இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
நட்பா, காதலா?—பகுதி 1: எந்த மாதிரி சிக்னல் எனக்கு கிடைக்கிறது?
ஒரு பெண்ணை (அல்லது பையனை) உங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவருக்கும் உங்களை பிடித்திருக்கிறது என்று உங்களுக்கு தோன்றுகிறது. எப்போது பார்த்தாலும் ஒருவருக்கொருவர் மெசேஜ் செய்துகொண்டு இருக்கிறீர்கள். எங்கேயாவது பிக்னிக் போகும்போது அல்லது நண்பர்களோடு சேர்ந்து இருக்கும்போது, எப்போதுமே நீங்கள் இரண்டு பேர் மட்டும் ஒன்றாக இருக்கிறீர்கள். . . . அதுமட்டுமல்ல, அவன் (அல்லது, அவள்) அனுப்புகிற மெசேஜை எல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் வழிகிற மாதிரிதான் இருக்கிறது.
உங்களுடைய உறவுக்கு ஒரு பேர் வைக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் அவரிடமே போய், ”இது காதல்தானே!” என்று கேட்கிறீர்கள். அதற்கு அவர், ”அய்யோ! நான் உங்களோடு ஃப்ரெண்டாக மட்டும்தான் பழகினேன்—வேறு எதுவும் இல்லை” என்று சொல்கிறார்.
அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
“எனக்கு கோபம் கோபமாக வந்தது. அவன்மீதும் கோபமாக இருந்தது, என்மீதும் கோபமாக இருந்தது. ஏனென்றால், நாங்கள் தினமும் மெசேஜ் செய்துகொள்வோம். அவனுக்கு என்மேல் உண்மையிலேயே பாசம் இருந்தது. இப்படியெல்லாம் இருந்தால், கண்டிப்பாக அவன்மேல் காதல் வரும்தானே!”—ஜாஸ்மின்.
“கல்யாணம் செய்துகொள்ள போகிற இரண்டு பேருடன் நானும் அந்த பெண்ணும் அடிக்கடி வெளியே போணோம். சிலசமயம் நாங்கள் இரண்டு பேருமே காதலித்துக்கொண்டு இருந்த மாதிரி எனக்கு தோன்றியது. நாங்கள் நிறைய பேசினோம். நிறைய மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தோம். ஆனால் திடீரென்று, ‘நான் உன்னை ஃப்ரெண்டாகத்தான் பார்க்கிறேன்’ என்று அவள் என்னிடம் சொல்லிவிட்டாள். அதுமட்டுமல்ல, ‘இவ்வளவு நாளாக நான் இன்னொருவரை காதலித்துக்கொண்டு இருந்தேன்’ என்றும் சொன்னாள். அதைக் கேட்டபோது அப்படியே உடைந்து போய்விட்டேன்.”—ரிச்சர்ட்.
“ஒரு பையன் எனக்கு தினமும் மெசேஜ் பண்ணிக்கொண்டே இருந்தான். சிலசமயம் நானும் அவனிடம் ‘வழிகிற’ மாதிரி மெசேஜ் செய்வேன். அவனும் என்னிடம் வழிந்தான். அதனால் ஒரு நாள், ‘எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது. நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று அவனிடம் சொன்னேன். அதற்கு அவன் சிரித்துக்கொண்டே, ‘இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கிற மாதிரி இல்லை!’ என்று சொன்னான். அதை கேட்டு நான் ரொம்ப நேரம் அழுதுகொண்டே இருந்தேன்.”—தமாரா.
மனதில் வைக்க வேண்டியவை: “நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும் இல்லை, அதற்கும் மேல்!” என்று நீங்கள் யாரை பற்றியாவது யோசிக்கலாம். ஆனால், திடீரென்று நீங்கள் மட்டும்தான் அப்படி யோசித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவரலாம். அப்போது உங்களுக்கு கோபமாக இருக்கலாம், அவமானமாக இருக்கலாம், துரோகம் செய்துவிட்டதுபோல்கூட தோன்றலாம். பொதுவாக, இந்த மாதிரி சூழ்நிலைகளில் அப்படித்தான் இருக்கும். ஸ்டீவன் என்ற ஒருவர் இதைப் பற்றி இப்படி சொன்னார்: ”எனக்கு இந்த மாதிரி நடந்தபோது, நான் அப்படியே உடைந்து போய்விட்டேன். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதற்கு பிறகு நான் வேறு யாரையும் நம்புவதற்கே ரொம்ப நாள் ஆனது.”
ஏன் இப்படி நடக்கிறது?
உங்களை காதலிக்காத ஒருவர்மேல் உங்களுக்கு காதல் வருவதற்கு, மெசேஜுகளும் சோஷியல் மீடியாவும் காரணமாக இருக்கலாம். இதை பற்றி சில இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
“சில பேர் ‘டைம் பாஸ்’ செய்வதற்காக நமக்கு மெசேஜ் அனுப்பலாம். அதை பார்த்து அவர்களுக்கு நம்மை பிடித்திருக்கிறது என்று நாம் நினைத்துக்கொள்ளலாம். அதுவே அவர்கள் தினமும் நமக்கு மெசேஜ் பண்ணினால், அவர்களுக்கு நம்மேல் காதல் இருக்கிறது என்று நாம் நினைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.”—ஜெனிஃபர்.
“சிலர் மனதுக்குள் காதலை வைத்துக்கொண்டு பேசலாம். ஆனால், சிலர் அப்படி இல்லை. பேசுவதற்கு யாராவது ஒருவர் வேண்டும் என்பதற்காக பேசிக்கொண்டு இருக்கலாம். ஏனென்றால், அப்படி பேசுவது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.”—ஜேம்ஸ்.
“அட்வர்டைஸ்மென்ட்டுக்காக கால் பண்ணுகிறவர்கள் எப்படி ஃபார்மாலிட்டிக்காக ‘குட் நைட்’ சொல்லுவார்களோ அந்தமாதிரி ஒருவர் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கலாம். ஆனால், அதை படிக்கும்போது அவர் ஏதோ ‘காதலோடு’ அனுப்பின மாதிரி நமக்கு தோன்றலாம்.”—ஹெய்லி.
“ஒரு மெசேஜ் அனுப்பும்போது அதில் ஒரு ‘ஸ்மைலி’ போட்டு அனுப்பினோம் என்றால், அதை பார்க்கிறவர்கள் நாம் சிரிக்கிறோம் என்றும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது நாம் வழிகிறோம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.”—அலிஸியா.
மனதில் வைக்க வேண்டியவை: உங்கள்மேல் காட்டுகிற அக்கறையை காதல் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.
இதை சொல்வது ஈஸி, ஆனால் செய்வது கஷ்டம் என்று நினைக்கிறீர்களா? ஆமாம், உண்மைதான்! “எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது” என்று பைபிளும் சொல்கிறது. (எரேமியா 17:9) நீங்கள் இரண்டு பேருமே காதலிக்கிறீர்கள் என்று உங்கள் இதயம் உங்களை நம்ப வைக்கும். ஆனால், அது கடற்கரையில் கட்டுகிற மணல் கோட்டை மாதிரி. யதார்த்தம் என்ற அலை வந்து மோதும்போது அது ஒன்றும் இல்லாமல் போய்விடும்.
நீங்கள் என்ன செய்யலாம்?
யதார்த்தத்தை பாருங்கள். உங்களுக்கும் அவருக்கும் நடுவில் இருக்கிற உறவை கொஞ்சம் யதார்த்தமாக யோசித்துப்பாருங்கள். உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவர்களைவிட அவர் என்னை வித்தியாசமாக நடத்துகிறார் என்று நம்புவதற்கு உண்மையிலேயே ஏதாவது காரணங்கள் இருக்கிறதா?’ உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து உங்களுடைய “சிந்திக்கும் திறனை” இழந்துவிடாதீர்கள்.—ரோமர் 12:1.
யோசித்துப்பாருங்கள். நீங்கள் அவருக்கு ஃப்ரெண்டைவிட ஒரு படி மேல் என்று நினைப்பதற்கு சில காரணங்கள் இருக்கும். அதேசமயத்தில் நீங்கள் நினைப்பது சரிதானா என்று உங்களுக்கு சில சந்தேகங்களும் இருக்கும். அந்த சந்தேகங்களை பற்றி கொஞ்சம் நன்றாக யோசித்துப்பாருங்கள். உண்மையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அவரை பிடித்திருக்கிறது என்பதற்காக அவரும் உங்களை காதலிப்பார் என்று நீங்களே கற்பனை செய்துகொள்ளாதீர்கள்.
பொறுமையாக இருங்கள். நீங்கள் நேசிக்கிற அந்த நபர் உங்களிடம் வந்து வெளிப்படையாக ‘எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. உன்மேல் எனக்கு காதல் இருக்கிறது’ என்று சொல்கிற வரைக்கும் பொறுமையாக இருங்கள். அதற்கு முன்பாகவே உங்கள் மனதை பறிகொடுத்துவிடாதீர்கள்.
நேர்மையாக இருங்கள். “பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:7) நீங்கள் ஒருவரை நேசித்தால் அவரும் உங்களை நேசிக்கிறாரா என்பதை அவரிடமே பேசி தெரிந்துகொள்ளுங்கள். வெலெரி என்ற பெண் இப்படி சொல்கிறாள்: “நாம் நினைப்பது போல் அவர்களும் நினைக்கவில்லை என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டால் கொஞ்சம் நாளைக்குத்தான் அந்த வலி இருக்கும். ஒருவேளை, நாம் அப்படி கேட்கவில்லை என்றால் நாம் ரொம்ப நாளைக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும்.”
மனதில் வைக்க வேண்டியவை: “உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்” என்று நீதிமொழிகள் 4:23 சொல்கிறது. உங்களுக்கு ஒருவரை பிடித்திருக்கிறது, அவர்மேல் உங்களுக்கு காதல் வந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அவருக்கும் அப்படித்தான் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். அப்படித் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே நீங்கள் அவரை காதலிக்க ஆரம்பித்தால், அது வெறும் பாறையில் செடி வளர்க்க முயற்சி செய்வது போல் இருக்கும்.
ஒருவேளை நீங்கள் நேசிக்கிற அந்த நபருக்கும் உங்களை பிடித்திருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்தால், உங்களுக்கு காதலிக்கிற வயது இருந்தால், அவருடன் இருக்கிற உறவை தொடரலாமா வேண்டாமா என்ற முடிவை எடுங்கள். ஆனால், இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்: பொதுவாக, கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இரண்டு பேருக்குமே ஒரே குறிக்கோள் இருக்க வேண்டும். குறிப்பாக சொன்னால், கடவுளை வணங்குகிற விஷயத்தில் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்கள் இருக்க வேண்டும். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசிக்கொள்ள வேண்டும். (1 கொரிந்தியர் 7:39) உண்மையை சொன்னால், திருமண உறவே ஒரு நல்ல நட்பில் ஆரம்பித்து கடைசி வரைக்கும் அதேமாதிரி இருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 5:18.