பைபிள் வசனங்களின் விளக்கம்
சங்கீதம் 46:10—“அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்”
“சரணடைந்துவிடுங்கள், நானே கடவுள் என்று தெரிந்துகொள்ளுங்கள். தேசங்களின் மத்தியில் நான் உயர்ந்திருப்பேன். பூமியில் உயர்ந்திருப்பேன்.”—சங்கீதம் 46:10, புதிய உலக மொழிபெயர்ப்பு.
“அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்; வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்; பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன்.”—சங்கீதம் 46:10, பொது மொழிபெயர்ப்பு.
சங்கீதம் 46:10-ன் அர்த்தம்
எல்லாருமே அவரை வணங்க வேண்டும், இந்தப் பூமியை ஆட்சி செய்வதற்கு அவருக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். சொல்லப்போனால் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ விரும்புகிற எல்லாருமே இந்த உண்மையைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.—வெளிப்படுத்துதல் 4:11.
“சரணடைந்துவிடுங்கள், நானே கடவுள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.” இந்த வசனத்தின் முதல் பகுதியை சில பைபிள்கள், ‘அமைதியாக இருந்து’ என்று மொழிபெயர்த்திருக்கின்றன. சர்ச்சில் அமைதியாகவும் பயபக்தியாகவும் இருப்பதைத்தான் இது குறிக்கிறது என்று நிறைய பேர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், “சரணடைந்துவிடுங்கள், நானே கடவுள் என்று தெரிந்துகொள்ளுங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்ட அந்த எபிரெய வார்த்தைகள் எல்லா தேசத்தை சேர்ந்த மக்களுக்கும் யெகோவா a தேவனே கொடுக்கிற எச்சரிக்கை. இதில் அவர் தன்னை எதிர்ப்பதை நிறுத்தச் சொல்கிறார். அதுமட்டுமல்ல அவர் மட்டுமே வணக்கத்தை பெறுவதற்கு தகுதியானவர் என்பதை ஏற்றுக்கொள்ளும்படியும் சொல்கிறார்.
இதுபோன்ற ஒரு எச்சரிப்பு 2-ஆம் சங்கீதத்திலும் இருக்கிறது. அங்கே தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக கடவுள் சொல்லியிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் கடவுளுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் வழிநடத்துதலுக்காகவும் பலத்துக்காகவும் ஞானத்துக்காகவும் அவரையே சார்ந்திருக்கிறார்கள். அவரில் ‘தஞ்சம் அடைகிறவர்கள்’ கஷ்டமான சமயங்களில்கூட சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.—சங்கீதம் 2:9-12.
“தேசங்களின் மத்தியில் நான் உயர்ந்திருப்பேன். பூமியில் உயர்ந்திருப்பேன்.” கடந்த காலத்தில் தன்னுடைய மக்களை பாதுகாப்பதற்காக தன்னுடைய மகா பலத்தை பயன்படுத்திய சமயத்தில் யெகோவா தேவன் உயர்த்தப்பட்டு இருந்தார். (யாத்திராகமம் 15:1-3) எதிர்காலத்தில் இன்னும் பிரமாண்டமான விதத்தில் அவர் உயர்த்தப்பட்டு இருப்பார். எப்போது? இந்த பூமியில் இருக்கிற எல்லோருமே அவருடைய அதிகாரத்துக்கு அடிபணிந்து அவரை வணங்கும்போது!—சங்கீதம் 86:9, 10; ஏசாயா 2:11.
சங்கீதம் 46:10-ன் பின்னணி
இந்த 46-ஆம் சங்கீதம் “தன்னுடைய மக்களை மகா பலத்தோடு பாதுகாப்பவருடைய சக்தியைப் போற்றிப் பாடும் துதிப் பாடல்” என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு சொல்கிறது. யெகோவா தங்களை பாதுகாப்பார், தங்களுக்கு உதவி செய்வார் என்று அவர்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை இந்த சங்கீதத்தைப் பாடும்போது ஜனங்கள் தெரியப்படுத்தினார்கள். (சங்கீதம் 46:1, 2) இந்த வார்த்தைகள் யெகோவா எப்போதுமே தங்களோடு இருப்பார் என்பதையும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தியது.—சங்கீதம் 46:7, 11.
தன்னுடைய மக்களைப் பாதுகாக்க யெகோவாவுக்கு இருக்கிற சக்தியில் தங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்காக அவருடைய பிரமிக்கத்தக்க செயல்களைப் பற்றி யோசித்துப் பார்க்கச் சொல்லி இந்த சங்கீதம் அவர்களை உற்சாகப்படுத்தியது. (சங்கீதம் 46:8) அதிலும் குறிப்பாக அவரால் மட்டும்தான் போர்களுக்கு முடிவு கட்ட முடியும் என்பதை இந்த வசனம் ரொம்ப தெளிவாக சொன்னது. (சங்கீதம் 46:9) சொல்லப்போனால், பைபிள் காலங்களில் எதிரி நாடுகளிடமிருந்து தன்னுடைய மக்களை பாதுகாப்பதன் மூலமாக கடவுள் போர்களுக்கு முடிவுகட்டினார். எதிர்காலத்தில் இன்னும் மிகப்பெரிய அளவில் இதை கடவுள் செய்யப் போவதாக பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. பூமி முழுவதும் சீக்கிரத்தில் அவர் போர்களுக்கு முடிவு கட்டிவிடுவார் என்று அது சொல்கிறது.—ஏசாயா 2:4.
இன்றைக்கும் யெகோவா தன்னை வணங்குகிறவர்களுக்கு உதவி செய்கிறாரா? கண்டிப்பாக! சொல்லப்போனால், உதவிக்காக அவரையே சார்ந்திருக்கச் சொல்லி கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். (எபிரெயர் 13:6) தன்னுடைய மக்களை பாதுகாப்பதற்கு யெகோவாவுக்கு இருக்கிற சக்தியில் நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்தச் சொல்லி சங்கீதம் 46-ல் இருக்கிற வார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. கடவுளை ‘நம் அடைக்கலமாகவும் பலமாகவும்’ பார்ப்பதற்கு இந்த வசனங்கள் நமக்கு உதவி செய்கின்றன.—சங்கீதம் 46:1.
சங்கீதம் புத்தகத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.
a யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.