Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

டேட்டிங்—பாகம் 3: நாங்கள் ‘பிரேக்-அப்’ செய்ய வேண்டுமா?

டேட்டிங்—பாகம் 3: நாங்கள் ‘பிரேக்-அப்’ செய்ய வேண்டுமா?

 நீங்கள் கொஞ்ச நாட்களாக டேட்டிங் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போது டேட்டிங்கை தொடர்வதா வேண்டாமா என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறது. இதைப் பற்றி நல்ல முடிவெடுக்க இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும்.

இந்தக் கட்டுரையில்

 சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது

 இரண்டு பேருக்கும் நன்றாக ‘செட்’ ஆகும் என்று நினைத்து ஒரு பையனும் பெண்ணும் டேட்டிங் செய்கிறார்கள். ஆனால், கொஞ்ச நாள் டேட்டிங் செய்த பிறகு, அவர்களுக்குள் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகவில்லை என்று அவர்களுக்குத் தெரிய வருகிறது. உதாரணத்துக்கு:

  •   ஒருவருக்கு ‘பீச்’-சுக்கு போவது ரொம்ப பிடிக்கும்; இன்னொருவருக்கு மலை ஏறுவது ரொம்ப பிடிக்கும்.

  •   ஒருவர் எப்போதுமே கலகலவென்று இருப்பார்; இன்னொருவர் அமைதியான சுபாவம்.

  •   ஒருவர் எப்போதுமே நேர்மையாக நடந்துகொள்வார்; இன்னொருவர் எப்போதாவதுதான் நேர்மையாக நடந்துகொள்வார்.

 இங்கே சொல்லப்பட்டிருக்கிற மூன்றுமே வித்தியாசமான சூழ்நிலைகள். முதல் விஷயத்தில், அவர்களுடைய விருப்பங்கள் வித்தியாசமாக இருக்கிறது. இரண்டாவது விஷயத்தில், அவர்களுடைய சுபாவங்கள் வித்தியாசமாக இருக்கிறது. மூன்றாவது விஷயத்தில், அவர்களுடைய கொள்கைகள் வித்தியாசமாக இருக்கிறது.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: ஒருவேளை நீங்கள் இருவரும் கல்யாணம் செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மூன்று விஷயங்களில், எந்த விஷயத்தை சமாளிப்பது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்? எந்த விஷயத்தில் நீங்கள் இருவரும் விட்டுக்கொடுத்து போக முடியும்?

 ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் எல்லா விஷயங்களுமே ஒத்துப் போனால்தான் அவர்கள் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இரண்டு பேருடைய விருப்பங்களும் சுபாவங்களும் வித்தியாசமாக இருந்தால்கூட கல்யாண வாழ்க்கையில் அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியும். சில சமயம் கணவனோ மனைவியோ தங்களுடைய துணையின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி தங்களுடைய விருப்பத்தை மாற்றிக்கொள்கிறார்கள். இரண்டு பேருடைய சுபாவமும் வித்தியாசமாக இருப்பது, சிலசமயம் அவர்கள் குடும்ப வாழ்க்கைக்கும் கை கொடுக்கிறது. a

 உங்களுக்கும் நீங்கள் கல்யாணம் செய்யப்போகும் நபருக்கும் ஒரே மாதிரியான கொள்கைகள் இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அதாவது, மத நம்பிக்கைகள்... ஒழுக்கநெறிகள்... எது சரி எது தப்பு என்று முடிவெடுக்கிற விஷயங்கள்... இவை எல்லாமே ஒத்துப்போக வேண்டும். ஒருவேளை ஒத்துப்போகவில்லை என்றால் அது டேட்டிங்-க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான ரெட் சிக்னல்.

 உதாரணத்துக்கு, வித்தியாசமான மத நம்பிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். ஃபைட்டிங் ஃபார் யுவர் மேரேஜ் என்ற புத்தகம் இப்படி சொல்கிறது: “தம்பதிகளுடைய மத நம்பிக்கைகள் வித்தியாசமாக இருந்தால், அவர்கள் விவாகரத்து செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.”

 பைபிள் ஆலோசனை: ‘விசுவாசம் இல்லாத மற்ற மக்களோடு நீங்களாகவே சென்று சேராதீர்கள்.’—2 கொரிந்தியர் 6:14, ஈஸி டு ரீட் வர்ஷன்.

 முடிவெடுப்பது

 கல்யாணம் செய்கிறவர்களுக்கு “வலியும் வேதனையும்“ வரும் என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:28, தி நியு இங்லிஷ் பைபிள்) அதனால் நீங்கள் டேட்டிங் செய்யும்போதே வலியும் வேதனையும் அனுபவித்தீர்கள் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வருவதால் உங்கள் இருவருக்கும் ‘செட்’ ஆகவே ஆகாது என்று முடிவு கட்டிவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, அந்தப் பிரச்சினையை அமைதியாகப் பேசி சரி செய்ய முடியுமா என்று பாருங்கள். பிரச்சினையை பேசி சரி செய்வது எப்படி என்று இப்போதே கற்றுக்கொண்டீர்கள் என்றால், கல்யாணத்துக்கு பிறகு அது உங்களுக்கு ரொம்பவே கைகொடுக்கும்.

 பைபிள் ஆலோசனை: “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள். ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.”—எபேசியர் 4:32.

 உங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்களாக வெடிக்கிறது என்றால் நீங்கள் இரண்டு பேரும் பொருத்தமான ஜோடி இல்லை என்பதற்கு அது ஒரு அறிகுறியாக இருக்கலாம். கல்யாணம் ஆன பின்பு இதை தெரிந்துகொள்வதை விட இப்போதே தெரிந்துகொள்வது ரொம்ப நல்லது.

உங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்களாக வெடித்தால் நீங்கள் பொருத்தமான ஜோடி இல்லை என்பதற்கு அது ஒரு அறிகுறியாக இருக்கலாம்

 சுருக்கமாக சொன்னால்: நீங்கள் டேட்டிங் செய்யும் நபர் உங்களுக்குப் பொருத்தமானவரா என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் அல்லது நீங்கள் இன்னும் கல்யாணத்துக்கு ரெடி ஆகவில்லை என்று உங்களுக்கு தோன்றினால், அதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!

 பைபிள் ஆலோசனை: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”—நீதிமொழிகள் 22:3.

 ‘பிரேக்-அப்’ செய்ய முடிவெடுத்தால்

 ’பிரேக்-அப்’ செய்தால் உங்கள் மனசு கண்டிப்பாக உடைந்து போகும். ஆனாலும் உங்களுக்கு ‘செட்’ ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் உங்களில் யாராவது ஒருவருக்கு இருந்துகொண்டே இருந்தால் கூட, ‘பிரேக்-அப்’ செய்வதுதான் நல்லது.

 நீங்கள் எப்படி ‘பிரேக்-அப்’ செய்ய வேண்டும்? இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி ஒன்றுசேர்ந்து பேசுவதற்கு ஏற்ற நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு வேறு வழியே இல்லையென்றால் மட்டும்தான் மெசேஜ் செய்தோ, ஃபோன் பண்ணியோ நீங்கள் அதை தெரியப்படுத்த வேண்டும்.

 பைபிள் ஆலோசனை: “நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மை பேச வேண்டும்.”—சகரியா 8:16.

 ‘பிரேக்-அப்’ செய்வதால் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. டேட்டிங் செய்வதே நீங்கள் ஒரு முடிவு எடுக்கத்தான். அதாவது ஒரு நபரை கல்யாணம் பண்ணலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கத்தான். ஒருவேளை உங்களுக்கு ‘பிரேக்-அப்’ ஆனாலும், அதிலிருந்து நீங்கள் நிறைய நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘டேட்டிங் செய்ததில் என்னை பற்றி நான் என்ன தெரிந்துகொண்டேன்? எந்தெந்த விஷயங்களில் நான் முன்னேற வேண்டும் என்று தெரிந்துகொண்டேன்? மறுபடியும் நான் டேட்டிங் செய்தேன் என்றால் என்ன விஷயங்களை செய்ய வேண்டும், என்ன விஷயங்களை செய்யக் கூடாது?’

a ஒரு கணவனையும் மனைவியையும் இந்தப் பிரச்சனைகள் எப்படி பாதிக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகளைப் பாருங்கள்: “குடும்ப ஸ்பெஷல்—கல்யாண வாழ்க்கை கசக்கிறதா?“ மற்றும் “குடும்ப ஸ்பெஷல்—கடுப்பேத்தும் குணங்களை பாசிட்டிவ்வாகப் பாருங்கள்.”