இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
நான் தப்பு செய்தால் என்ன பண்ணுவது?
நீங்கள் என்ன செய்வீர்கள்?
காரினாவுக்கு என்ன நடந்ததென்று வாசித்துப் பாருங்கள், அது உங்களுக்கு நடப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவளுடைய நிலைமையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
காரினா: “ஸ்கூலுக்குப் போகும்போது காரை ரொம்ப வேகமா ஓட்டிட்டுப்போனேன், ஒரு போலீஸ்காரர் காரை ஓரங்கட்டச் சொல்லி, ஃபைன் போட்டு, கையில சீட்ட குடுத்தாரு. அப்ப எனக்குக் கோபம்கோபமா வந்துச்சு. நடந்த விஷயத்த அம்மாகிட்ட சொன்னேன், அத அப்பாகிட்ட போய்ச் சொல்லச் சொன்னாங்க, ஆனா அவர்கிட்ட சொல்ல எனக்குப் பிடிக்கல.”
நீங்கள் என்ன செய்வீர்கள்?
சாய்ஸ் 1: அப்பா அதைக் கண்டுபிடிக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டு வாய் திறக்காமல் இருந்துவிடுவது.
சாய்ஸ் 2: நடந்த எல்லா விஷயத்தையும் அப்படியே சொல்லிவிடுவது
முதல் சாய்ஸ்படி செய்ய உங்கள் மனம் ஒருவேளை உங்களைத் தூண்டலாம். நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லி மன்னிப்புக் கேட்டிருப்பீர்களென உங்கள் அம்மா நினைத்துக்கொண்டிருப்பார் என்றுகூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால், உங்களுடைய தவறுகளை... அது அபராதமாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி, மூடிமறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுவதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன.
உங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ள மூன்று காரணங்கள்
1. அப்படிச் செய்வதுதான் சரியானது. கிறிஸ்தவர்களுக்கான நெறிமுறையை பைபிள் இப்படி விவரிக்கிறது: “நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.
“நான் நேர்மையா இருக்கறதுக்கும், செஞ்ச காரியங்களுக்கு பொறுப்பு ஏத்துக்கறதுக்கும், செஞ்ச தப்ப உடனே ஒத்துக்கறதுக்கும் ரொம்ப முயற்சி செஞ்சிருக்கேன்.”—அலக்ஸெஸ்.
2. தவறை ஒத்துக்கொள்ளும் நபர்களையே மற்றவர்கள் மன்னிக்க விரும்புவார்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது. ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.”—நீதிமொழிகள் 28:13.
“செஞ்ச தப்ப ஒத்துக்கறதுக்கு தைரியம் வேணும், ஆனா அப்படி நீங்க ஒத்துக்கிட்டாதான் மத்தவங்க உங்கமேல நம்பிக்கை வெப்பாங்க. நீங்க நேர்மையானவங்கன்னு புரிஞ்சுப்பாங்க. அப்படி ஒத்துக்கும்போதுதான் ஒரு கெட்ட விஷயத்த நல்ல விஷயமா உங்களால மாத்த முடியும்.”—ரிச்சர்டு.
3. மிக முக்கியமாக, அப்படிச் செய்வது யெகோவா தேவனைப் பிரியப்படுத்தும். “ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார். ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 3:32.
“நான் ஒரு பெரிய தப்பு செஞ்சேன், ஆனா செஞ்ச தப்ப மூடி மறைக்காம வெளிப்படையா ஒத்துக்கணும்னு அதுக்கப்புறம் உணர ஆரம்பிச்சேன். யெகோவாவுக்குப் புடிச்ச மாதிரி நான் நடந்துக்கலைன்னா அவர் நிச்சயமா என்னை ஆசீர்வதிக்க மாட்டார்.”—ரேச்சல்.
காரினா தப்பு பண்ணின பிறகு என்ன செய்தாள்? அபராதச் சீட்டு பற்றி தன் அப்பாவிடம் மூச்சுவிடாமல் இருந்துவிட்டாள். ஆனால், ரொம்ப நாளைக்கு அதை அவளால் மறைக்க முடியவில்லை. “ஒரு வருஷம் கழிச்சு, அப்பா இன்சூரன்ஸ் ரெக்கார்ட்ஸ பார்த்துட்டு இருந்தாரு, அப்போ என் பேர்ல ஒரு அபராதச் சீட்டு இருந்தத கவனிச்சார். அவ்வளவுதான், பெரிய பூகம்பமே வெடிச்சுது. அம்மாவும் என்மேல ரொம்பக் கோபப்பட்டாங்க, அவங்க சொன்ன மாதிரி நான் செய்யலைன்னு!” என்கிறாள் காரினா.
கற்றுக்கொண்ட பாடம்: “செஞ்ச தப்ப மறைக்கறது பிரச்சனைய ஜாஸ்தியாதான் ஆக்கும். அதனோட விளைவ எப்படியும் நீங்க அனுபவிச்சுதான் ஆகணும்!” என்று சொல்கிறாள் காரினா.
உங்களுடைய தவறுகளிலிருந்து எப்படிப் பாடம் கற்றுக்கொள்வது
மனிதர்கள் எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான். (ரோமர் 3:23; 1 யோவான் 1:8) நாம் ஏற்கெனவே பார்த்தபடி, செய்த தவறை ஒத்துக்கொள்வது, அதுவும் உடனடியாக ஒத்துக்கொள்வது, மனத்தாழ்மைக்கும் முதிர்ச்சிக்கும் அடையாளமாக இருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த படி... உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான். ஆனால் வருத்தகரமாக, சில இளைஞர்கள் இதைச் செய்யத் தவறிவிடுகிறார்கள்! ப்ரிஸில்லா என்ற டீனேஜ் பெண் ஒரு காலத்தில் உணர்ந்ததைப் போலவே அந்த இளைஞர்கள் உணரலாம். அவள் இப்படிச் சொல்கிறாள்: “செஞ்ச தப்புகள நெனச்சு என்னை நானே ரொம்ப நொந்துக்குவேன். என்னைக் கண்டா எனக்கே வெறுப்பா இருந்துச்சு, அந்தத் தப்பெல்லாம் என் தலைமேல பாறாங்கல் மாதிரி பாரமா அழுத்திட்டு இருந்துச்சு, என்னால அத தாங்கிக்கவே முடியல. நான் ஒரு தேறாத கேஸ்னு தோனுச்சு.”
சிலசமயம் நீங்களும் இப்படி உணருகிறீர்களா? ‘ஆம்’ என்றால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: கடந்தகால தவறுகளை நினைத்துக்கொண்டே இருப்பது, பின்னால் வரும் வாகனங்களைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுவதுபோல் இருக்கும். கடந்த காலத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்ற உணர்வுதான் மிஞ்சும்; அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குச் சக்தி இல்லாமல் போய்விடும்.
அதனால், செய்த தவறுகளைச் சமநிலையான கண்ணோட்டத்தோடு பார்க்கப் பழகிக்கொள்ளுங்கள்.
“செஞ்ச தப்புகள யோசிச்சுப் பார்த்து அதிலிருந்து பாடம் கத்துக்கங்க, அப்பதான் மறுபடியும் அந்தத் தப்புகள செய்ய மாட்டீங்க. ஆனா, எப்பவும் அந்தத் தப்புகள பத்தியே யோசிச்சுட்டு இருந்தீங்கன்னா, ஒரேயடியா சோர்ந்துதான் போவீங்க.”—எல்லியெட்.
“நான் செய்யற தப்புகள அனுபவப் பாடங்களா நெனைக்கிறேன்; ஒவ்வொரு தப்புல இருந்தும் ஒவ்வொரு பாடம் கத்துக்கிட்டு என்னை நானே திருத்திக்க முயற்சி பண்றேன், அப்படிச் செய்யறது அடுத்த தடவை அதே சூழ்நிலைய வேற விதமா கையாளறதுக்கு உதவி செய்யுது. அப்படிச் செய்யறதுதான் நல்லது, அப்பதான் முதிர்ச்சியுள்ளவரா ஆக முடியும்.”—விரா.