், பிறகு உங்களுக்குத் தீரா தலைவலியும் மனநோவும்தான் மிஞ்சும்!
“செல்ஃபோன் விஷயத்தில நான் என் அப்பா அம்மாகிட்ட நல்ல பேர் எடுத்திருக்கேன்; அதனால, யார் யாரையெல்லாம் என்னோட கான்டாக்ட் லிஸ்ட்ல வெச்சுக்கலாம்ங்கற முடிவை நானே எடுத்துக்கறதுக்கு அவங்க அனுமதிச்சிருக்காங்க.”—ப்ரியானா.
என்ன விஷயங்களை டெக்ஸ்ட் மெசேஜ் செய்வது?
;-)மெசேஜை டைப் செய்வதற்கு முன்பு, ‘இந்த விஷயத்துக்கு மெசேஜ் அனுப்புறது சரியா இருக்குமா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். ஒருவேளை, அந்தச் சந்தர்ப்பதில் ஃபோனிலோ நேரிலோ விஷயத்தைச் சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.
;-)நேரில் எந்த விஷயத்தைச் சொல்ல மாட்டீர்களோ அந்த விஷயத்தை மெசேஜ் செய்யாதீர்கள். “சத்தமா சொல்லக் கூடாத விஷயத்தை மெசேஜாவும் அனுப்பக் கூடாது” என்கிறாள் 23 வயது சாரா.
“யாராவது அசிங்கமான படங்கள அனுப்புனா, உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லுங்க. அப்படிச் செய்யறதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு, அவங்களுக்கும் உங்கமேல நம்பிக்கை வரும்.”—செர்வான்.
எப்போது டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது?
;-)உங்கள் ஃபோனை எப்போதெல்லாம் சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டுமென்று முன்னதாகவே தீர்மானியுங்கள். “டின்னர் சாப்பிடும்போதோ படிக்கும்போதோ செல்ஃபோனை நான் வெச்சுக்க மாட்டேன். கிறிஸ்தவக் கூட்டங்கள் நடக்கும்போது ஃபோன சுவிட்ச் ஆஃப் செஞ்சிடுவேன்; அப்பதான், அத பார்க்க மனசு துடிக்காது” என்கிறாள் ஒலிவியா என்ற பெண்.
;-)கரிசனையாக நடந்துகொள்ளுங்கள். (பிலிப்பியர் 2:4) நேருக்குநேர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது மெசேஜை டைப் அடித்துக்கொண்டிருக்காதீர்கள்.
“எனக்கு நானே சில விதிமுறைகள வெச்சிருக்கேன்; உதாரணத்துக்கு, நிறைய நண்பர்களோட இருக்கும்போது, தேவைப்பட்டால் ஒழிய மெசேஜ் செய்ய கூடாதுன்னு முடிவேடுத்திருக்கேன். அவ்வளவா பழக்கமில்லாத ஆட்களுக்கு என்னோட நம்பர கொடுக்கவும் மாட்டேன்.”—யனெல்லி.