இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மற்றவர்களோடு ஒத்துப்போக முடியவில்லை என்றால் என்ன செய்வது?
“மத்தவங்களோட நீங்க ஒத்துப்போகலனா, உங்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டாங்க, வாழ்க்கைய அனுபவிக்க முடியாது, எதிர்காலம்னு ஒண்ணு இருக்கவே இருக்காது. உங்களுக்குனு யாருமே இருக்க மாட்டாங்க; தனிமையிலதான் வாடவேண்டியிருக்கும்.”—கார்ல்.
இவர் ரொம்பவே மிகைப்படுத்தி சொல்வதுபோல் தெரிகிறதா? இருக்கலாம்! ஆனாலும், கார்ல் சொன்ன நிலைமை வந்துவிடக் கூடாது என்பதற்காக சிலர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். நீங்களும் அப்படித்தானா? அப்படியென்றால், சரியானதைச் செய்வதற்கு இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.
மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டும் என்று மக்கள் ஏன் நினைக்கிறார்கள்?
மற்றவர்கள் தங்களை ஒதுக்கிவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். “என்னை விட்டுட்டு சிலர் ஜாலியா வெளிய போய் ஃபோட்டோக்கள எடுத்திருக்காங்க. அத நான் சோஷியல் மீடியாவுல பார்த்தேன். ‘என்கிட்ட என்ன பிரச்சினை, ஏன் என்னை மட்டும் விட்டுட்டு போயிட்டாங்க’னு யோசிச்சேன். அவங்களுக்கு என்னை பிடிக்கலையோனு நினைச்சு நினைச்சு, பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டேன்.”—நட்டாலியா.
சிந்தித்துப்பாருங்கள்: ஒதுக்கப்பட்டதைப் போல் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்போது, மற்றவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதாவது செய்தீர்களா? அப்படியென்றால், என்ன செய்தீர்கள்?
மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்க விரும்புவதில்லை. “நான் செல்ஃபோன் வெச்சிக்குறதுக்கு என்னோட அப்பா அம்மா அனுமதி கொடுக்கல. மத்த பிள்ளைங்க என்கிட்ட ஃபோன் நம்பர் கேட்குறப்போ, ‘என்கிட்ட ஃபோன் இல்ல’னு சொல்லுவேன். அப்போ அவங்க, ‘என்னது! ஃபோன் இல்லயா? உனக்கு என்ன வயசு ஆகுது?’னு கேட்பாங்க. நான் ‘13’னு சொல்றப்போ, அவங்க என்னை பரிதாபமா பார்ப்பாங்க!”—மேரி.
சிந்தித்துப்பாருங்கள்: உங்கள் அப்பா அம்மா போடுகிற எந்தக் கட்டுப்பாடு மற்றவர்களிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
மற்றவர்கள் தங்களை வம்பு இழுக்க அவர்கள் விரும்புவதில்லை. “வித்தியாசமா நடந்துக்கிறவங்கள, வித்தியாசமா பேசுறவங்கள, வித்தியாசமா கடவுள வழிபடுறவங்கள, பள்ளியில இருக்கிற பிள்ளைங்களுக்கு பிடிக்காது. மத்தவங்ககூட நீங்க ஒத்துப்போகலனா, உங்கள வம்பு இழுக்குறதுலயே அவங்க குறியா இருப்பாங்க.”—ஒலிவியா.
சிந்தித்துப்பாருங்கள்: நீங்கள் மற்றவர்களோடு ஒத்துப்போகாததால், அவர்கள் உங்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்களா? அதை எப்படிச் சமாளித்தீர்கள்?
நண்பர்களை இழந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். “நான் யார்கூட இருந்தனோ, அவங்கள மாதிரியே இருக்குறதுக்கு முயற்சி செஞ்சேன். மத்தவங்க மாதிரியே பேச ஆரம்பிச்சேன். உண்மையிலேயே சிரிப்பு வரலைனாலும் அவங்களுக்காக சிரிச்சேன். மனச காயப்படுத்துற மாதிரி அவங்க மத்தவங்கள கிண்டல் பண்ணுவாங்க; அது தப்புனு தெரிஞ்சும் நான் அவங்களோட சேர்ந்துக்குவேன்.”—ரேச்சல்.
சிந்தித்துப்பாருங்கள்: மற்றவர்களுடைய நட்பைச் சம்பாதிப்பதை நீங்கள் எவ்வளவு முக்கியமாக நினைக்கிறீர்கள்? மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டும் என்பதற்காக நீங்கள் பேசும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் மாற்றியிருக்கிறீர்களா?
நீங்கள் எதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்?
மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களைப் போல நடந்துகொண்டால், அவர்களுக்கு உங்களைப் பிடிக்காமல் போய்விடலாம். ஏனென்றால், நீங்கள் வேஷம் போடுவதை மற்றவர்கள் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். “நான் நானா இல்லாதப்போ, என்கூட படிக்கிறவங்களோட ஒத்துப்போறது இன்னும் கஷ்டமாதான் ஆகியிருக்கு. அதனால, நான் நானா இருக்குறதுதான் நல்லதுங்குறத கத்துக்கிட்டேன். நாம நடிச்சோம்னா மத்தவங்க அத டக்குனு கண்டுபிடிச்சிடுவாங்க” என்று 20 வயது பிரையன் சொல்கிறார்.
இப்படிச் செய்வது பிரயோஜனமாக இருக்கும்: நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 1:10) அதனால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நல்ல நெறிமுறைகள பின்பற்றாதவங்களோட ஒத்துப்போறது முக்கியமா, இல்லனா எனக்கு நானே நேர்மையா இருக்குறது முக்கியமா?’
“மத்தவங்க மாதிரி இருக்கணும்னு நினைக்கிறதுல எந்த அர்த்தமும் இல்ல. அப்படி செய்றதுனால மட்டும் மத்தவங்க உங்கள நேசிச்சிட மாட்டாங்க. அது உங்கள ஒரு நல்ல ஆளாவும் மாத்தாது.”—ஜேம்ஸ்.
மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் நீங்களாக இருக்க முடியாது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் முடிவு செய்ய விட்டுவிட்டால், நீங்கள் எப்போதும் “மனிதர்களைப் பிரியப்படுத்துகிற” ஆட்களாக ஆகிவிடுவீர்கள். “மத்தவங்களோட ஒத்துப்போகணுங்குறதுக்காக, எனக்கு கெட்ட பேர் வந்தாலும் பரவாயில்லைனு நினைச்சு, அவங்க இஷ்டப்படியெல்லாம் செஞ்சேன். அவங்க என்னை கட்டுப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. கடைசியில, தலையாட்டி பொம்மை மாதிரி ஆயிட்டேன்” என்று ஜெரமி சொல்கிறார்.
இப்படிச் செய்வது பிரயோஜனமாக இருக்கும்: நல்ல நெறிமுறைகளைத் தெரிந்துகொண்டு அதன்படி வாழுங்கள். இடத்துக்கு ஏற்றபடி மாறும் பச்சோந்தியைப் போல் இருக்காதீர்கள். “பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே நீங்கள் சிலவற்றைச் செய்யாதீர்கள்” என்று பைபிள் சொல்கிறது.—யாத்திராகமம் 23:2, ஈஸி டு ரீட் வர்ஷன் பைபிள்.
“அவங்களுக்கு பிடிச்ச இசை... விளையாட்டு... அவங்க போடுற உடை... அவங்க ரசிக்கிற நிகழ்ச்சிகள்... அவங்க போடுற மேக்கப்... இதையெல்லாம் நான் செய்ய ஆரம்பிச்சேன். அவங்கள மாதிரியே மாற முயற்சி செஞ்சேன். இத அவங்க பார்த்தாங்க. நான் நானா இல்லங்குறத அவங்க கவனிச்சாங்க; எனக்கும் இது தெரிஞ்சிது. எனக்கு எதுலயுமே பிடிப்பில்லாம போயிடுச்சு. தனிமையில வாடுனேன். என்னை பத்தி எனக்கே தெரியல. எனக்கு என்ன பிடிக்கும்... நான் என்ன யோசிக்கிறேன்... இப்படி எதுவுமே தெரியல. எல்லார்கிட்டயும் ஒத்துப்போக முடியாதுங்குறதயும், எல்லாருக்குமே நம்மள பிடிக்க வாய்ப்பில்லங்குறதயும் கத்துக்கிட்டேன். அதுக்காக, நட்ப வளர்த்துக்குறதுக்கு முயற்சியே செய்ய கூடாதுனு அர்த்தம் இல்ல. நல்ல நண்பர்கள கண்டுபிடிக்கிறதுக்கும் உங்கள நீங்களே புரிஞ்சிக்கிறதுக்கும் காலம் எடுக்குங்குறத ஞாபகம் வெச்சிக்கோங்க.”—மெலின்டா.
மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டும் என்று நினைப்பது, நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கும். சொந்தக்காரர் ஒருவருடைய வாழ்க்கையில் இதுதான் நடந்ததாக கிறிஸ் சொல்கிறார். “மத்தவங்ககூட ஒத்துப்போகணுங்குறதுக்காக, பொதுவா அவர் செய்யாத விஷயங்கள எல்லாம் செய்ய ஆரம்பிச்சார். போதை பொருள பயன்படுத்துனார், மத்த கெட்ட பழக்கங்களயும் பழகிட்டார். போதை பொருளுக்கு அவர் அடிமையாவே ஆயிட்டார். கிட்டத்தட்ட அவரோட வாழ்க்கையே நாசமாயிடுச்சு” என்கிறார் கிறிஸ்.
இப்படிச் செய்வது பிரயோஜனமாக இருக்கும்: நல்ல நெறிமுறைகளின்படி வாழாத மக்களோடு பழகுவதை நிறுத்துங்கள். “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 13:20.
“மத்தவங்களோட ஒத்துப்போறதுக்கு முயற்சி செய்றது சிலசமயங்கள்ல நல்லதுதான். அதுக்காக, நல்ல பழக்கங்கள விட்டுக்கொடுத்துட கூடாது. நல்ல நபர்கள் நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படியே உங்கள ஏத்துக்குவாங்க.”—மெலானி.
டிப்ஸ்: நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பதற்காக முயற்சி செய்யும்போது இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் எவற்றில் ஆர்வம் காட்டுகிறீர்களோ, அவற்றில் ஆர்வம் காட்டும் நபர்களை மட்டுமே தேடாதீர்கள். நீங்கள் உயர்வாக நினைக்கும் நெறிமுறைகளை, அதாவது ஆன்மீக, ஒழுக்க, தார்மீக விஷயங்களை, அவர்களும் உயர்வாக நினைக்கிறார்களா என்று பாருங்கள்.